முக்கியக் கருத்து
- தாவீதின் தாழ்மையான ஜெபம்.
- தேவனின் ஜெபம் கேட்கும் கரிசனை.
- உபத்திரவத்திலும் தேவனுடைய வழியை நாடுதல்.
- இந்த தாவீதின் தாழ்மையான ஜெபத்தில், தாழ்மை, உபத்திரவம், வறுமை இவற்றினின்று தாங்கமுடியாத துயரத்தில் ஏறெடுக்கும் தம்முடைய மக்களின் ஜெபத்திற்கு பதிலளிக்க தேவன் கரிசனையுடையவராயிருக்கிறார் என்ற சத்தியம் பிரதிபலிக்கிறது.
- மேலும், தனது கஷ்டம், சோதனை மத்தியிலும் மனப்பூர்வமாக தேவனுடைய வழிகளை கற்றுக்கொண்டு அவற்றில் நடக்கும் விண்ணப்பமும் உள்ளதை நாம் கண்டு அதை கடைபிடிக்க உணர்த்தப்படுகிறோம்.
- ஒரு மெய் விசுவாசியின் ஜெபத்தில் காணப்படவேண்டிய ஏழு முக்கிய அம்சங்களை இந்த சங்கீதத்தில் நாம் தியானித்து கற்றுக்கொள்ளலாம்.
1. (வச.1) நம்மை தேவ சமூகத்தில் தாழ்த்தி ஜெபிக்கவேண்டும்.
"... நான் சிறுமையும் எளிமையுமானவன்' (வச.1) என்று தாவீது தன்னை தாழ்த்துவதைப் பார்க்கிறோம்.
2 நாளா.7:14,15; யாக்கோபு 4:10.
2. (வச.2) தேவ சமூகத்தில் நாம் ஜெபிக்க பிரவேசிக்கும்போது நம்மை சுத்திகரித்துக் கொள்ளவேண்டும். தேவனோடு ஒப்புரவாகி ஜெபிக்கும்போது, தேவனோடு நமது ஐக்கியம் பலப்படுவதால் ஜெபம் கேட்கப்படும்.
சங்கீதம் 66:18, ஏசாயா 1:15,16 மத்தேயு 5:8 எபிரெயர் 12:14
3. (வச.3,4) இடைவிடாமல் நம் ஆத்துமாவை உயர்த்தி ஜெபிக்கவேண்டும்.
நம் உதட்டளவில் அல்ல, இருதயத்தை ஆண்டவரிடம் உயர்த்தி ஒரு மனதுடன் ஜெபிக்கவேண்டும். ஜெப நேரத்தில் வீண் சிந்தனைகளுக்கு இடம் கொடுக்கக்கூடாது. மத்தேயு 6:6, 1 தெசலோனிக்கேயர் 5:17,18.
4. (வச.5,6,7) விசுவாசத்துடன் ஜெபிக்கவேண்டும்.
"நான் துயரப்படுகிற நாளில் ... நீர் என்னை கேட்டருளுவீர்' (வச.7) என்ற விசுவாசத்தில் தாவீது ஜெபிக்கிறான், நமது துன்ப நேரத்தில் சோர்ந்து போகாமல், பதறாமல் அவிசுவாசத்திற்கு இடங்கொடாமல், தேவனுடைய கிருபை, மன்னிக்கும் தன்மை இவற்றை விசுவாசித்து ஜெபிக்கவேண்டும்.
"... பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா ... நன்மையானவைகளைக் கொடுப்பது அதிக நிச்சயம் அல்லவா?' மத்தேயு 7:11
என்று நம் ஆண்டவராகிய இயேசு உறுதியாய் சொல்லியிருக்கிறார் அல்லவா!
5. (வச.8,9,10,12,13) தேவனை துதித்து, நன்றி செலுததி ஜெபிக்கவேண்டும்.
"தேவரீர் மகத்துவமுள்ளவரும் அதிசயங்களைச் செய்கிறவருமாயிருக்கிறீர்;...' (வச.10) என்று தேவனை புகழ்ந்து, மகிமைப்படுத்தி, துதித்து தாவீது ஜெபிக்கிறான்.
அதுமாத்திரமல்லாது, "நீர் எனக்குப் பாராட்டின உமது கிருபை பெரியது; என் ஆத்துமாவைத் தாழ்ந்த பாதாளத்திற்குத் தப்புவித்தீர்' (வச.13) என்று தேவன் செய்த மகா பெரிய உதவிக்கு நன்றி செலுத்துவதை வாசிக்கிறோம். நாம் ஜெபிக்கும்போது, தேவன் எப்படிப்பட்ட மகத்துவமுள்ளவர் என்பதற்காக அவரை துதித்து, அவர் செய்த நன்மைகளுக்காக நன்றி, ஸ்தோத்திரம் செலுத்தி ஜெபிக்கவேண்டும். கர்த்தரைத் தொழுது ஆராதித்தல் அவரை அணுகி நெருங்கும்போது நாம் செய்யவேண்டிய மிக முக்கியமான செயல்.
"துதித்தலுடனே அவர் சந்நிதிக்கு முன்பாக வந்து,...' என்று சங்கீதம் 95:2 வசனத்தில் சங்கீதக்காரன் கூறுகிறார்.
"உங்கள் விண்ணபங்களை ஸ்தோத்திரத்துடனே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள்' என்று பவுலும் (பிலிப்பியர் 4:6) இல் கூறுகிறார்.
6. (வச.11) கர்த்தருடைய வழியை தெரிந்துகொள்ளும் வாஞ்சை.
ஜெபிக்கும் நேரத்தில் கர்த்தருடைய வழியைத் தெரிந்துகொள்ளும் வாஞ்சை இருக்கவேண்டும். துயர நேரத்தில்கூட, கர்த்தருடைய வழிக்காக விரும்பும் இருதயம் நமக்கு தேவன் அருளும்படி ஜெபிக்கவேண்டும். தேவனுடைய சித்தத்தை அறிந்து ஜெபித்தால் நாம் கவலைப்பட மாட்டோம். நமக்கு பதிலும், ஜெயமும் கிடைக்கும் எரேமியா 32:39,40 எபிரெயர் 10:36.
7. (வச.14-17) கொடுமைக்காரரிடமிருந்து விடுவிக்கப்பட ஜெபம்.
நமது வாழ்க்கை ஓட்டத்தில் பல அகங்காரிகளும், கொடுமைக்காரரும் குறுக்கிட்டு, நமது பரிசுத்த ஜீவியத்தையும் தேவனோடு நெருங்கிச் செல்லும் ஆவிக்குரிய நடக்கையையும் கெடுக்க முற்படுவார்கள். அப்படிப்பட்டவர்களிடமிருந்து
தேவன் நம்மை தப்புவிக்க ஜெபிக்கவேண்டியது அவசியம். தேவனிடம் அடையாளத்தைக் கேட்டு ஜெபிப்பது நமது ஜெப
வைராக்கியத்தை காண்பிக்கும். உபாகமம் 11:22-25, 2 தெசலோனி.3:2,3
Author: Rev. Dr. R. Samuel