சங்கீதம் 119- விளக்கவுரை

முக்கியக் கருத்து

 - வேதத்தின் மகத்துவங்கள் விவரிக்கப்பட்டுள்ளது.
 - வேதத்தின்படி நடப்பதன் பலன்கள் விளக்கப்பட்டுள்ளது.
 - வேத்தின்மேலுள்ளபக்தனின் பற்று பாடப்பட்டுள்ளது.

பொருளடக்கம் (Contents)
* பக்தனின் விசேஷ குணங்கள்.
* பக்தனின் வேண்டுதல்கள், பொருத்தனைகள், சாட்சிகள்.
* பக்தனுடைய வெற்றியின் இரகசியம்.
* பக்தன்மேல் கர்த்தர் சந்தோஷப்பட காரணங்கள்.

முன்னுரை

176 வசனங்களைக் கொண்ட இந்த சங்கீதம் 8 வசனங்கள் கொண்ட பிரிவாக 22 பிரிவுகள் அடங்கியுள்ளது. ஒவ்வொரு பிரிவும் எபிரேய மொழி எழுத்து அகராதியை (Alphabet) தலைப்பாக வைத்து வரிசைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த சங்கீதம் வார்த்தையின் சங்கீதம் அல்லது வசனத்தின் சங்கீதம் என்று அழைக்கப்படுகிறது.
இந்த சங்கீதத்தின் கருத்தான தியானம் நம்மை கர்த்தருக்குள் ஒரு ஆழமான அர்ப்பணிப்புக்கும் ஒரு ஆழமான சுத்திகரிப்புக்கும் (a deeper commitment and a deeper consecration) வழிநடத்தும்.

1. கர்த்தருடைய வசனத்தின் ஆசீர்வாதங்கள் (வச.1-8)

கர்த்தருடைய வார்த்தைகள் நடத்தும் வழிகளில் நடப்பவர் பாக்கியவான்களாக ஆசீர்வதிக்கப்பட்டிருப்பார்கள். ஏனென்றால், அவர்கள் கர்த்தருடைய வார்த்தைகளால் நீதி நியாயங்களை கற்பிக்கப்டுகிறார்கள். அவர்கள் அநியாயம் செய்வதில்லை. கர்த்தர் அவர்களின் நடைகளை ஸ்திரபடுத்தி, கைவிடாமல் காத்து வெட்கப்பட்டுப்போக விடுவதில்லை. உபாகமம் 11:13,14 யோவான் 15:7,8.

2. வாலிபர் பாவத்திலிருந்து ஜெயம் தரும் வசனம். (வச.9-16)

நாம் வாழும் தேவபக்தியற்ற சூழ்நிலை உள்ள உலகத்தில் பல இச்சைகளில் இழுக்கப்பட்டு பாவத்திற்குள்ளாக்கும் சோதனை வாலிப பிராயத்தில் அதிகமாக உணரப்படுகிறது. இந்த சோதனையிலிருந்து வாலிபர்கள் ஜெயம் பெறும் இரகசியம் இங்கே விவரிக்கப்பட்டுள்ளது. முழு இருதயத்தோடு வேத வசனத்தை கவனமாக கற்றுக்கொண்டு, கர்த்தருடைய வசனம் கூறும் ஆலோசனைகளை நமது இருதயத்தில் பதித்து வைத்தால் வசனத்தின் வல்லமை நம்மை பாவ சோதனைகளிலிருந்து ஜெயம் பெற உதவிசெய்யும். உலக மனிதர்கள் மிகுந்த செல்வத்திலும் பணத்திலும் சந்தோஷமடைவார்கள். அதுபோல தேவ மக்கள் தேவனுடைய வார்த்தையில் சந்தோஷமாக களிகூறும்போது நிச்சயம் தேவ வார்த்தை பல சோதனைகளிலிருந்து வெற்றி தரும். வேத வசனங்களை நாம் வாசிக்கும்போது கர்த்தருயை ஆவியானவர் அவற்றை விளக்கித்தருமாறு வேண்டிக்கொள்வது (12) மிகுந்த பலனைத் தரும். 2 தீமோத்தேயு 2:22,  1 யோவான் 2:14.

3. இருளில்  வெளிச்சம் தரும் வசனம்.(வச.17-24)

வேத வசனம் மாத்திரமே ஒரு மனிதனுடைய கண்களுக்கு பிரகாசத்தைக் கொடுத்து நன்மைதீமை அல்லது பாவம் பரிசுத்தம் இவற்றை தெளிவாக எடுத்துக் காட்டக்கூடாது (18,24). எபிரெயர் 4:12.
உலக மக்கள் வேதவசனத்தை அசட்டை செய்வதால் பிரகாசமற்றிருக்கிறார்கள். கர்த்தர் அவர்களை கடிந்து கொள்கிறார் (21) 2 கொரி. 4:4 வேதத்தை விரும்பும் தேவ மக்களையும் அவர்கள் விரோதித்து நிந்திக்கலாம் (22,23). ஆகவே, தேவ மனிதன் இந்த உலகில் பரதேசிகளைப்போல காணப்பட்டாலும், வேத வசனம் அவர்களுக்குப் பிழைப்பூட்டி வெளிச்சத்தைக் கொடுக்கிறது. இருண்ட உலகில் வேதவசனம் வெளிச்சத்தைக் கொடுத்து தெளிவு, அறிவு மெய்ஞானம்அடையச் செய்கிறது. 1 தீமோத்தேயு 1:7.

4. விழுந்துபோன மனிதனை உயிர்ப்பிக்கும் வசனம் (வச.25-40).

பாவத்தில் விழுந்துபோன மனிதனின் ஆத்துமா இந்த உலகத்தில் பொய் வழியை நாடி, பல சஞ்சலங்களால் கரைந்து உலகத்தோடு ஒட்டிக்கொண்டிருக்கிறது (25,28,29). வேத வசனமோ அப்படிப்பட்ட  மனிதனை உயிர்ப்பிக்கும்படியாக மெய்வழியை போதித்து விசாலத்தில் கொண்டு வந்து நிறுத்துகிறது (25,32,32).

மனிதன் தனது வழிகளை தேவனிடம் உண்மையாய் அறிக்கையிடும்போது அவருடைய பிரமாணங்களை போதிப்பார் (26). மனிதன் கர்த்தருடைய சாட்சிப் பிரமாணங்களின்மேல் பற்றுதலாயிருந்து அவற்றின் வழியாக நடப்பேன், ஓடுவேன் என்று பொருத்தனை செய்துகொள்ளவேண்டும் (31,32).
இவ்விதமாக தேவனுடைய கட்டளைகள்மேல் வாஞ்சையாயிருக்கிற மனிதன் உலக மாயையை பாராதபடி தன் கண்களை விலக்க முடியும் (36,37). கர்த்தர் தமது நீதியால் அவனை உயிர்ப்பித்து அவன் பயப்படும் நிந்தையை அவனைவிட்டு விலக்குவார் (39,40).  ரோமர் 8:10,11.

5. வசனம் தரும் இரட்சிப்புக்கு நமது பிரயாசம் (வச.41-48)

வேதவசனம் நமக்கு இரட்சிப்பு தருகிறது (41). இந்த இரட்சிப்பு நம்மில் நிறைவேற நாம் பிரயாசப்படவேண்டும். "... அதிக பயத்தோடும் நடுக்கத்தோடும் உங்கள் இரட்சிப்பு நிறைவேறப் பிரயாசப்படுங்கள்' என்று பிலிப்பியர் 2:12 ஆம் வசனத்தில் வாசிக்கிறோம். ஆகவே, நாம் வசனத்தை நம்பவேண்டும், நமக்குள் வசனத்தை காத்துக்கொள்ள வேண்டும் (42,43). கட்டளைகளை ஆராய்ந்து, பிரமாணங்களை தியானிக்க வேண்டும் (45,48). மேலும் வசனங்கள் மேல் நாம் பிரியமாயிருக்க வேண்டும். பிரபுக்கள் போன்ற பெரிய மனிதர்கள் முன்பும் கூட தைரியமாக வெட்கப்படாமல் வசனத்தின்படி சாட்சி கூறவேண்டும் (46). மத்தேயு 10:18-20 2 தீமோத்.2:15.

6. வசனம் தரும் ஆறுதலும் தேறுதலும் (வச.49-56)

தேவ மக்களை இந்த உலகில் அகந்தைக்காரர் பரியாசம் பண்ணி சிறுமைபடுத்தும்போது அந்த துன்மார்க்கர் நிமித்தம் வரும் பயத்திலிருந்து வசனம் தேவ மக்களை விடுவிக்கிறது. அது மாத்திரமல்லாது, ஆறுதலையும் தேறுதலையும் கொடுத்து உயிர்ப்பிக்கிறது (50,52) 2 தெச.3:1-3.

ஆகவே, தேவ மக்கள் தாங்கள் பரதேசியாய் வாழும் இப்பூமியில் வேதவசனத்தை தங்களுக்கு கீதமாகவும், நம்பிக்கையாகவும் பாராட்டி இராக்காலங்களில் கூட மறவாமல் கைக்கொள்ள ஜாக்கிரதையாக இருக்கவேண்டும் (49,54,55).

7. நல்வழியில் நடத்தும் வேத வசனமே வாழ்க்çயில் முக்கியம் .உபத்திரவமும் நன்மையாக முடிந்தது(வச.57-72).

கர்த்தரே என் வாழ்க்கையில் என் பங்கு. ஏனென்றால் ,அவர் நல்லவர் (57, 68). எனக்கு நன்மை செய்கிறவர். கர்த்தருடைய வசனமே அநேகமாயிரம் பொன் வெள்ளியைப் பார்க்கிலும் எனக்கு நல்லது. ஏனென்றால், கர்த்தர் தம் வசனத்தின்படி என் வாழ்க்கையில் என்னை நன்றாய் நடத்துகிறார் (65,72). என் வாழ்க்கையில் நான் உபத்திரவப்பட்டதன் மூலம் தவறான வழியிலிருந்து நல்ல வழிக்குத் திரும்ப வேத பிரமாணங்களைக் கற்றுக்கொண்டேன். ஆகவே என் உபத்திரவமே உனக்கு நன்மையாக முடிந்தது (67,71). துன்மார்க்கர் என்னை எதிர்த்தாலும்கூட நான் என் வழிகளைக் கர்த்தருடைய கற்பனைகளுக்கு நேராக திரும்பி, பாதி ராத்திரியிலும் என் தேவனை துதிக்க நான் எழுந்திருப்பேன் என்று நீதிமான் அறிக்கையிடுகிறான் (59-62). ஏசாயா 48:10, எபிரெயர் 12:10.

8. கர்த்தாவே நீர் என்னை உருவாக்கிர், காத்துக்கொள்வீர், என் சத்துருக்களுக்கு எப்போது நியாயம் செய்வீர் ?    (வச.73-88)

கர்த்தாவே உம்முடைய கரங்கள் என்னை உருவாக்கினபடியால் நான் பிழைத்திருக்கும்படி உமது இரக்கங்கள் எனக்குக் கிடைக்கும் (73,76,77). என்னை கெடுக்கப்பார்க்கும் அகங்காரிகள் வெட்கப்பட்டுபோவார்கள் (78). ஆனால், உமக்கு பயப்படுகிறவர்கள் என்னண்டை வந்து சந்தோஷப்படுவார்கள் (74,79). உமது பிரமாணங்களில் என் இருதயம் உத்தமமாயிருக்கும் (80). என்னைத் துன்பப்படுத்துகிறவர்களுக்கு எப்போது நியாயம் செய்வீர்? தேவ மக்கள் தங்களுக்கு தேவன் நியாயம் செய்யும்படி கேட்பது நியாயமானதே என்று வேத வசனங்களில் தெரிந்துகொள்ளுகிறோம். எரேமியா 1:5, வெளி.6:10.

9. வசனம் அழியாத நித்தியமானது. என்னை வசனம் ஞானவானாக்கிற்று (வச.89-104).

வேத வசனம் என்றைக்கும் உன்னதத்தில் நிலைத்திருந்து இந்த பூமியை உறுதிப்படுத்திக்கொண்டிருக்கிறது (89,90). "வானமும் பூமியும் ஒழிந்துபோம், என் வார்த்தைகளோ ஒழிந்து போவதில்லை' என்று இயேசு மத்தேயு 24:35 ஆம் வசனத்தில் கூறியிருகிறார். "நித்திய ஜீவ வசனங்கள் உம்மிடத்தில் உண்டே' என்று யோவான் 6:68 ஆம் வசனத்தில் ஆண்டவரை நோக்கி பேதுரு கூறினார். இந்த வசனங்களாகிய வேதம் எனக்கு மனமகிழ்ச்சியாயிருப்பதால் நான் அழிந்துபோகவில்லை (92). இந்த வசனமாகிய கற்பனைகள் என்னை என் சத்துருக்களைவிட அதிக ஞானவானாக்கிற்று (98). எனக்கு போதித்தவர்களைவிட அதிக அறிவுள்ளவனாக்கிற்று (99). முதியோர்களைவிட ஞானமுள்ளவனாக்கிற்று (100). உமது வசனமாகிய கட்டளைகள் எனக்குத் தேனிலும் இனிமையாக இருந்து என்னை உணர்வடையச் செய்தது. அதனால், நான் பொய் வழிகளுக்கும் பொல்லாத வழிகளுக்கும் என்னை விலக்கிக்கொள்கிறேன் (101-104).

10. வசனமே வழிகாட்டும் தீபம், வீண் சிந்தனைகளை வெறுக்கச் செய்கிறது (வச.105-120)

நான் நடந்து செல்லும் வழிக்கு வேதவசனம் தீபமாக இருந்து வெளிச்சம் காட்டுகிறது (105). ஆகவே உமது நீதி நியாயங்களில் நடப்பேன் என்று உறுதி எடுக்கிறேன் (106). உமது வேதத்தில் பிரியமாயிப்பதால் வீண் சிந்தனைகளை வெறுப்பேன் (113). உமது வசனம் காட்டும் வெளிச்சத்தின்படி வழிநடக்காமல் விலகுகிறவர்களை நீர் மிதித்துப் போடுகிறீர் (118). நெகேமியா 10:29-31.

11. பக்தனின் நியாயமான வேண்டுதல் (வச.121-136)

உமது நீதிக்கும் இரட்சிப்புக்கும் காத்திருக்கிறேன் (123). உமது வேதத்தை பொன்னிலும் பசும்பொன்னிலும் அதிகமாக நேசிக்கிறேன், பொய் வழிகளை வெறுக்கிறேன் (127, 128). ஆகவே, என்னை அகங்காரிகள் ஒடுக்காமல் காத்துக்கொள்ளும் (122,133,134). பிரமாணங்களை மீறுகிறவர்கள் மேல் உமது நீதியை செலுத்த காலம் வந்தது என்று அறிந்திருக்கிறேன் (126). வெளிப்படுத்தல் 11:18. உம்முடைய வேதத்தை காத்து நடவாத மனுஷருக்காக துக்கித்து பாரப்படுகிறேன்.  எரேமியா 9:1.

12. கர்த்தருடைய வசனம் உண்மையென்று நிரூபிக்கப்பட்டவை. அவற்றை தியானிக்க குறித்த நேரத்திற்கு முன்பே ஆயத்தப்படுவேன் (வச.37-152)

கர்த்தாவே, உமது நியாயத்தீர்ப்புகளும் கட்டளைகளுமான வசனம் புடமிடப்பட்டு உண்மையென்று நிரூபிக்கப்பட்டுள்ளது (137-140). ஆகவே, அவற்றை தியானிக்கும் வைராக்கியம் எனக்கு இருக்கிறது. அதிகாலையிலும், குறித்த நேரத்திற்கு முன்பேயும் நான் ஆயத்தமாக காத்திருப்பேன் (139,147,148). நான் சிறுமையும் அசட்டை பண்ணப்பட்டவனுமாயிருந்தாலும், தீவினையை பின்பற்றுகிறவர்கள் சமீபித்து வந்தாலும், இக்கட்டு என்னைப் பிடித்தாலும், நான் உமது கற்பனைகளாகிய வசனத்தில் மன மகிழ்ச்சியாயிருப்பேன் (143,150-152). யோவான் 2:17, மாற்கு 1:35, அப்போஸ்.5:21;

13. எனக்காக வழக்காடி மீட்டுக்கொள்ளும்  (வச.153-160)

எனக்காக நீர் வழக்காடி என்னை மீட்டுக்கொள்ளும். உம்முடைய வார்த்தையின்படியே என்னை உயிர்ப்பியும் (154). பாவத்தில் விழுந்த மனுபுத்திரர்களுக்காக பரிந்துபேசி அவர்களை மீட்கிறவர் தேவகுமாரனாகிய இயேசு கிறிஸ்து என்று புதிய ஏற்பாட்டில் வாசிக்கிறோம். இந்த இரட்சகருக்காகத்தான் பழைய ஏற்பாட்டில் தாவீதைப்போன்ற பக்தர்கள் ஜெபித்திருக்கிறார்கள். யோபும்கூட "ஆ, என் வழக்கைக் கேட்கிறவன் ஒருவன் இருந்தால் நலமாயிருக்கும்; ...' என்று யோபு 31:35 ஆம் வசனத்தில் கதறியிருக்கிறார். இந்த ஜெபத்தின் பதிலைத்தான் 1 தீமோத்.2:5,6 வசனங்களில் 
"தேவன் ஒருவரே, தேவனுக்கும் மனுஷருக்கும் மத்தியஸ்தரும் ஒருவரே. எல்லாரையும் மீட்கும்பொருளாகத் தம்மை ஒப்புக்கொடுத்த மனுஷனாகிய கிறிஸ்து இயேசு அவரே ...' என்று வாசிக்கிறோம். மேலும், 1 யோவான் 2:1,2 வசனங்களிலும் "... ஒருவன் பாவஞ்செய்வானானால் நீதிபரராயிருக்கிற இயேசுகிறிஸ்து நமக்காகப் பரிந்து பேசுகிறவராயிருக்கிறார். நம்முடைய பாவங்களை நிவிர்த்தி செய்கிற கிருபாதாரபலி அவரே...' என்றும் வாசிக்கிறோம். ஆகவே, கர்த்தர் எழுதப்பட்ட தமது வார்த்தையின்படியே, 
"அக்கிரமங்களில் மரித்தவர்களாயிருந்த நம்மைக் கிறிஸ்துவுடனேகூட உயிர்ப்பித்தார்' என்று எபேசியர் 2:5 ஆம் வசனத்தில் எழுதப்பட்டுள்ளது.

14. காணாமற்போன ஆட்டைப்போன்ற என்னை கண்டுபிடியும். உம் வசனம் என்னை வழிநடத்தட்டும் (வச.161-176)

பிரபுக்கள் போன்ற மேலான மனித சக்திகள் என்னை துன்பப்படுத்தினாலும் நான் உம் வேதத்தை நேசிப்பேன் என்று பொருத்தனை செய்கிறேன் (161,162,167,174). காணாமற்போன ஆடுபோல வழிதப்பி நான் நடக்கும்போது என்னை நீர் கண்டுபிடித்து உமக்காக திருப்பிக்கொள்ளும் (176). காணாமற்போன ஆட்டை கண்டுபிடிப்பது போன்று மனந்திரும்பும் பாவியை சேர்த்துக்கொள்வதே பரலோகத்தில் சந்தோஷத்தைக் கொடுக்கும் என்று ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து லூக்கா 15:4-7 ஆம்வசனங்களில் விளக்கியிருக்கிறார்.
"நாமெல்லாரும் ஆடுகளைப்போல வழிதப்பித் திரிந்து, அவனவன் தன் தன் வழியிலே போனோம். கர்த்தரோ நம்மெல்லாருடைய அக்கிரமத்தையும் அவர்மேல் விழப்பண்ணினார்' என்று ஏசாயா 53:6 ஆம் வசனத்தில் வழிதப்பிபோன பாவிகளுக்காக இயேசு கிறிஸ்து பலியானதை குறித்து வாசிக்கிறோம்.

வழிதப்பிப்போன, அவ்வப்போது வழிவிலகிப்போகிற நம்மை நேர்வழியில் நடக்க சரிபடுத்துவது வேத வசனம் ஆகும் (173). 

Author: Rev. Dr. R. Samuel



Topics: Tamil Reference Bible Psalm

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download