முக்கிய கருத்து :
- தாவீது தனது மிகுந்த வியாகுலத்தில் தேவனின் விடுதலைக்காக விண்ணப்பம் செய்கிறார்.
- கர்த்தரை துதிப்பதற்காக தாவீது தனது ஜீவனை கேட்கிறார்.
1. தாவீது தனது மிகுந்த வியாகுலத்திலிருந்து தேவன் தன்னை விடுவிக்குமாறு (வச.3) விண்ணப்பம் செய்கிறான். கர்த்தருடைய இரக்கம் காலதாமதமாகிறதை இங்கு தெரியப்படுத்துகிறான். தாவீதின் துயரம் அவனுடைய சரீரத்தையும் ஆத்துமாவையும் பாதித்திருப்பதாக (வச.2,4) இல் அறிந்துகொள்ள முடிகிறது. தாவீதின் இந்தத் துயரம் கர்த்தரிடத்திலிருந்து தனக்கு வந்த சிட்சை என்பதை தாவீது உணர்வதை (வச.1) இல் காணமுடிகிறது. ஆனாலும் தனது குற்ற உணர்வு தாவீதை பின்மாரிப்போக விடாமல், தேவனிடம் மன்னிப்புக் கேட்டு, தேவனின் விடுதலையை தைரியமாக நம்பிக்கையுடன் கேட்கிறான். இந்தத் தாவீதின் செயல் ஒவ்வொரு விசுவாசிக்கும் சிறந்த ஒரு எடுத்துக்காட்டாக இருக்கிறது,
"கர்த்தரிடத்தில் திரும்புவோம் வாருங்கள்; நம்மைப் பீறினார், அவரே நம்மைக் குணமாக்குவார்' என்று ஓசியா 6:1 வசனத்தில் வாசிக்கிறோம்.
2. கர்த்தர் தன்னை மன்னித்து, மீட்டுக்கொண்டபடியினால் தாவீது தன் சத்துருக்களை நோக்கி, அவர்கள் தன்னை நிந்திக்க முடியாது என்று தைரியமாக கூறுவதை (வச.8) இல் பார்க்கிறோம். தேவனுடைய பிள்ளைகளை நிந்தித்து குற்றப்படுத்தும் சத்துருக்களை தேவன் கடிந்துகொண்டு, தமது பிள்ளைகள் மனந்திரும்பி தம்மிடம் திரும்பி வருவதால் அவர்களை அணைத்துச் சேர்த்துக்கொள்ளுகிறார் என்பதற்கு சகரியா 3ஆம் அதிகாரத்தில் சிறந்த ஒரு உதாரணத்தை வாசிக்கிறோம்.
"...... சாத்தான் அவனுக்கு விரோதஞ்செய்ய அவன் (யோசுவா) வலதுபக்கத்திலே நின்றான். அப்பொழுது கர்த்தர் சாத்தானை நோக்கி : கர்த்தர் உன்னைக் கடிந்துகொள்வாராக; ... என்றார். ... பின்பு அவனை (யோசுவாவை) நோக்கி : பார், நான் உன் அக்கிரமத்தை உன்னிலிருந்து நீங்கச்செய்து, உனக்கு சிறந்த வஸ்திரங்களைத் தரிப்பித்தேன் என்றார்' (சகரியா 3:1-4).
மேலும், "... இரவும் பகலும் நம்முடைய தேவனுக்கு முன்பாக நம்முடைய சகோதரர்மேல் குற்றஞ் சுமத்தும்பொருட்டு அவர்கள் மேல் குற்றஞ்சாட்டுகிறவன் தாழ்த்தப்பட்டுப்போனான்' என்று வெளிப்படுத்தல் 12:10 ஆம் வசனத்திலும் வாசிக்கிறோம்.
3. தான் மரித்துப்போனால் தேவனை துதிக்க முடியாது. ஆகவே தனக்கு ஜீவனை கொடுக்கவேண்டும் என்று தாவீது ஞானமாய் கர்த்தரிடம் மன்றாடுகிறான் (வச.5).
ஏசாயா 38:17-19 ஆம் வசனங்களில் எசேக்கியா இராஜா கர்த்தரிடம் தன் ஜீவனையும் சுகத்தையும் மன்றாட இதே யுக்தியை கையாள்வதைப் பார்க்கிறோம்.
"... பாதாளம் உம்மைத் துதியாது, மரணம் உம்மைப் போற்றாது; குழியில் இறங்குகிறவர்கள் உம்முடைய சத்தியத்தை தியானிப்பதில்லை. நான் இன்று செய்கிறதுபோல, உயிரோடிருக்கிறவன், உயிரோடிருக்கிறவனே உம்மைத் துதிப்பான்...' என்று ஜெபிக்கிறான்.
தேவனுடைய பிள்ளைகளும் இவ்விதமாக கர்த்தரிடம் பொருத்தனையுடன் ஜெபிக்கும்போது இரக்கம் பெறுவார்கள், ஆசீர்வதிக்கப்படுவார்கள்.
Author: Rev. Dr. R. Samuel