முக்கியக் கருத்து
- கர்த்தர் இஸ்ரவேல் குடும்பத்திற்கு செய்த அதிசயங்கள் மூலம் முழு உலகத்திற்கும் இரட்சிப்பைக் கட்டளையிட்டார்.
- பூமி முழுவதும், சிருஷ்டிப்பு யாவும் அவரை துதிக்கும்.
- பூமியை நிதானமாய் நியாயந்தீர்க்க அவர் வருகிறார்.
1. இஸ்ரவேல் குடும்பம் மூலம் கர்த்தரின் இரட்சிப்பு (வச.1-3)
கர்த்தர் ஆபிரகாமுக்குக் கொடுத்த வாக்குக்கொடுத்ததினிமித்தம் (ஆதி.12:3) இஸ்ரவேல் குடும்பத்திற்கு அதிசயங்களைச் செய்து இரட்சிப்பைக் கட்டளையிட்டார். எகிப்தின் பார்வோன் கையினின்று அற்புதமாய் விடுவித்தார் (வச.3) வனாந்திரத்தில் ஆச்சரியமாய் நடத்தினார். கானான் தேசத்தை சுதந்தரிக்க பல கொடிய ஜாதிகளை இஸ்ரவேல் புத்திரரின் கையில் கொடுத்தார். இவ்விதமாக தமது தெரிந்து கொண்ட ஜாதியாக இஸ்ரவேலருக்கு இரட்சிப்பைக் கட்டளையிட்டு எல்லா ஜாதிகளுக்கு முன்பாக தமது நீதியை விளங்கப்பண்ணினார் (வச.2). மேலும், இந்த இஸ்ரவேல் குடும்பத்தின் மூலம் உலகத்தின் எல்லா ஜாதிகளும் இரட்சிப்பைக் காணும்படி செய்தார்.
எப்படி? இஸ்ரவேல் ஜனத்தின் மத்தியில் இரட்சகர் இயேசு பிறந்து, அவர் பூமியின் எல்லா ஜனத்திற்கும் இரட்சிப்பு அருளும் தேவ ஆட்டுக்குட்டியாக பலியானார். கலாத்தியர் 3:15,14
ஆகவே, கர்த்தருக்கு புதுப்பாட்டைப் பாடி துதி செலுத்த வேண்டும் (வச.1).
2. பூமியின் குடிகளுக்கு ஆனந்தம் (வச.4-8)
இவ்விதமாக கர்த்தர் பூமியின் எல்லையெங்கும் தமது இரட்சிப்பின் செயலை விளங்கச் செய்திருக்கிறபடியால், பூமியின் குடிகளெல்லாம் கெம்பீரித்து ஆனந்த சத்தமிட்டு மகிழ்ச்சியால் நிறைந்து பலவித வாத்தியக் கருவிகளை இசைத்து இரட்சகராம் தேவனைத் துதித்து கீர்த்தனம்பண்ணவேண்டும்.
பூமியிலுள்ள பர்வதங்களும் ஆறுகளும்கூட ஏகமாய் கெம்பீரித்துப் பாடும். ஏசாயா 55:12,13
3. பூமியை நிதானமாய் நியாயந்தீர்க்க வருகிறார் (வச.9)
கர்த்தர் பூமியின் குடிகளை இரட்சிக்க, இரட்சகராக வெளிப்பட்டார். பூமி பூரிப்பாகி சந்தோஷித்து, கர்த்தருடைய இரட்சிப்பை ஏற்றுக்கொண்டவர்கள், இரட்சிப்பை ஏற்றுக்கொள்ளாதவர்கள் இவ்விருதிறத்தாருக்கும் தக்க பிரதிபலனை அளிக்கும்படியாக நீதியான நியாயாதிபதியாக பூலோகத்தை நியாயந்தீர்க்க கர்த்தர் இரண்டாம் முறையாக பூமிக்கு இறங்கி வருவார் என்ற சத்தியத்தை இந்த சங்கீதம் மீண்டும் தொனித்து முடிக்கிறது. ரோமர் 14:10, 2 கொரி.5:10.
Author: Rev. Dr. R. Samuel