முக்கியக் கருத்து:
- கர்த்தருக்கு காத்திருப்பவன் பாவக்குழியிலிருந்து தூக்கி எடுக்கப்படுவான்.
- மேசியா கிறிஸ்துவின் பிறப்பைக் குறித்த தீர்க்கதரிசன வசனம் நிறைவேறியது.
1. (வச.1-5) தாவீது கர்த்தருடைய மீட்புக்காக காத்திருந்தபடியால் தனது பயங்கரமான குழியைப்போன்ற நிலமையிலிருந்து தூக்கி எடுக்கப்பட்டான். தாவீது தனது நம்பிக்கையை அகங்காரிகளான மனிதர்மேல் வைக்கவில்லை. மிகக் குறுகிய காலத்திலேயே தேவன் தாவீதுக்கு கொடுத்த விடுதலையையும் தாவீதை இஸ்ரவேலின் அரசனாக அரியணையில் அமரவைத்த அதிசய அற்புதங்களையும் விவரிக்க இயலாது என்று (வச.5) இல் தாவீது கூறுவதைப் பார்க்கிறோம். இந்த நிகழ்ச்சிகளை 1 சாமுவேல் 30, 2 சாமுவேல் 1 ஆம் அதிகாரங்களில் வாசிக்கலாம்.
தாவீதைப்போலவே கர்த்தருக்குக் காத்திருக்கிற எந்த ஒரு மனுஷனும் பாக்கியவான். அவன் புதுபெலன் அடைவான் என்று ஏசாயா 40:31 வசனத்தில் வாசிக்கலாம். மேலும், தாவீதை உளையான சேற்றிலிருந்து தூக்கி எடுத்து கன்மலை போன்ற
உறுதியான உயரமான இடத்தில் தேவன் நிறுத்தியதுபோலவே, ஒவ்வொரு விசுவாசியையும்கூட கர்த்தர் உளையான பாவச்
சேற்றிலிருந்து தூக்கி எடுத்து, கன்மலையாம் கிறிஸ்துவின்மேல் நிறுத்தி இருக்கிறார் என்பதை 1 பேதுரு 2:9 ஆம் வசனத்தில், "நீங்களோ, உங்களை அந்தகாரத்தினின்று தம்முடைய ஆச்சரியமான ஒளியினிடத்திற்கு வரவழைத்தவருடைய ... சொந்தமான ஜனமாயும் இருக்கிறீர்கள்' என்று வாசிக்கிறோம். நம்முடைய கிறிஸ்துவே நாம் நிற்கும் கன்மலை என்பதை 1 கொரி. 10:4 வசனத்திலும் வாசிக்கிறோம். மேலும்,
"அக்கிரமங்களில் மரித்தவர்களாயிருந்த நம்மைக் கிறிஸ்துவுடனேகூட உயிர்ப்பித்தார்; கிருபையினாலே இரட்சிக்கப்பட்டீர்கள்' என்று எபேசியர் 2:5 ஆம் வசனத்தில் நாம் பயங்கர குழியான பாவத்திலிருந்து தூக்கி எடுக்கப்பட்டு, கிறிஸ்துவுடனே உயிர்ப்பிக்கப்பட்டது எழுதப்பட்டுள்ளது.
2. (வச.6-10) தேவனுடைய நியாயப்பிரமாணத்திலுள்ள பலிகளை மாத்திரம் செலுத்துவது போதுமானதல்ல. தேவனுடைய கட்டளைகளுக்கு கீழ்ப்படிதலே முக்கியம். இதை 1 சாமு.15:22, ஏசாயா 1:11-17 வசனங்களில் வலியுறுத்தப்பட்டுள்ளதை பார்க்கிறோம். பழைய ஏற்பாட்டு பலிகள் மனித மீட்புக்குப் போதுமானதாக இல்லை. அவைகள் ஒரு அடையாளமாகவும் நிழலாகவும் மாத்திரமே இருந்தது. இயேசு கிறிஸ்து பிதாவின் சித்தத்திற்கு கீழ்ப்படிந்து உலகத்தில் வந்து சத்திய சுவிசேஷத்தை பிரசங்கித்து, தமது சிலுவை மரணத்தினாலும் கீழ்ப்படிதலினாலும் மனிதருக்கு மீட்பை நிறைவேற்றினார் என்பதே தாவீது இந்த வசனங்களில் கூறியிருக்கும் தீர்க்கதரிசன வார்த்தைகள். இந்த சத்தியத்தை எபிரெயர் 10:1-10 வசனங்களில் விளக்கப்பட்டுள்ளதை பார்க்கலாம்.
மேலும், யோவான் 5:30 ஆம் வசனத்தில் இயேசு தமது பிதாவின் சித்தம் செய்யவே பூமியில் வந்தார் என்பதை வெளிப்படுத்தியுள்ளார்.
ஒவ்வொரு விசுவாசியும்கூட தங்கள் வாழ்க்கையில் கர்த்தருடைய சித்தத்தை செய்ய தங்களை அர்ப்பணித்து கீழ்ப்படிதலுக்கு ஒப்புக்கொடுக்க வேண்டும்.
3. (வச.11-17) தாவீது தனக்கு தீங்கு செய்ய நினைக்கிறவர்கள். எண்ணிக்கைக்கு அடங்காதவர்களாக தன்னை சூழ்ந்து கொண்டிருப்பதால் தேவன் தமது பகுதியை செய்து தீவிரமாக தன்னை விடுவிக்க வேண்டும். தாமதிக்கக்கூடாது என்று விண்ணப்பிக்கும்போது, தான் சிறுமையும் எளிமையுமானவன் (வச.17) என்று தன்னை தாழ்த்துகிறதைப் பார்க்கிறோம். தனது அக்கிரமங்களே தன் மீது தீமையை வரப்பண்ணினது என்பதையும் தாவீது தாழ்மையாக ஒப்புக்கொள்வதை ஒரு மனந்திரும்பும் பாவியின் அறிக்கையாக பார்க்கிறோம்.
தனக்கு தீங்கு செய்பவர்கள் வெட்கப்பட்டுப் போகவும், தேவனை தேடுகிறவர்களும், கர்த்தருடைய இரட்சிப்பை விரும்புகிறவர்களும் கர்த்தருக்குத் துதியும் மகிமையும் செலுத்தி மகிழ்ச்சியாயிருக்கவேண்டும் என்ற வேண்டுதலுடனும் தாவீது தனது துதியின் ஜெபத்தையும் அறிக்கையையும் முடிக்கிறதைப் பார்க்கிறோம்.
Author: Rev. Dr. R. Samuel