முக்கியக் கருத்து
- தேவதூதர்களும், பரிசுத்தவான்களும் தேவனுடைய மகிமை பொருந்திய வல்லமையைத் துதிக்க பரலோகத்தில் அழைப்பு விடுக்கப்படுகிறது.
- ஜலப்பிரவாகம் நிறைந்த பிரதேசம் முதல் வறட்சியான வனாந்திரம் வரை எல்லா இடத்தையும் கர்த்தருடைய சத்தம் கெம்பீரிக்கச் செய்யும்.
கர்த்தரின் மகிமை துதிக்கப்படத்தக்கது (வச.1,2)
பலவான்களின் புத்திரர் (தேவதூதர்கள், பரிசுத்தவான்கள் யோபு 38:7, 2 தீமோத்.1:7) தேவனை பரிசுத்த அலங்காரத்துடனே துதிக்கும்படியாக அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது. இப்படிப்பட்ட, பரிசுத்தத்தில் சிறந்தவர்களின் துதித்தலில் மட்டுமே தேவனுடைய வல்லமையும், மகிமையும் பூரணமாக விவரிக்கப்படும். வானத்திலும், பூமியிலும் சகல சிருஷ்டிப்புகளும் கர்த்தருடைய வல்ல செய்கைகளை விவரித்தாலும்கூட பலவான்களின் பரிசுத்த ஆரவாரத்திற்கு இணையாகாது.
"அப்பொழுது திரளான ஜனங்கள் ... பெருவெள்ள இரைச்சல்போலவும், பலத்த இடிமுழக்கம்போலவும் ... சர்வவல்லமையுள்ள தேவனாகிய கர்த்தர் ராஜ்யபாரம்பண்ணுகிறார்" என்று வெளி. 19:6 ஆம் வசனத்தில் பலவான்கள் பரலோகத்தில் கர்த்தரை துதிக்கும் விதம் எழுதப்பட்டிருக்கிறது.
கர்த்தருடைய வல்லமை அவர் சத்தத்தில் வெளிப்படுகிறது
இஸ்ரவேல் தேசத்தின் மலைப்பாங்கான வடதேசத்தின் பெருங்காற்று, மழை, ஜலப்பிரவாகம் கொண்ட பிரதேசங்கள் (வச.3,4) முதல் வறட்சியான காதேஸ் வனாந்திரம் (வச.8) வரையுள்ள (எண்ணாகமம் 20:1-4) எல்லா இடங்களையும் கர்த்தருடைய சத்தம் அதிரச்செய்து, கெம்பீரத்தினால் ஒரு கன்றுக்குட்டி துள்ளுவதுபோல துள்ளச்செய்யும் (வச.6) பலத்த மரங்களை முறிந்து விழவும் (வச.5) அக்கினி பற்றியெரிகிற காடுகளையும் பிளக்க (வச.7) செய்யும் வல்லமை பொருந்தியது.
இவற்றின் ஆவிக்குரிய பொருளையும் விசுவாசிகள் அறிந்துகொள்ளுதல் அவசியம்.
1. கேதுரு மரம் - கல்லைப் போன்று மிக மிகக் கடினமானது. கடின இருதயத்தையும் தேவனுடைய வார்த்தை நொறுக்கி, மனந்திரும்பச் செய்யவல்லது (வச.5) எரேமியா 23:27.
2. அக்கினிச் சுவாலை - சோதனைகள் - சோதனைகள் மத்தியில் நம்முடன் இருந்து காக்க வல்லது தேவனுடைய வார்த்தைகள் (வச.7) தானியேல் 3:24,25, 1 பேதுரு 1:7,
3, காதேஸ் வனாந்திரம் - வறட்சியான வறுமை நிலையான வாழ்க்கையையும் கர்த்தருடைய வார்த்தை மாற்றி செழிப்பைத் தர வல்லது (வச.8; எண்ணாகமம் 20:1-11, ஏசாயா 41:17-20).
4. பெண்மான்கள் ஈனும்படி செய்தல் - கர்த்தருடைய வார்த்தை, விசுவாசிகளாகிய தேவ மக்கள் அநேக ஆத்துமாக்களை ஆதாயப்படுத்தி. கர்த்தருக்குள் அவர்களைப் பெற்றெடுத்து, சபையில் சேர்க்கும் அற்புத சுவிசேஷ ஊழியத்தைக் குறிக்கிறது (வச.9).
"கிறிஸ்து இயேசுவுக்குள் சுவிசேஷத்தினால் நான் உங்களைப் பெற்றேன்" 1 கொரி.4:15 (பவுல்).
5. தண்ணீர்கள், ஜலப்பிரவாகம் - ஜனக்கூட்டத்தைக் குறிக்கிறது. கர்த்தர் தாம் உண்டாக்கின ஜனத்தின் மத்தியில் தான் தமது வல்லமையான வார்த்தைகள் மூலம் கிரியை செய்து, தமது வசனத்தின்மூலம் பெலன் கொடுத்து அவர்களை ஆசீர்வதித்து, சமாதானம் அருளி என்றைக்கும் தமது ஜனத்திற்கு மேல் ராஜாவாக இருந்து பராமரித்து அரசாளுகிறார் (வச.3, 10, 11).
Author: Rev. Dr. R. Samuel