முக்கியக் கருத்து
- நாத்தீகத்துக்கு எதிரான கருத்து.
- தேவ ஜனத்தை எதிர்க்கிறவர்கள்மேல் தேவ கோபாக்கினை வரும்.
- தேவன் தமது ஜனத்தை மீண்டும் கூட்டிச் சேர்ப்பார்.
- 14 ஆம் சங்கீதத்தின் மறு ஆக்கம் இது.
வச.1 - தேவன் இல்லை என்று சொல்பவன் எவ்வளவு படிப்பறிவுள்ளவனாயினும், பண பலம் உள்ளவனாயினும் அவன் மூடன், மதியில்லாதவன்.
"... ஆண்டவருக்குப் பயப்படுவதே ஞானம்; ...' என்று யோபு 28:28 இலும்,
"... பரிசுத்தரின் அறிவே அறிவு' என்று நீதிமொழிகள் 9:10, 1:7 இலும் வேதம் கூறுகிறது. இங்கர்சால் போன்றவர்கள் இந்த உலகில் நாத்திகத்தைப் பரப்பியவர்கள். இவர்களுடைய கருத்து நிரூபிக்கப்படாத ஒன்று.நாத்திகர்கள் கணிப்பின்படி மனிதன் 10 இலட்சம் ஆண்டுகளுக்கு முன் தோன்றினான். மிருகத்திலிருந்து பரிணமித்தான் என்பது. ஆனால், இன்றை ஜனத்தொகையை கணக்கிட்டால், இது தவறு என்று தெரிகிறது. வேதத்தில் ஆதாம் 6000 ஆண்டுகளுக்கு முன் தேவனால் முதல் மனிதனாகப் படைக்கப்பட்டான் என்று அறிகிறோம். இன்றைய ஜனத்தொகையின் இலக்கம் இந்த 6000 ஆண்டுகளில் தான் பெருகியிருக்கக்கூடுமே தவிர 10 இலட்சம் ஆண்டுகளிலோ நாம் நினைக்க முடியாத அளவுக்கு பெருக்கம் அடைந்தி ருக்க வேண்டுமென்பது தெளிவாக புலனாகிறது.
வச.2 - உண்மையாய் தேவனைத் தேடுகிற மனிதன் உண்டா என்பதைக் கண்டறிய தேவன் தமது பரலோகத்திலிருந்து தாமே கண்டறிய இறங்கினார். மனிதனுடைய நிலைமையை கண்டறிய தேவன் பூமிக்கு மனிதர் மத்தியில் இறங்கியதை ஆதியாகமம் 11,18 ஆம் அதிகாரங்களிலும் வாசித்துத் தெரிந்துகொள்ளலாம்.தேவன் மனிதர் மத்தியில் கண்டதோ, அவர்கள் தேவனை உண்மையாய்த் தேடவில்லை என்பதை இந்த பழைய ஏற்பாட்டின் பகுதியிலும், தேவ பயம் இருந்தும் அதைத் தவறான வழியில் கைக்கொண்டார்கள் என்பதை
"... சிருஷ்டிகரைத் தொழுது சேவியாமல் சிருஷ்டியைத் தொழுது சேவித்தார்கள், ...'
என்று ரோமர் 1:25 ஆம் வசனத்திலே புதிய ஏற்பாட்டின் பகுதியிலும் நாம் வாசிக்கிறோம்.
வச.3, 4, 5 - அது மாத்திரமல்லாமல், உண்மையாய் தேவனைத் தேட மனதில்லாத மதிகேடர், தேவன் மேல் பக்தியாயிருக்கிறவர்களைப் பட்சிக்கவும் அவர்களுக்குத் தீங்கு செய்யவும் செயல்படுவதால் இந்த அக்கிரமக்காரர்மேல் தேவ கோபம் மூண்டிருக்கிறது. கடைசியில் தேவன் அவர்களை வெறுத்து, வெட்கப்படுத்தி, சிதறடிப்பார். இதுவே தேவ நியாயத்தீர்ப்பு "... விரோதிகளைப் பட்சிக்கும் கோபாக்கினையுமே இருக்கும்'
என்று எபிரெயர் 10:27 ஆம் வசனத்தில் இதைக் குறித்து வாசிக்கிறோம்.
வச.6 - தேவனுடைய திட்டம் தமது ஜனத்தைக் கடைசியில் தம்மண்டையில் கூட்டிச் சேர்த்து, அவர்களுடைய சிறையிருப்பிலிருந்து விடுதலையாக்கி, இரட்சித்து, களிப்பையும், மகிழ்ச்சியையும் கொடுப்பதே.
1. தமது ஜனமாகிய இஸ்ரவேலை யெகோவா தேவன் தம் ஆயிர வருட அரசாட்சியில் கூட்டிச் சேர்ப்பதும்,
2. இரட்சிக்கப்படும் எல்லா ஜாதி மக்களையும் உலகத்தின் துன்பத்திலிருந்து மீட்டு நித்திய மகிழ்ச்சியை கொடுப்பதும் கடைசி நாட்களில் தேவன் நிறைவேற்றுவார் என்ற வாக்குத்தத்தத்தை தீர்க்கதரிசன வசனமாகவும் இந்த வசனத்தில் எழுதப்பட்டுள்ளது.
Author: Rev. Dr. R. Samuel