முக்கியக் கருத்து
- தேவன் தமது ஜனங்களுக்குச் செய்யும் நன்மைகளை பிறருக்கு வந்து பாருங்கள் என்று அறிவிக்கவேண்டும்.
- தேவன் நம் ஜெபத்தைக் கேட்க முக்கிய நிபந்தனை அக்கிரம சிந்தையை விலக்கவேண்டும்.
1. ஒருங்கிணைந்த ஆராதனை (வச.1-6)
தேவனுடைய மகத்துவத்தையும் அவருடைய பயங்கரமான கிரியைகளையும் துதித்துப்பாட எல்லா பூமியின் குடிகளுக்கும் அழைப்பு விடுவிக்கப்படுகிறது. ஏனென்றால், எல்லாருக்கும் அவர் நன்மை செய்கிறார். தேவனுக்கு விரோதமாக அவருடைய எதிராளிகள் தீங்காய் பேசினாலும் அது அடங்கிவிடும். ஆனால், அவரைத் துதிப்பவர்களோ பூமியின் மீதெங்கும் அவரை எப்போதும் பணிந்துகொள்வார்கள். தேவன் செய்த வல்லமையான கிரியைகளில் மிகவும் முதன்மையான சாட்சியாக கூறப்படுவது, அவர் தமது ஜனமாகிய இஸ்ரவேலை எகிப்திலிருந்து மீட்டு நடத்திக்கொண்டு வந்தபோது செங்கடலை உலர்ந்த தரையாக மாற்றிய அதிசயமே (வச.6).
இந்த அதிசயத்தை அவரைத் துதித்துப் பணிந்துகொள்ளும் மக்கள் யாவருக்கும் இன்றும் செய்ய வல்லவர்.
"இயேசுகிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார்' என்று எபிரெயர் 13:8 இலும்
"அதற்குத் தேவன்: இருக்கிறவராக இருக்கிறேன் ...' என்று யாத்திராகமம் 3:14 வசனத்திலும் வாசிக்கிறோம். தேவன் தமது ஜனத்திற்கு செய்யும் வல்லமையான செய்கைகளையும், மனுப்புத்திரர் மத்தியில் நடப்பிக்கும் பயங்கரமான கிரியைகளையும் வந்து பாருங்கள் என்று தேவ ஜனம் தேவனை அறியாதவர்களை அழைத்து காண்பிக்கவேண்டும். அப்பொழுது அவர்கள் தேவனை ஏற்றுக்கொள்வார்கள்.
2. சோதனைகளை ஏற்றுக்கொள்ளுதல் (வச.7-12)
தேவன் என்றென்றைக்கும் அரசாளுகிறவராக இருந்து தமது ஜனங்கள் மேல் எப்போதும் கண்ணோக்கமாக இருந்து பாதுகாக்கிறார் என்ற நம்பிக்கையோடே, தங்களை சோதிக்கும்படியாக சிலவேளைகளில் அவர் அனுமதித்த தோல்விகளையும், புடமிடுதல்களையும்கூட (உபாகமம் 8:2-4; மல்கியா 3:2,3) ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவத்தோடே சங்கீதக்காரன் இந்த வசனங்களை வரைந்திருக்கிறான்.
ஒவ்வொரு விசுவாசியும்கூட இதை ஆழமாக சிந்தித்து, தேவன் தங்களுக்கு அனுமதிக்கும் சோதனை அவர் தங்களை நேசிப்பதால் மாத்திரமே என்று (வெளி.3:19) ஆம் வசனத்தின்படி ஏற்றுக்கொள்ளவேண்டும்.
3. தனிப்பட்ட ஆராதனை (வச.12-20)பூமியின் குடிகள் அனைவரையும் அழைத்த சங்கீதக்காரன், இந்த வசனங்களில் தேவ ஜனத்தின் பிரதிநிதியாக, தான் கர்த்தருடைய ஆலயத்தில் வந்து பொருத்தனைகளையும், பலிகளையும் செலுத்துவேன் என்று உறுதியளிக்கிறான். தேவனிடம் நெருங்கும் ஒவ்வொரு விசுவாசியும் தனது தனிப்பட்ட உறவை தேவனிடம் இப்படியே வளர்த்துக் கொள்ளவேண்டியது மிக அவசியம். அப்படிப்பட்ட, சாட்சியை தேவனுக்கு பயந்தவர்களுடன் பகிர்ந்து கொள்ளவேண்டும் (வச.16,17). தன்னுடைய ஜெபத்தை தேவன் கேட்டதற்கு முக்கிய நிபந்தனையாக இருந்தது, தான் அக்கிரம சிந்தையை தன்னிலிருந்து விலக்கியதே என்று தேவனுக்கு பயந்தவர்களுடன் தாவீது பகிர்ந்து கொள்ளுகிறேன் (வச.18).
தேவ சித்தத்தை அறிந்து ஜெபித்ததால் தேவன் தாவீதின் ஜெபத்தைத் தள்ளாமல் ஏற்றுக்கொண்டார் (வச.19,20).
யாக்கோபு 4:1-3, யோவான் 14:13,14.
Author: Rev. Dr. R. Samuel