முக்கியக் கருத்து
- தேவ பிள்ளைக்கு ஒத்தாசை தேவனிடமிருந்து தான் வரும். அந்த ஒத்தாசை நித்தியமானது.
- தேவ பிள்ளை தனது ஒத்தாசைக்காக, மற்ற எந்த உறைவிடத்தையும் நோக்காமல் தனது
தேவனையே நோக்கவேண்டும்.
இது ஒரு அற்புதமான சங்கீதம்.இஸ்ரவேல் மக்கள் புனித யாத்திரை மேற்கொள்ளும்போது உபயோகப்படுத்தின பாடல்.
1. வச.1,2 - ஒத்தாசை வரும் பர்வதம்
எருசலேம் நகரம் மலைகளால் சூழப்பட்ட நகரம் என்று சங்கீதம் 125:2, லூக்கா 1:39,65 வசனங்கள் மூலம் தெரிந்து கொள்கிறோம். இஸ்ரவேல் மக்களின் தேவனாகிய கர்த்தருடைய ஆசரிப்பு ஸ்தலம் பர்வதங்கள் மேல் ஸ்தாபிக்கப்பட்டிருந்தது .ஏசாயா 2:1-3 .மற்ற புறஜாதி தேவர்கள் தங்கியிருந்த பர்வதங்களும் அங்கு இருந்தன. ஆனால். தேவ மக்களாகிய இஸ்ரவேலர் தங்கள் ஒத்தாசைக்காகவும், பாதுகாப்பிற்காகவும் தங்களுடைய தேவன் வாசமாயிருக்கும் பர்வதத்தையே நேராக நோக்கிப் பார்த்து இந்த பாடலைப் பாடுகிறார்கள். மற்ற தேவர்கள் உள்ள பர்வதங்களை பார்ப்பதில்லை. ஏனென்றால் தங்கள் தேவன் தான் வானத்தையும் பூமியையும் படைத்த வல்லமையுள்ள தேவன் மற்ற தேவர்கள் விக்கிரகங்களும், பொய்யான தேவர்களுமாயிருக்கிறார்கள்.
விசுவாசிகளாகிய நாம் நமது குடும்பம், நண்பர்கள் அல்லது ஐசுவரியம் என்பவைகளை நமக்கு ஒத்தாசை அளிக்கும் உறைவிடம் என்று கருதாமல் நம் ஆண்டவரையே ஒத்தாசைக்காக நேராக, இங்கும் அங்கும் பார்வையை திருப்பாமல், நோக்கிப் பார்க்க வேண்டும்.யோவான் 10:7-12.
2. வச.3-6 - எல்லா சூழ்நிலையிலும் ஒத்தாசை
இஸ்ரவேல் மக்கள் தங்கள் தேவன் தங்களுக்கு எல்லா சூழ்நிலைகளிலும் பாதுகாப்பு அருளுவார் என்று நம்பி இந்தப் பாடலைப் பாடியிருக்கிறார்கள். தாங்கள் மேற்கொள்ளும் புனித யாத்திரை மலைப்பாங்கான பகுதிகள், கணவாய்ப் போன்ற பள்ளத்தாக்குகள் இவற்றை கடக்க வேண்டியிருப்பதால் இப்படிப்பட்ட இடங்களில் காணப்படும் பலவிதமான பயங்கரங்களில் தங்கள் தேவன் இரவும் பகலும் உறங்காமல் பாதுகாப்பு அருளுவார் என்று விசுவாசிக்கிறார்கள். மற்ற தேவர்கள் உறங்கி விடுவார்கள். இஸ்ரவேலரை காப்பவரோ உறங்காமல், எவ்விடத்திலும் கால்கள் தள்ளாடாமல் பாதுகாப்பார் என்கிறார்கள். "உங்கள் தலையிலுள்ள மயிரெல்லாம் எண்ணப்பட்டிருக்கிறது. ஆதலால், பயப்படாதிருங்கள்; ...' என்று மத்தேயு 10:30,31 ஆம் வசனங்களில் இயேசு சொன்னபோது இந்த பாதுகாப்பை விசுவாசிகளாகிய நமக்கும் உறுதிப்படுத்துகிறார்.
3. வச.7,8 - என்றென்றைக்கும் ஒத்தாசை
இஸ்ரவேலரின் தேவன் கொடுக்கும் ஒத்தாசையும் பாதுகாப்பும் சரீரத்திற்கு மாத்திரமல்ல, அது ஆத்துமாவிற்கும் என்பதை தெளிவாக அறிந்திருந்தார்கள். மனித உதவி ஒரு சமயம் கிடைக்கும் பிறகு அது அற்றுப்போகும் தேவன் தரும் உதவியும் பாதுகாப்பும் நாம் தேவனை நோக்கிப்பார்க்கும் நாள் தொடங்கி அவரை அண்டி ஜீவிக்கும் காலமெல்லாம் கிடைக்கும். அது நித்தியமானது என்று இஸ்ரவேலர் தங்கள் விசுவாச அறிக்கையை இந்த வசனங்களில் செய்திருப்பதை வாசிக்கிறோம். விசுவாசிகளாகிய நாம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை இந்த உலக வாழ்க்கைக்கு மாத்திரம் விசுவாசியாமல் நித்தியத்திற்காகவும் நமது ஆன்மீக ஜீவியத்திற்காகவும் விசுவாசிக்க வேண்டும் என்ற சத்தியத்தை 1 கொரி.15:19 ஆம் வசனத்தல் விளக்கப்பட்டுள்ளதை நாம் வாசிக்கலாம். அதே நேரத்தில், நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து நமக்கு ஒத்தாசை அனுப்பி பாதுகாப்பு கொடுப்பதில் என்றென்றைக்கும் மாறாதவராயிருக்கிறார் என்பதையும் நாம் எபிரெயர் 13:6-8 வசனங்களில் வாசித்து தைரியம் கொள்ளலாம்.
Author: Rev. Dr. R. Samuel