முக்கியக் கருத்து
- வான மண்டலத்திலிருந்து சிருஷ்டி கர்த்தாவுக்கு துதி ஏறெடுக்கப்பட வேண்டும்.
- பூமண்டலத்திலிருந்து சிருஷ்டி கர்த்தாவுக்கு துதி ஏறெடுக்கப்பட வேண்டும்.
- கர்த்தர் தமது ஜனத்திற்கு ஒரு இரட்சணியக் கொம்பை ஏற்படுத்துகிறார்.
முன்னுரை
தனி நபர், ஒரு கூட்ட மக்கள் கர்த்தரை துதித்தல் போதாது. வானத்திலும் பூமியிலும் உள்ள சர்வ சிருஷ்டிப்புகளும் அவரைத் துதிக்கவேண்டும். 'அல்லேலூயா' என்ற கர்த்தரைத் துதியுங்கள் என்று பொருள்படும் எபிரெய பதம் இந்த சங்கீதத்திலும் உபயோகப்படுத்தப்பட்டுள்ளது.
வச.1-6 - வான மண்டலத்திலிருந்து துதி
தூத கணங்கள், பரம சேனைத்திரள், சிருஷ்டிப்புகள் அனைத்தும் அவரைத் துதிக்கவேண்டும். ஏனென்றால் அனைத்தையும் படைத்தவர் அவர் அனைத்து சிருஷ்டிப்புகள் கிரமமாக இயங்கும்படி செய்து அவை நிலைத்திருக்கும்படி செய்யும் சர்வத்திற்கும் எஜமான் அவர். பரிசுத்த வேதாகமத்தில் இந்த சிருஷ்டிப்புகளெல்லாம் துதித்துக்கொண்டிருக்கின்றன என்றும் அவருடைய கட்டளைகளை நிறைவேற்றக் காத்திருக்கிறது என்றும் கூட வாசிக்கிறோம். யோபு 38:7; 1 இராஜா.22:19.
வச.7-10 - பூமண்டலத்திலிருந்து துதி
மலைகள், சமுத்திர ஆழங்கள், பூமி மற்றும் இவைகளில் வாழும் ஜீவ இராசிகள் அனைத்தும் அவரைத் துதிக்கவேண்டும். ஏனென்றால் இவற்றைப் படைத்து அவற்றை பராமரித்து தேவைகளை சந்திக்கிறவர் கர்த்தர் .ஆகவே. இந்த சிருஷ்டிப்புகள் எல்லாமே தாமாகவே கர்த்தரைத் துதிக்கின்றன என்று சத்திய வேத வசனங்கள் நமக்குத் தெரியப்படுத்துகின்றன. ஏசாயா 44:23,24, 49:13, 55:12,13.
வச.11-13 - மனுக்குலமும் அவரைத் துதிக்கவேண்டும்
இவ்விதமாக வான மண்டலம், பூமண்டலம் இவற்றிலிருக்கிற அனைத்து சிருஷ்டிப்புகளும் இடைவிடாது தாமாகவே கர்த்தரை துதிக்கின்றன. ஆனால், மனுக்குலம் மாத்திரம் கர்த்தரை துதிக்க பல ஆலோசனைகளும், புத்திமதிகளும் கட்டளைகளும் கொடுக்கப்பட வேண்டியதாயிருக்கிறது. மனுக்குலத்தின் மேன் மக்களாகிய அதிகாரிகள், பிரபுக்கள், இராஜாக்கள் முதற்கொண்டு எல்லா மனிதர்களுமாகிய முதர் வயதானவர்கள், வாலிபர், பிள்ளைகள் அனைவரும் கர்த்தரைத் துதிக்க வேண்டும்.ஏனென்றால், பூமியிலுள்ள எல்லா மகத்தான நாமங்களைவிட கர்த்தரின் நாமமே உயர்ந்தது.
தானியேல் 7:9,14; ரோமர் 14:11; ஏசாயா 45:23.
மனுக்குலம் அனைத்தும்கூட கட்டாயமாக கர்த்தரை துதிக்கும் காலம் வரும்.
வச.14 - மற்ற சிருஷ்டிப்புகளைவிட மனுக்குலமே அவரை அதிக நன்றியோடு துதிக்கவேண்டும். ஏனென்றால், அவர் தாம் தெரிந்துகொண்ட ஜனமாகிய இஸ்ரவேலுக்கும், பிறகு எல்லா மனுக்குலத்திற்கும் இரட்சிப்பின் பெலனாக தாமே மனுவாக வந்து அவர்கள் மத்தியில் வாசம்செய்தார். சங்.132:17; லூக்கா 1:75; அப்.4:12; ஏசாயா 11:1,2; 1 சாமு.2:1; 2 சாமு.22:3 (கொம்பு - பெலன்)
Author: Rev. Dr. R. Samuel