முக்கியக் கருத்து
- தேவ ஜனத்தின் பாவங்கள் மன்னிக்கப்பட மன்றாட்டு ஜெபம்.
- தேவ ஜனத்தையும் தேவனுடைய ஆலயத்தையும் பாழாக்கின சத்துருக்களை தண்டிக்க ஜெபம்.
- தேவனிடம் திரும்பும்படியாகப் பொருத்தனை.
1. தேவ ஜனத்தின் அழிவும் சங்காரமும் (வச.1-4)
ஆகாப் முந்தின சங்கீதத்தின் தொடர்ச்சியாக இந்த சங்கீதத்திலும் தனது வாக்கியங்களை தொடர்வது தெரிகிறது. தேவ ஜனமும், தேவனுடைய பரிசுத்தஸ்தலமும் புறஜாதி இராஜாக்களால் அழிக்கப்பட்டு, தீட்டுப்படுத்தப்பட்டு சங்காரமாக்கப்பட்டதை தேவனிடம் புலம்பி அறிக்கையிடுகிறதைப் பார்க்கிறோம்.
தேவ ஜனம் தேவனை விட்டுப் பின்வாங்கி புற ஜாதி மார்க்கத்தைப் பின்பற்றி சோரம் போனதால் இந்த தண்டனை வந்ததை 2 நாளாகமம் 36 ஆம் அதிகாரத்தில் வாசிக்கிறோம். அதேபோல, புதிய ஏற்பாட்டு விசுவாசிகளும் சபைகளும்கூடத் தங்களை மீட்டு இரட்சித்த கர்த்தரை விட்டுப்பின் வாங்கினால் வரும் சிட்சைகளை குறித்து ஆவியானவர் சபைகளுக்கு சொல்வதை வெளி.2:4,5,14,16,20.வெளி.3:2,3,11,16-18 வசனங்களிலும் வாசித்து எச்சரிக்கப்படுகிறோம். மனம்மாற தருணம் கொடுக்கப்படுகிறதையும் வாசித்துத் தெரிந்துகொள்ளுகிறோம்.
2. தேவ கோபம் மாறி, தேவ கிருபைக்காக மன்றாடும் ஜெபம் (வச.5, 8-11)
தேவ ஜனத்தின் பாவத்தினால் அவர்கள்மேல் வந்த தேவ கோபத்தை தேவன் மாற்றி, தம் ஜனத்தின்மேல் இரக்கம் பாராட்டி பாவங்களை நிவிர்த்தியாக்குமாறு (9) ஆசாப் ஜெபிக்கிறான். எதுவரைக்கும் உமது ஜனத்தின்மேல் எரிச்சலாயிருப்பீர்? (5). அவர்கள் தேவன் எங்கே என்று புறஜாதிகள் ஏன் கேட்க வேண்டும் (10) என்ற கேள்விகளை ஆசாப் எழுப்பி, கட்டுண்ட நிலைமையிலிருக்கும் தேவ ஜனத்தை விடுவிக்க மன்றாடுகிறான்.
"ஆ, என் தலை தண்ணீரும், என் கண்கள் கண்ணீரூற்றுமானால் ... என் ஜனமாகிய குமாரத்தி ... நிமித்தம் ... இரவும்பகலும் அழுவேன்' (எரேமியா 9:1) இல் எரேமியா தீர்க்கதரிசியும்,
"உமது அடியாராகிய இஸ்ரவேல் புத்திரருக்காக இன்று இரவும்பகலும் உமக்கு முன்பாக மன்றாடி, ... உமக்கு விரோதமாகச் செய்த பாவங்களை அறிக்கையிடுகிற அடியேனுடைய ஜெபத்தைக் கேட்கிறதற்கு, உம்முடைய செவி ... திறந்திருப்பதாக' நெகேமியா 1:6 இல் நெகேமியாவும், அதேபோல தானியேல் 9:1-19 வசனங்களில் தானியேலும் தேவனுடைய கோபம் மாறி தேவ ஜனத்தை மன்னிக்க மன்றாடுகிறார்கள்.
புதிய ஏற்பாட்டு திருச்சபையும்கூட, உலக மக்களின் இரட்சிப்புக்காக ஜெபிப்பதோடு, திருச்சபைகளிலும் கிறிஸ்தவ விசுவாசிகளின் வாழ்க்கையிலும் காணப்படும் பின்மாற்றம், பாவங்கள், அசுத்தங்கள் நீங்கி சுத்திகரிக்கப்பட இரவு பகலாக ஜெபிக்க வேண்டும்.
எபேசியர் 6:18, பிலிப்பியர் 1:4-6
3. பரிசுத்த ஸ்தலத்தை பாழாக்கினவர்களை பழிவாங்க ஜெபம் (வச.6,7,12)
கி.மு. 568 இல் பாபிலோனியப் பேரரசன், யூதா தேசத்தையும், தேவனுடைய ஆலயத்தையும் முற்றிலும் பாழாக்கினான் (2 நாளாகமம் 3:6).
தேவ ஜனத்தையும், தேவனுடைய பரிசுத்த ஸ்தலத்தையும் பாழாக்கின சத்துருக்களை தேவன் நியாயந்தீர்க்க வேண்டுமென்று ஆசாப் ஜெபிக்கிறான். பரலோகத்திலும் இந்த கூக்குரல் கேட்பதை
"... தேவரீர் பூமியின்மேல் குடியிருக்கிறவர்களிடத்தில் எங்கள் இரக்கத்தைக்குறித்து எதுவரைக்கும் ... பழிவாங்காமலும் இருப்பீர்' என்று வெளி.6:10 ஆம் வசனத்தில் வாசிக்கிறோம். நிச்சயமாக இந்த பூமியை கெடுத்தவர்களையும், பரிசுத்தவான்களாகிய தேவஜனத்தை நிந்தித்து பாழாக்கினவர்களையும் கர்த்தரே கடைசி நாளில் பழிவாங்குவார் என்று வெளி.11:18 ஆம் வசனத்தில் வாசிக்கிறோம்.
கடைசி நாளில் மாத்திரமல்ல, தேவனோடு ஒப்புரவாகும்போது தேவ ஜனத்தின் நிந்தையை இந்த உலக வாழ்க்கையிலேயே தேவன் மாற்றி தேவ ஜனத்தின் சத்துருக்களை வெட்கப்படுத்துவார்.
4. தேவ ஜனத்தின் பொருத்தனை (வச.13)
தேவ ஜனத்தை தேவன் தயவாய் மன்னித்து உயர்த்தும்போது நாம் அவருக்கு தலைமுறை தலைமுறையாய் நன்றியுள்ளவர்களாக இருந்து துதியும் புகழும் செலுத்தி, அவருடைய சுவிசேஷத்தை உலகத்திற்கு அறிவிக்கவேண்டும்.
Author: Rev. Dr. R. Samuel