ஜெப வாழ்க்கை

ஜெபம் கடவுளோடு கொள்ளும் உறவின் ஐக்கியம். ஜெபம் செய்வதின் மூலம் நான் மாற்றம் பெறுகிறேன். எனது ஆள்த்துவத்திலே மறு உருவாக்கத்தை காண்கிறேன். ஜெபம் காணும் கண்களை தரும். இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் நம்பிக்கையை அளிக்கிறது. ஜெபத்திற்கு ஆண்டவரிடத்திலிருந்து பதில் கிடைக்கிறது. நமது வாழ்வின் முன் நிற்கும் தடைகள் யாவையும் அகற்றி போடுகிறது. ஜெபத்தின் மூலம் காட்சி, தரிசனம் பெறுகிறேன். ஜெபத்திலே வல்லமை பெறுகிறேன். கடவுளுடைய நோக்கத்தை, சித்தத்தை செய்யும் பாக்யத்தை உணருகிறேன். ஜெபத்திலே என்னை நான் யார் என்ற அடையாளத்தை கண்டுகொள்கிறேன். யாராக மாற வேண்டுமென்ற உயர்ந்த அனுபவத்தை பெறுகிறேன். பரிசுத்த ஆவியானவர் பெலத்தோடு அத்தகைய வாழ்வுக்கு வழி நடத்தப்படுகிறேன். கடவுளை தொடர்ந்துதேடும் அனுபவத்தை சந்தோஷத்தை தருகிறது. தனி வாழ்விலும் குடும்ப வாழ்விலும் சமுதாய வாழ்விலும் உறவின் ஆரோக்கியத்தை அளிக்கிறது. ஜெபமே ஜீவன்.

மறு உருவாக்குதல் வேண்டி ஜெபித்தல் 

தேவனே சுத்த இருதயத்தை என்னிலே சிருஷ்டியும், நிலைவரமான ஆவியை என் உள்ளத்திலே புதுப்பியும். சங்கீதம் 51: 10.

ஜெபம் ஆவிக்குரிய ஒன்று. மனிதக்கூறுகளில் ஒன்றான ஆவி கடவுளோடு உறவு கொள்ள ஏற்படுத்தப்பட்ட ஒன்று. ஆவிக்குரிய நிலை பாடுகளை பத்திரப்படுத்தி பாதுகாக்க ஜெபம் அவசியம். இதயமே முக்கிய நிலைப்பாடு. இந்த இதயமே பலவிதமானதிருக்கும் கடினமுமாய் மாறிப் போய்விட்டது. இந்நிலையை கசந்து கொண்டு புதிய இதயம் வேண்டி நிற்பதே ஜெபம். கறைப்பட்டுப்போன, வடுக்கள் ஏற்ற , களங்கப்பட்ட எனது இதயம் மாற்றம் பெற்றுத்தான் ஆக வேண்டும். புதிய இதயம் தாரும் ஆண்டவரே என்ற சங்கீதக்காரன் ஜெபத்தை ஏறெடுக்கவேண்டும். இதயத்தை எங்கோ பறி கொடுத்ததால் தீமை என்னை ஆட்கொண்டது. எனக்கு புதுமை தேவை என மன்றாடி ஜெபிக்க வேண்டும். இருளாய்ப்போன எனது பாழ் இதயத்தை பாருங்க ஆண்டவரே என கதறி ஜெபித்தல் அவசியம். கடவுளோடு கொண்டுள்ள உறவை புதுப்பிக்க புதிய ஆவியை தாரும் ஆண்டவரே என கேட்டு புதிதான ஆவியை பெற்றுக்கொள்ள வேண்டும். வேறு இச்சையின் வழி கூறும் ஆவிகள் எனது தொடர்பை சின்னா பின்னாமாக்கி விட்டன. எனது இதயத்தை கரைப்படுத்தி நான் கொள்ளவிருக்கும் கடவுள் தொடர்பையும் இவை வேரறுத்து விட்டன. எனக்கு புதிய ஆவியைத் தாரும். கரைப்பட்டுப்போன என்னை சுத்திகரிக்கும் இந்த ஏக்கத்தை எனக்குள் வைத்திருக்கும் பரிசுத்த” ஆவியை என்னுள் நிலைவரப்படுத்தும் என சங்கீதக்காரனோடு ஜெபிப்போம். எடுத்துக்கொள்ளாதேயும் என கதறுவோம். கடவுளுக்கும் எனக்கும் உள்ள தூரத்தை இப்போது உணர முடிகிறது. அவரது சமூகம் எனக்கு பக்கத்திலிருந்த நாட்களை அறிவேன். முன்னே அவ்வாசற்படியில் கிடந்த நாட்களுண்டு. ஜனங்களோடு அவர் சமூகத்திற்கு போய் வந்திருந்தேனே அதை நான் நினைக்கும் போது என் உள்ளம் எனக்குள் குமுறுகிறது. இந்த நிலையை உணர்ந்து புதிய இதயம், புதிய ஆவி, புதிய உறவு எனக்கு தேவை, தாரும் ஆண்டவரே, இதை நிலைப்படுத்தி நிரந்தரப்படுத்தும் கர்த்தாவே, என ஜெபிப்பதின் மூலம் நமது ஆவிக்குரிய நிலைப்பாடுகளை ஒன்றுப் படுத்துகிறார். அவர் சமூகம் தந்து நம்மை இந்த ஒருமைப்பாட்டுக்குள்ளாக்குகிறார். இந்த மறு உருவாக்கம் திரும்பவும் இரட்சிப்பின் சந்தோஷத்தை எனக்குள் தரும். என் சித்தத்தை ஆட்கொள்ளும் அதன் மூலம் கீழ்ப்படிவேன்“ இப்போது நான் சாட்சி கூறும் நபராக மாறுகிறேன். எனது இந்த மறு உருவாக்கம் எனது ஆவிக்குரிய நிலைபாடுகளான என் இதயம், என் மனம், என் ஆவி இவற்றில் தாக்கம் கொடுத்திருக்கின்றது. ஆமென் சுத்தமானேன்.

நம்பிக்கையுடன் கூடிய ஜெபம் 

மேலும், நீங்கள் விசுவாசமுள்ளவர்களாய் ஜெபத்திலே எவைகளைக் கேட்பீர்களோ அவைகளையெல்லாம் பெறுவீர்கள் என்றார். மத்தேயு 21 : 22 கர்த்தர் என் விண்ணப்பத்தைக் கேட்டார் கர்த்தர் என் ஜெபத்தை ஏற்றுக்கொள்வார். சங்கீதம் 6 : 9.

நம்பி நம்பினதை காணும் கண்களை உடைய ஜெபமே நம்பிக்கையுடன் கூடிய ஜெபம். சொன்னதை திரும்ப திரும்ப சொல்வது ஜெபம் அல்ல. வார்த்தைகளின் மிகுதி அல்ல. நம்பிக்கை நல் நம்பிக்கை கண்டதனால் அல்ல. காணாததை நம்பி பெற்றுக் கொள்வேன் என்ற அறித்கையின் அடிப்படையில் அனுபவமாவது ஜெபம். முன்னால் தெரியும் படத்தை, எழுத்தை, அடையாளத்தை பொருளை விடாது பார்த்து அயராது முயற்சிக்கும் வீண் உழைப்பு அல்ல ஜெபம். மாறி மாறி வரும் தத்துவங்களை தழுவி நிற்பதும் ஜெபம் அல்ல. கிறிஸ்தவம் ஒரு தத்துவம் அல்ல. இது ஒரு நபர்த்துவம். அவரது நாமம் இயேசுகிறிஸ்து. ஆதியாகமத்திலிருந்து வெளிப்படுத்தல் வரை மத்திய நபரே இந்த இயேசுகிறிஸ்து. இயேசுகிறிஸ்துவின் நாமத்திலே ஜெபிக்கவேண்டும். கேளுங்கள் கொடுக்கப்படும் என்று ஜெபத்துக்கு தூண்டுதல் கொடுத்தவரும் அவரே. தேடுங்கள் கண்டடைவீர்கள் என்று பார்த்தடையும் ஆற்றலை கொடுத்தவரும் அவரே. தட்டுங்கள் திறக்கப்படும் என தொடர்ந்து தட்டிக்கொண்டே இருக்கும் காத்திருப்பின் தன்மையை அறிமுகப்படுத்தினவரும் அவரே. அவரின் நாமத்திலே கேட்டுக்கொள்ளும் போது திறந்தளிப்பவரும் அவரே. இயேசுகிறிஸ்து தம்மை நோக்கிக் கூப்பிடுகிறவர்களுடைய விஷயத்திலே பதில் அளிக்கிறவராய் இருக்கிறார். கண்ணோக்கிப் பார்க்கிறவராயிருக்கிறார். செவி சாய்க்கிறார். மனம் இரங்குகிறார். உதவி வரும் கன்மலை அவரே அவரது நேரத்திலே பதிலும் தருவார். ஜெபத்துக்கு பதில் தாமதமானாலும், ஜெபம் மறுக்கப்படவில்லை. அவர் சமீபமாயிருக்கிறார். தகப்பன் தன்பிள்ளைகளுக்கு இரங்குவது போல இரங்குவார். பலனை காணும்
கண்கொண்டு நம்பிக்கையுடன் அவரது நாமத்திலே ஜெபிப்போம்.

கேட்கப்படும் ஜெபம்

நீதிமான்களின் ஜெபத்தையோ கேட்கிறார் நீதிமொழிகள் 15:29 நாம் எதையாகிலும் அவருடைய சித்தத்தின்படி கேட்டால், அவர் நமக்குச் செவிகொடுக்கிறாரென்பதே அவரைப்பற்றி நாம் கொண்டிருக்கிற தைரியம். நாம் எதைக் கேட்டாலும், அவர் நமக்குச் செவி கொடுக்கிறாரென்று நாம் அறிந்திருந்தோமானால், அவரிடத்தில் நாம் கேட்டவைகளைப் பெற்றுக்கொண்டோமென்றும் அறிதிருக்கிறோம். 1 யோவான் 5.:14-15

ஆண்டவர் ஜெபிக்கிறவர்களை அறிவார். அவர்களுடைய எண்ணங்களை தெரிந்து வைத்திருக்கிறார். தீமையுள்ளவர்களை அறிவார். தீமையை வெறுக்கிறவர்களை அறிந்து கொள்பவர். தீமையை வெறுப்பதே கர்த்தருக்குப் பயப்படுகிற பயம். தீய நோக்கம் பாவமே. என்னுள்ளத்தில் தீமை கொண்டிருப்பேனென்றால் அவர் என் ஜெபத்தை கேளார். கடவுளுடைய பக்கம் நின்று நீதிசெய்கிறவரின் ஜெபத்தை அவர் கேட்பார். அவருடைய சித்தத்தின்படி கேட்கிற ஜெபங்களுக்கு பதில் உண்டு. அவையே கேட்கப்படும் ஜெபம். கடவுளுடையு சமூகத்தை விசுவாசத்தோடு கிட்டி சேருகிறவர்களுடைய ஜெபம் அவருக்கு பிரியமானது. நிச்சயத்தோடு கேட்கிற ஜெபத்துக்கு அவர் செவிசாய்க்கிறார். எந்த சமயத்திலும் அவரிடத்தில் தெரியப்படுத்தும் ஜெபங்கள் கேட்கப்படுகின்றன. உங்கள் வேண்டுதல்கள் கேட்கப்பட்டன என வேத வசனங்களை உறுதியாகக் கொண்டு நம்பிக்கை கொள்ளுங்கள் . இதுவே உண்மை என அறிந்திருக்க வேண்டும். நாம் இன்னது ஜெபிக்கவேண்டுமென்று சொல்லித்தருகிறவரும் அவரே பெருமூச்சுகளோடு ஜெபிக்கிற ஜெபம் கேட்கப்படும். ஜெபம் ஒரு கடின உழைப்பு. கடின உழைப்புக்கு பலன் உண்டு. தேவன் தம்மை பரியாசம் பண்ணவொட்டார். தேவன் தம்மிடத்தில் சேருகிறவர்களை அறிவார். இடைவிடாமல் விடாப்பிடியாய் உறுதியாய் ஜெபியுங்கள். சுவிசேஷத்துக்காக கஷ்ட நஷ்டபடுகிறவர்களுக்காக ஜெபிக்கிற ஜெபம் கேட்கப்படும் சுயநலமில்லாத ஜெபம் அவரது சமூகத்தில் சேரும். சோர்படையாத ஜெபம் அவருக்குப் பிரியம். ஜெபித்து, ஜெபித்து பெலனை காணவில்லையே என்ற அங்கலாய்ப்பை நிறுத்தி, நிச்சயம் அவர் பெலனளிப்பார். என உறுதியோடு செய்யப்படும் ஜெபம் கேட்கப்படும். தம்மை நோக்கி, உண்மையாய் தம்மை நோக்கி கூப்பிடுகிறவர்களுடைய விஷயத்திலே அவர் சமீபமாயிருக்கிறார். அவரை கண்டடையத்தக்கச் சமயத்தில் அவரைத் தேடுங்கள். ஜெபியுங்கள் ஜெயம் பெறுங்கள். ஆமென். உங்களுடனே கூட அவர்களும் நித்திய ஜீவனாகிய கிருபையைச் சுதந்தரித்துக் கொள்ளுகிறவர்களானபடியினால், அவர்களுக்குச் செய்யவேண்டிய கனத்தைச் செய்யுங்கள் 1பேதுரு 3:7 ஜெபிப்பதில் நடத்தை சார்ந்திருக்கிறது. எப்படியும் வாழ்வேன் நானும் ஜெபிப்பேன் என்பதல்ல ஜெப வாழ்வு. நாம் ஜெபிக்கிற ஆண்டவர் நடத்தை உள்ளவர். அவர் பரிசுத்தர் நீங்களும் நடக்கை உள்ளவர்களாக இருக்க விரும்புகிறவர். ஜெபம் ஒரு தெய்வீக உறவு பரிசுத்த உறவு- விபரீதமான நடத்தைகள் இதற்கு தடை, தடை யாவும் அகற்றி ஜெபியுங்கள். புருஷர்களே மனைவியோடு வாழுங்கள் ஏதோ திருமண வாழ்வில் சிக்கிக்கொண்டேன் இதில் இருந்து விடுபட திருச்சபை அனுமதிக்காது என்ற கசப்போடு வாழ்வை தள்ளி கொண்டே வாழ வேண்டாம், வாழப்பழகுங்கள். ஒருவரை ஒருவர் புரிந்து வாழுங்கள். என்னை புரிந்து கொள்ளவில்லையே நான் சொல்வது நடக்கவில்லையே என மனபேதங்களோடு வாழும் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்து இணைந்து வாழ ஆரம்பியுங்கள். பெலவீனமான துணைவிக்கு துணை செய்து வாழுங்கள். பெலவீனரை தாங்குங்கள் பெலவீனத்தை வைத்து ஆட்டுவிக்காதீர்கள். ஆக்குவியுங்கள். நம் ஆண்டவர் நமது பெலவீனத்தை வைத்து தீர்ப்பு சொல்வாரென்றால் யார் நிலை நிற்கக்கூடும் உடன் துணைவியரை துணையாளரை உயர்த்தி கூறுங்கள். குறையுள்ள பகுதியை கோடிட்டு காட்டாமல் நிறையுள்ள பகுதிகளை மிகைப்படுத்தி கூறுங்கள். மரியாதை செலுத்துங்கள். அவமரியாதை செய்து இடைவெளியை பெரிதாக்காதிருங்கள் இணையும் வாய்ப்பை கெடுக்கும் நீண்ட இடைவெளி, பேசாமை, மனதளவில் தூரத்தில் வைத்து நடத்துதல் இப்படிப்பட்ட சில்லறைத்தனங்களுக்கு விலகி வாழுங்கள் நீங்கள் இத்தடைகளை நீக்கி அவர்களும் நீங்களும் வாழ்வில் ஒன்றாகவே கடவுளுடைய வரங்களை பெற்றிருக்கிறோமென்ற உறுதிப்பாட்டில் சமசீரோடு வாழுங்கள் . இப்படி வாழாவிட்டால் இவையெல்லாம் உங்களுடைய ஜெப வாழ்வில் தடையாக நிற்கும். ஜெபித்து ஜெபித்து பார்த்து பலனில்லையே என கூறும் நீங்கள் இத்தடைகள் உங்கள் வாழ்வில் இருக்குமென்றால் அகற்றி ஜெபிக்க ஆரம்பியுங்கள். ஜெபம் ஆரோக்கியமாகும்.

மும்முறை ஜெபம் காலை மாலை இரவு

அவர் அதிகாலையில், இருட்டோடே எழுந்து புறப்பட்டு, வனாந்தரமான ஒரிடத்திற்குப்போய், அங்கே ஜெபம்பண்ணினார். மாற்கு 1: 35

அவர் ஜனங்களை அனுப்பிவிட்டபின்பு, ஜெபம்பண்ணும்படி ஒரு மலையின் மேல் ஏறினார். மாற்கு 6 : 46
அவர் ஜெபம்பண்ணும்படி ஒரு மலையின்மேல் ஏறி, இராமுழுவதும் தேவனை நோக்கி ஜெபம்பண்ணிக்கொண்டிருந்தார். லூக்கா 6 : 12
காலை துவக்கம் மிக முக்கியம். ஜெபத்துடன் காலையை துவங்குங்கள். அதிகாலை ஜெபநேரம் ஆண்டவருக்குப் பிரியம். அதிகாலையில் இருட்டோடே காலை துவங்குமுன் நம் நேசர் ஜெபித்தார். விடியுமுன் விழித்துவிட்டார். நம்மில் எத்தனைபேர் இந்த பழக்கம் கொண்டுள்ளோம்? இன்னும் கொஞ்சம் தூங்கட்டும் என்றிருப்பதோடு இளைய தலைமுறையை இன்னும் கொஞ்சம் உறங்கட்டும் என வழி விடுகிறோமா? முந்தி படுத்து முந்தி எழும்புவது சரிதானா? பிந்தி படுத்து பிந்தி எழும்புவதை நியாயப்படுத்துகிறோமா? இந்த மாற்றம் எதனால் வந்தது? ஆராய்ந்து பார்த்து நலமானதை பிடித்துக் கொள்ளுங்கள். காலை தோறும் அவர் கிருபை புதியதென்பதை பிந்தி சொல்வதற்கல்ல. காலை தோறும் என்னை எழுப்புகிறார் என்பதை காலையிலே சொல்லவேண்டும் கல்விமான் நாவை தருகிராரென்பதை ஜெபத் தொனியோடு கலந்து கூறவேண்டும். காலை ஜெப நேரம் கலைந்து போகவிடக்கூடாது, பிந்தி போடக்கூடாது. மாலை ஜெபம் முக்கியப்படுத்தப்படவேண்டும். காலையும் மாலையும் மாறாதவரை ஸ்தோத்தரிக்கும் நேரம் அது. பகலெல்லாம் மக்கள் கூட்டத்தில் நேரம் செலவழித்து விட்டு மாலை கடவுளோடு தனி ஜெப நேரம் எடுக்கவேண்டும். ஆண்டவர் மக்களை அனுப்பிவிட்டு ஜெப நேரத்துக்கு தன்னை தனிமைப்படுத்துகிறார். நாம் நமது மாலை நேரத்தை எப்படி பயன்படுத்துகிறோம். பகலும் இரவும் சந்திக்கும் அந்த சந்தியா வேளை எங்கிருக்கிறோம்? சந்திகளிலா? நண்பர்கள் கூட்டத்திலா? பொழுது போக்குக் கூடாரங்களிலா? அந்தி சந்தி நேரமெல்லம் அவருக்குக் கொடுப்போம் மாற்கு சுவிசேஷத்திலே ஆறாவது அதிகாரத்திலே பன்னிரெண்டாவது வசனத்தின்படி இயேசுகிறிஸ்து இரவு வேளை ஜெபத்தில் செலவழிப்பதை வாசிக்கிறோம். காலை மாலை இரவு மும்முறை ஜெப நேரத்தைஒழுங்குப் படுத்தலாமா நாட்களை கூட்டித்தருபவரிடத்தில் முகம் பதித்து நன்றி சொல்லி ஜெபித்து செயல்படலாமா? காலத்தை பிரயோஜனப்படுத்த இதுவே வழி, நேசரின் வழி, சத்தியத்தின் வழி, முழங்காலின் வழி.

குழு ஜெபம் குடும்ப ஜெபம் 

அல்லாமலும் உங்களில் இரண்டுபேர் தாங்கள் வேண்டிக்கொள்ளப்போகிற எந்தக் காரியத்தைக் குறித்தாகிலும் பூமியிலேஒருமனப்பட்டிருந்தால், பரலோகத்தில் இருக்கிற என் பிதாவினால் அது அவர்களுக்கு உண்டாகும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். மத்தேயு 18 : 19

அங்கே இவர்களெல்லாரும், ஸ்திரீகளோடும் இயேசுவின் தாயாகிய மரியாளோடும், அவருடைய சகோதரரோடுங்கூட ஒருமனப்பட்டு, ஜெபத்திலும் வேண்டுதலிலும் தரித்திருந்தார்கள். அப்போஸ்தலர் 1 : 14

குடும்பம் ஆண்டவர் தந்த முதல் ஜெபக்குழு. குடும்ப ஜெபம் இல்லாத வீடு கூரையில்லாத வீடு என முன்னாள் பேராயர் ஜெபராஜ் ஐயா சொல்லி சென்றுள்ளார். காலையிலே ஐந்து மணிக்கெல்லாம் ஜெபம், ஜெபம் என சத்தம் கேட்டு அறைகளிலிருந்து வெளி வந்து கதவோரங்களில் தூக்கக்கலக்கத்தோடு பெற்றோரின் கீர்த்தனை பாடல்களை கேட்டவாரே ஒண்டி கிடக்கும் காலங்கள் நம்நினைவில் உண்டல்லவா? எங்கே போயிற்று அந்த ஜெப கலாச்சாரம்? படுக்கையை மடி, பைபிளை எடு, பாட்டு புத்தகத்தை கொண்டா என்ற சப்தங்கள் எங்கே? நின்று நிதானிப்போம். காலங்கள் மாறி விட்டதா? நாம் மாறிவிட்டோமா? முப்பது விழுக்காடு மக்கள் தான் பெற்றோர் விசுவாச பண்பாட்டை பின் பற்றுகிறார்கள். குடும்ப குறிப்புகளோடு ஜெபியுங்கள். குடும்பமாக ஜெபியுங்கள். இது இயேசுவின் குடும்பம் என்பதற்கு குடும்ப ஜெபமே சாட்சி இரண்டு அல்லது மூன்று பேர் கூடும் இடம் அது. ஜெபத்துக்காக கருத்தொற்றுமை கொண்டு அவர் நாமத்தில் கூடினால் போதும், கஷ்டம் தான், கஷ்டங்கள் நடுவில் பிரயாசப்படுவோம். குடும்பத்தில் அவர் உண்டு. இப்பழக்கத்தை வீட்டிலே கொண்டு பின்பு வெளியிலே குழுவாக ஜெபிக்க செல்லுங்கள். அங்கே நாட்குறிப்பிட்டு கூடுங்கள். நாட்டு நடப்பு கூறி ஜெபியுங்கள். கூடி ஜெபியுங்கள். கூட்டு ஜெபம் வல்லமை தரும் கூடி ஜெபித்து வல்லமை பெற்று பரிசுத்த ஆவியாலே நிறைந்து சுவிசேஷ ஊழியத்துக்கு செல்லுங்கள். ஒரே இடத்திலே நின்று போவதல்ல ஆண்டவருடைய வல்லமையோடு அவர் குறிப்பிட்ட இடத்திற்கெல்லாம் செல்லுங்கள். ஜெபக் குழுக்கள் சுவிசேஷ குழுக்களாக மாறட்டும். இதுவே ஜெப நோக்கம். ஒருவர் குற்றத்தை ஒருவர் அறிக்கையிடுங்கள். ஆரோக்கியம் பெற்றுக்கொள்ளுங்கள். ஆரோக்கியம் அளியுங்கள். ஜெபக் கூட்டத்தின் தொடர் வெற்றி பிறரை ஆதாயப்படுத்தி ஆரோக்கியப்படுத்துவதே குடும்ப ஜெபம். குழு ஜெபங்கள் ஊரெங்கிலும் துவங்குங்கள். கர்த்தர் வருகிறார் ஆமென்.

Author Bro. C. Jebaraj



Topics: Bible Articles Kirusthava Vazhlu 2021 Bro. C. Jebaraj

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download