முக்கியக் கருத்து
- தெரிந்துகொள்ளப்பட்ட ஜனம் கர்த்தரை துதித்து அவர் நாமத்தை பிரஸ்தாபப்படுத்தவேண்டும்.
- தெரிந்துகொண்ட தம் ஜனத்திற்கு தமது வாக்குத்தத்தத்தை நிறைவேற்றினார்.
- தெரிந்துகொண்டதன் நோக்கம் தம் ஜனம் தமது நியாயப்பிரமாணங்களை கைக்கொள்ளவேண்டும் என்பதே.
1. கர்த்தரைத் துதித்து பிரஸ்தாபப்படுத்த அழைப்பு (வச.1-5).
கர்த்தர் ஆபிரகாமை அழைத்து அவனுடைய வாக்குத்தத்தத்தின் குமாரனாகிய ஈசாக்கின் புத்திரன் யாக்கோபை தமக்கென தெரிந்துகொண்டு அவன்மூலம் இஸ்ரவேல் என்றும் பெரிய ஜாதியை உண்டாக்கினார். இந்த தெரிந்துகொள்ளப்பட்ட சந்ததி தேவனை துதித்து அவருடைய நாமத்தை உலக முழுவதும் பிரஸ்தாபப்படுத்த வேண்டும் என்று அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பழைய ஏற்பாட்டில் சொல்லப்படும் இந்த இஸ்ரவேல் புத்திரருக்கு ஒப்பான, ஆவிக்குரிய இஸ்ரவேலராகிய புதிய ஏற்பாட்டு விசுவாசிகளையும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து தெரிந்துகொண்டு இரட்சித்து, தமது நாமத்தையும் நற்செய்தியையும் உலக முழுவதும் பிரஸ்தாபப்படுத்த இயேசுவே கட்டளை கொடுத்திருக்கிறார். (மத்தேயு 28:18-20)
2. தமது ஜனத்தை உடன்படிக்கையின்மூலம் தெரிந்துகொண்டார் (வச.7-15).
ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு என்ற சொற்ப ஜனங்களாயிருந்தவர்களைக் கர்த்தர் தமது உடன்படிக்கையின் மூலம் தெரிந்துகொண்டார். பாலும் தேனும் ஓடுகிற கானான் தேசத்தை அவர்களுக்கு சுதந்திரமாகத் தருவேன் என்று வாக்குத்தத்தம் கொடுத்து அழைத்தார். ஒரு ஜனத்தைவிட்டு மறுஜனத்தண்டைக்கு அவர்களை நடத்திச் சென்று அதிசய அற்புதங்களை அவர்களுக்கு நடப்பித்து ஒருவரும் அவர்களை ஒடுக்காமல் பாதுகாத்து வழிநடத்தினார். புதிய ஏற்பாட்டிலும் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து தமது சபையை பரலோக வாக்குத்தத்தங்கள் மூலம் தெரிந்துகொண்டுள்ளார். தம்மை விசுவாசிக்கும் பக்தர்களுக்கு அதிசய அற்புதங்களைச் செய்து சத்துருக்களினின்று பாதுகாப்பையும் அளிக்கிறார்.
கலாத்தியர் 3:14, எபேசியர் 1:3, மத்தேயு 16:18, பிலிப்பியர் 4:6,7.
3. தமது ஜனத்தை புடமிட்டு உருவாக்குகிறார் (வச.16-24)
கர்த்தரே தமது ஜனங்களுக்கு சில நெருக்கங்களைக் கொடுத்து அவர்களை புடமிட்டு தமது திட்டம் நிறைவேற உருவாக்குகிறார். தமது ஜனம் இருந்த தேசத்தில் பஞ்சத்தை வருவித்து, எகிப்து என்னும் தேசத்தில் சென்று வாழவும் அங்கு அடிமைகளாக பல வருடங்கள் கழிக்கவும் செய்தார். தமது வாக்குத்தத்தம் நிறைவேறுமளவும் அதைப் பெற்றுக்கொள்ள பொறுமையுடன் காத்திருக்கும்படி அவருடைய வசனம் அவர்களை புடமிட்டது. ஆனாலும், கர்த்தர் தமது ஜனத்தைப் பலுகப்பண்ணி, அவர்களை அடிமைகளாக நடத்தினவர்களைப் பார்க்கிலும் பலவான்களாக்கினார். விசுவாசிகளாகிய நம்முடைய வாழ்க்கையிலும் பல சோதனைகளை நாம் சந்தித்தாலும் அவை நம்முடைய விசுவாச பரீட்சையாக இருந்து நமக்குள் பொறுமை என்னும் தெய்வீக குணத்தை உருவாக்கவே கர்த்தர் அனுமதிக்கிறார். யாக்கோபு 1:2,3, 1 பேதுரு 1:7.
4. சத்துருவை தாழ்த்த தமது ஜனங்களை விடுவித்தார் (வச.25-38)
தமது ஜனமாகிய இஸ்ரவேலரை அடிமைகளாக வைத்து அவர்களைக் கொடுமைப்படுத்தின எகிப்தியர்களிடமிருந்து இஸ்ரவேல் ஜனத்தை மீட்க மோசே என்னும் இரட்சகனைக் கர்த்தர் அனுப்பினார். எகிப்தியராகிய சத்துருக்களைப் பத்து வாதைகளினால் வாதித்து, தமது ஜனங்களை அவர்கள் நடுவினின்று வெற்றிகரமாக விடுதலையாக்கி வெளியே கொண்டு வந்தார்.பாவத்திற்கு அடிமைப்பட்டிருக்கிற நம்மையும் கூட இயேசு கிறிஸ்து என்ற இரட்சகர் மூலம் பிசாசை சிலுவையில் வென்று நம்மை இரட்சித்து கர்த்தர் விடுதலையாக்கி பரிசுத்த ஜீவியத்திற்காக வெளியே கொண்டு வந்திருக்கிறார்.ரோமர் 6:17-23
5. வனாந்திர பாதையில் அற்புத வழிநடத்துதல் (வச.39-45)
எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து விடுவித்து வெளியே கொண்டு வரப்பட்ட தமது ஜனத்தை வனாந்திர வழியாக நடத்திக் கொண்டு வந்தார். வாழ்வாதாரமே இல்லாத, பல பயங்கரங்கள் சூழ்ந்த வனாந்திரத்தில் கர்த்தர் அவர்களுக்கு பகலில் மேக ஸ்தம்பமாகவும், இரவில் அக்கினித் தூணாகவும் இருந்து வழிகாட்டினார். வான அப்பத்தினாலும் இறைச்சியினாலும் அவர்கள் கேட்டதை கொடுத்து போஷித்தார். கடைசியாக அவர்களைப் பாலும் தேனும் ஓடுகிற கானான் தேசத்திற்குக் கொண்டுவந்து அங்கே இருந்த புறஜாதிகளை விரட்டி, தமது ஜனத்திற்கு அந்த தேசத்தை சுதந்திரமாகக் கொடுத்தார். இவையெல்லாவற்றின் நோக்கமும், தமது ஜனம் தமது நியாயப்பிரமாண கட்டளைகளைக் கைக்கொள்ளவேண்டும் என்பதே.
இரட்சிக்கப்பட்ட விசுவாசிகளாகிய நம்மையும் இவ்வனாந்திரம் போன்ற உலக வாழ்க்கையில் கர்த்தரே போதுமானவராக இருந்து நம்மை போஷித்து பராமரிக்கிறார். ஆவிக்குரிய , சரீர தேவைகளை அளித்து அவருடைய கற்பனைகளை கைக்கொள்ளும் பரிசுத்த கூட்டமாக நம்மை உருவாக்கி, தமது நித்திய ராஜ்ஜியத்தில் நம்மை சேர்க்க ஆயத்தப்படுத்துகிறார்.
Author: Rev. Dr. R. Samuel