சங்கீதம் 81- விளக்கவுரை

முக்கியக் கருத்து

 - தங்கள் தோளை சுமைக்கு விலக்கின தங்கள் பெலனாகிய தேவனை தேவஜனம் ஆர்ப்பரித்து துதிக்கவேண்டும்.
 - தேவஜனம் தங்கள் தேவனுக்கு செவிகொடுத்தால் நல்லது.
 - தேவஜனம் தங்கள் வாயை விரிவாய்த் திறந்து விண்ணப்பித்து, துதிக்கும்போது தேவன் நன்மைகளால் நிரப்புவார்

1. பெலனாகிய தேவன் (வச.1-6)

இஸ்ரவேல் மக்களுக்கு யெகோவா தேவன் பெலனாக இருந்து, வேறு மொழியை பேசிவந்த அந்நிய தேசத்திலிருந்து (வச.5) விடுவித்து வெளியே கொண்டு வந்து அதை இந்நாள்வரை உலக சரித்திரத்தில் சாட்சியாக வைத்திருக்கிறார். அந்நிய தேசமாகிய எகிப்தில் முதலில் யோசேப்பை கொண்டு சென்று, பிறகு யாக்கோபை முழுக்குடும்பமாகக் கொண்டு சென்று, அங்கே அவர்களை பெரிய ஜாதியாக்கினார். ஆகவே, ஆசாப் யாக்கோபின் தேவன் (வச.1) என்றும் யோசேப்பிலே (வச.5) என்றும் குறிப்பிடுகிறார்.

ஆவிக்குரிய இஸ்ரவேலராகிய கிறிஸ்தவ விசுவாசிகளாகிய நம்மையும் பாவத்தின் அடிமைத்தனத்திலிருந்தும், அக்கிரமத்தினின்றும் தமது கிருபையாலும் இரட்சிக்கும் பெலனாலும் விடுவித்ததற்கு இவை ஒப்புமையாக இருக்கிறது ரோமர் 6:17-22.

இஸ்ரவேல் மக்கள் தங்களை அடிமைத்தனத்திலிருந்து மீட்டுக்கொண்டு வந்த தேவனை துதித்து சந்தோஷித்து மகிழ்ச்சியாயிருக்கும்படியாக பல பண்டிகை ஆசரிப்பு நாட்களையும் அவற்றில் இன்னிசைக் கருவிகளுடன் நேர்த்தியாக பாடித் துதிக்கவும் தேவன் கட்டளையிட்டிருந்தார் என்பதை லேவியராகமம் 23 ஆம் அதிகாரம், 2 நாளாகமம் 15 ஆம் அதிகாரம் இவற்றிலும் வாசித்துத் தெரிந்து கொள்ளுகிறோம் (வச.2,3,4) புதிய ஏற்பாட்டு விசுவாசிகளாகிய நமக்கும் நம்முடைய இரட்சிப்பை நினைவு கூர்ந்து, கர்த்தருக்குள் மகிழ்ந்து பரிசுத்த ஜீவியத்தில் சந்தோஷமாகவும் ஆவிக்குரிய வாழ்க்கையில் வளரும்படியாகவும் நமக்கும் தேவன் சில ஆசரிப்பு நாட்களை கட்டளையிட்டு இருக்கிறார். இவற்றை முதல் நூற்றாண்டு சபைகளிலிருந்து இன்று வரை ஆசரித்து வருகிறோம்.இவற்றை குறித்து அப்போஸ்தலர் 2:41-42, 46,47; அப்போஸ்தலர் 20:7, எபிரெயர் 10:25 என்ற வசனங்களில் தெரிந்துகொள்ளுகிறோம். மேலும், நாட்களை கர்த்தருக்காக விசேஷித்துக்கொள்ளுதலைப்பற்றியும், பரிசுத்த ஆவியினால் உண்டாகும் சந்தோஷத்தைப்பற்றியும்  ரோமர் 14:6,17 வசனங்களில் தெளிவாக எழுதப்பட்டிருப்பதை பார்க்கிறோம்.

2. நெருக்கத்தில் விடுவித்த கர்த்தருக்கே செவிகொடுக்கவேண்டும் (வச.7-9)

எகிப்தின் அடிமைத்தனத்தின் நெருக்கத்திலிருந்த இஸ்ரவேலர் தங்கள் தேவனை நோக்கி கூப்பிட்டார்கள் (வச.7).
"...அவர்கள் அடிமைத்தனத்திலிருந்து முறையிடும் சத்தம் தேவசந்நிதியில் எட்டினது. ... 
தேவன் அவர்களை நினைத்தருளினார்'  
என்று யாத்.2:23-25 வசனங்களில் இதை வாசிக்கிறோம். தேவன் அவர்களை விடுவித்தார். விடுவித்த தேவன் அந்நிய ஜாதி தேவர்களை வழிபடாமல், உங்களை மீட்ட என்னை மாத்திரமே வழிபடவேண்டும் என்று கட்டளையிட்டார் (வச.9). அது மாத்திரமல்லாது, அவர்கள் தேவனாகிய தமக்கு செவிகொடுப்பார்களா என்று சோதித்தும் பார்த்தார் (வச.7). ஆனால், இஸ்ரவேல் புத்திரர் சோதனையில் தோல்வியடைந்தார்கள். தேவனுக்கு செவிகொடுக்காமல், முறுமுறுத்து, தேவகோபத்தைப் பெற்றார்கள்.
விசுவாசிகளாகிய நம்முடைய வாழ்க்கையிலும் சோதனைகள் வரும். நாம் கர்த்தரில் விசுவாசமாயிருப்போமா, நமது பரிசுத்த ஜீவியத்தைக் காத்துக்கொள்வோமா என்ற சோதனைகள் வரும்போது நாம் தவறுவோமா அல்லது தேவனை உறுதியாகப்பற்றிக்கொண்டு அவருக்கே செவிகொடுப்போமா என்பதை விசுவாசிகள் எந்நாளும் சிந்திக்க வேண்டும்.
"உங்கள் விசுவாசத்தின் பரீட்சையானது பொறுமையை உண்டாக்குமென்று அறிந்து, அதை மிகுந்த சந்தோஷமாக எண்ணுங்கள்' என்று யாக்கோபு 1:3 வசனத்தில் அப்போஸ்தலன் நமக்கு புத்தி சொல்லுகிறான்.

3. தேவ ஆலோசனை (வச.10-16)

இஸ்ரவேல் மக்களுக்கு தேவன் இரண்டு முக்கிய ஆலோசனைகளை கொடுக்கிறார்.

1. உன் வாயை விரிவாய்த் திற (வச.10)

2. என் ஜனம் எனக்கு செவிகொடுத்து என் வழிகளில் நடந்தால் நலமாயிருக்கும் (வச.13)
அப்படி செய்தால்


1. நன்மைகளால் அவர்களை நிரப்புவேன் (வச.10)
2. எதிரிகளை தாழ்த்துவேன் (வச.14)

3. உச்சிதமான கோதுமையினாலும், கன்மலைத் தேனினாலும் போஷித்து திருப்தியாக்குவேன் (வச.16)

விசுவாசிகளாகிய நாமும் நம்முடைய வாயை விரிவாய்த் திறந்து கர்த்தரை ஆராதித்து துதித்து, நம் விண்ணப்பங்களை அவர் சமூகத்தில் ஏறெடுப்பதுடன் அவருடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்து அவருக்குக் கீழ்ப்படிந்து நடந்தால் நம்மை கன்மலையாகிய கிறிஸ்துவின் தேனிலும் மதுரமான வாக்குத்தத்த வசனங்கள் மூலம் அற்புத அடையாளங்கள் செய்து நம் வாழ்க்கையை வளமாக்குவார்.
ரோமர் 8:37, எபேசியர் 1:3, யோவான் 14:12-15

Author: Rev. Dr. R. Samuel



Topics: Tamil Reference Bible Psalm

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download