முக்கியக் கருத்து
- நேசரைப் புகழ்கிற பொங்கிவரும் கவிதை இது.
- அவர் நீதியை விரும்பும் நித்திய ராஜரீக மணவாளன்.
- அவருடைய அலங்கார மணவாட்டியின் மகிமை.
(வச.1) - பொங்கி வரும் கவிதை
கோராகின் புத்திரருடைய இருதயம் ஒரு நல்ல விசேஷத்தால் பொங்குகிறது. அது என்ன விசேஷம்? தங்கள் ராஜாவும், நேசருமான தேவனைப் புகழும் கவிதை கரைபுரண்ட வெள்ளம்போல் பெருக்கெடுத்து வருகிறது. நேசரின் மேன்மையும், மகிமையும், அன்பும் இருதயத்தில் நிரம்பி இருப்பதால் "என் பாத்திரம் நிரம்பி வழிகிறது' என்று தாவீது சங்கீதம் 23:5-இல் சொல்வதுபோல நிரம்பி வழிந்து அதை எழுதவும் பாடவும் நாவும் கைகளும் விரைவாய் செயல்படுகின்றன.
விசுவாசிகள் ஆண்டவருடைய அன்பின் அகலம், நீளம், உயரம் இன்னதென்பதையும் அறிவுக்கெட்டாத அந்த அன்பை
அறிந்துகொள்ள தேவனுடைய பரிபூரண வல்லமையால் நிறையப்படவும் வேண்டும் என்று பவுல் எபேசியர் 3:17-19 வரையிலான வசனங்களில் சொல்லியிருப்பதுபோல நிறையப்படும்போது, கோராகின் புத்திரர்போல நமது இருதயமும் நாவும் நம் கர்த்தரைப் புகழ, துதிக்க, தொழுதுகொள்ள பொங்கி வரும் அனுபவத்தை பெற்றவர்களாயிருப்போம்.
பல்லவி
ஏசுவின் அன்பு பொங்க
ஏடெடுத்தே வரைந்தேன்
எந்தன் நாவு எழுத்தாணி
எடுத்துரைத்து கவிபாடும்
சரணம்
1. சாந்தமும் சத்தியமும் நீதியும் நேர்மையும்
சொல்லொனா அன்பு தியாகம் தூய்மையும் நிறைந்தவர்
சீர் திரி யேக மைந்தன் மனம் கவர்ந்த மணாளன்
உயிருள்ள மட்டும் உம்மைப் பாடி
உம் நாமம் ஓங்க உழைப்பேனே - ஏசுவின்
பாட்டு - சகோதரி சாராள் நவரோஜி
(வச.2-8) - நீதியை விரும்பும் ராஜரீக மணவாளன்
கோராகின் புத்திரர் தங்கள் நேசராகிய ராஜாவை அவருடைய மேன்மையான குணாதிசயங்களைக் கூறி வர்ணிக்கிறார்கள். அவரது சிங்காசனம் என்றென்றைக்கும் உள்ளதாகவும் (வச.6). அவர் நீதியை மாத்திரம் விரும்புகிறவராகவும் (வச.7) இல் வர்ணிக்கிறார்கள். அதுமாத்திரமல்ல அவர் ஜெயங்கொள்ளும் யுத்த வீரனாகவும் இருக்கிறார் என்று (வச.5) இல் விவரித்திருக்கிறார்கள். இந்த வர்ணனை தாவீதின் மாம்சீக குமாரனாகிய சாலமோனுக்குப் பொருந்தாமல் தாவீதின் மாம்ச, ஆவிக்குரிய குமாரனாகிய மேசியா கிறிஸ்துவுக்கே பொருந்துகிறது. ஆகவே, மேசியா கிறிஸ்துவின் மூலம் அவர் நித்தியமாக ஸ்தாபிக்கப்போகும் அவருடைய இராஜ்ஜியத்தில் முழுமையாக நிறைவேறப்போகும் தீர்க்கதரிசன வார்த்தைகளாக எழுதப்பட்டுள்ளது. எல்லா மனுப்புத்திரரிலும் நீர் மகா சவுந்தரியமானவர் என்று (வச.2) இல் பாடியிருப்பது,
"என் நேசர் ... பதினாயிரம்பேர்களில் சிறந்தவர்' என்று சூலமித்தி உன்னதப்பாட்டு 5:10 இல் தனது மணவாளனை வர்ணிப்பதை பிரதிபலிக்கிறது. மேலும்,
"... உம்முடைய உதடுகளில் அருள் பொழிகிறது; ...' என்று அதே (வச.2) இல் கூறியிருப்பது
"... அவருடைய வாயிலிருந்து புறப்பட்ட கிருபையுள்ள வார்த்தைகளைக் குறித்து ஆச்சரியப்பட்டு: ...' என்று
லூக்கா 4:22 இல் இயேசு கிறிஸ்துவின் வார்த்தைகளைக் குறித்துச் சொல்லப்பட்டவைகளுக்கு முன் மொழிதலாகவும் இருக்கிறது. "தேவனே, உமது சிங்காசனம்' என்று (வச.6) இல் மேசியா கிறிஸ்துவை தேவனாகவும், "தேவனே, உமது தேவன்' என்று (வச.7) இல் பிதாவாகிய தேவனையும் தேவன் என்று அழைத்திருப்பது கிறிஸ்து, பிதா இருவருமே முழுமையான தேவனாயிருக்கிறார்கள் என்ற புதிய ஏற்பாட்டின் உபதேசத்திற்கு ஒத்திருக்கிறது.
நீதியை நிலைநாட்டும் ராஜாவாக, இயேசு கிறிஸ்து சீக்கிரம் வரப்போகிறார் என்று வெளிப்படுத்தல் புத்தகத்தில் யோவான்
மூலமாய் வெளிப்படுத்தப்பட்ட சத்தியத்தை முற்றிலும் இந்த சங்கீதம் முன் மொழிந்திருக்கிறது.
(வச.9-17) - அலங்கார மணவாட்டி
இந்த ராஜரீக மணவாளனாக வர்ணிக்கப்பட்ட ராஜாவுக்கு ஏற்ற ஒரு அலங்கார மணவாட்டியை குறித்து இந்த வசனங்களில் வர்ணிக்கப்பட்டுள்ளது. பழைய ஏற்பாட்டில் யேகோவா தேவன் மணவாளனாகவும், இஸ்ரவேல் ஜனம் அவருடைய மண
வாட்டியாக ஏசாயா 54:5, எரேமியா 31:3,4, ஓசியா 2:14,19 வசனங்களிலும், புதிய ஏற்பாட்டில் இயேசு கிறிஸ்து மணவாளனாகவும், அவருடைய சபை மணவாட்டியாகவும் எபேசியர் 5:33, 2 கொரி.11:2, வெளி.19:6-9 வசனங்களிலும் சொல்லப்பட்ட சத்தியங்களுக்கு இந்த வர்ணனை முன்னோடியாயிருக்கிறது.
இந்த மணவாட்டியின் அழகும் மகிமையும் மேற்கூறிய வசனங்களில் சொல்லப்பட்ட பரிசுத்தவான்களின் பரிசுத்தத்தை
சுட்டிக்காட்டுகிறது. மேலும் இந்த மணவாட்டியை நோக்கி
"... உன் ஜனத்தையும் உன் தகப்பன் வீட்டையும் மறந்து விடு. அப்பொழுது ராஜா உன் அழகில் பிரியப்படுவார்; ...'
என்று (வச.10,11) இல் சொல்லப்பட்டது, ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவினிடம் வருகிறவர்கள் இந்த உலக பாவ வாழ்க்
கையாகிய தங்கள் தகப்பன் வீட்டை மறந்து, மனந்திரும்பி ஒரு பரிசுத்த வாழ்க்கைக்கு ஒப்புக்கொடுத்து வரும்போது கர்த்தர் அப்படிப்பட்ட சபையாம் மணவாட்டியின்மேல் பிரியப்படுவார் என்ற சத்தியத்தைத் தெளிவாக எடுத்துரைக்கிறது.
இவ்விதமாக கர்த்தராகிய இராஜாவிடம் வருபவர்கள் அவருடைய குமாரர்களாக பூமியை ஆளுவார்கள் என்றும்
(வச.15-17) வரை சொல்லப்பட்டிருக்கிறது.
நாமும் அந்த ஆளுகையைப்பெற ஆயத்தப்படுவோமா?
Author: Rev. Dr. R. Samuel