முக்கியக் கருத்து
- தனிப்பட்ட வாழ்க்கையில் தூய்மை.
- குடும்ப வாழ்க்கையில் தூய்மை.
- தேசத்தை ஆளுவதிலும் தூய்மை.
முன்னுரை
தாவீது ராஜா இஸ்ரவேலரை ஆளும் ஒரு இராஜா இன்னவிதமான தூய்மையான இதயத்தோடு இருக்கவேண்டும் என்பதை தனக்கு வகுத்துக்கொள்ளுகிற பிரமாணங்களைக் கொண்டு அறிவிக்கிறான்.
இஸ்ரவேலின் கர்த்தர் தூய்மையானவரானபடியால் இஸ்ரவேலின் இராஜாவாகிய தானும் தூய்மையாய் தன் ஜனங்களைத் தூய்மையில் நடத்தவேண்டும் என்று தன்னை ஒப்புக்கொடுத்துக்கொள்ளும் ஒரு பொருத்தனையின் சங்கீதமாக இருக்கிறது.
"... கர்த்தர், நான் பரிசுத்தர்; ஆகையால், நீங்களும் பரிசுத்தராயிருப்பீர்களாக' லேவியராகமம் 11:45
என்ற வசனமே தாவீதின் இந்த பொருத்தனைக்கு ஆதாரம்.
1. தனிப்பட்ட வாழ்க்கையில் தூய்மை (வச.1,2,3,4)
இரக்கமும், நியாயமும் கர்த்தருடைய, ராஜரீகத்தின் ஆதாரமாயிருக்கிறபடியால், கர்த்தரைத் துதிக்கும்பொழுது இந்த குணாதிசயங்களின் மேன்மையையும் பாட தாவீது தூண்டப்படுகிறான் (வச.1). தான் அவ்விதம் பாடும்போது தேவன் தன்னிடம் வருவார் என்ற எதிர்பார்ப்பில்,
"... எப்பொழுது என்னிடத்தில் வருவீர்!' என்று கேட்கிறான் (வச.2).
தனது தனிப்பட்ட வாழ்க்கையில் தீங்கானவைகளை தன் கண்முன் வைக்காமல் (வச.3), மாறுபாடான இருதயத்தையும் தன்னைவிட்டு அகற்றுவதாக தாவீது பொருத்தனை செய்வதை பார்க்கிறோம்.
"தீமையைப் பார்க்கமாட்டாத சுத்தக்கண்ணனே, அநியாயத்தை நோக்கிக்கொண்டிருக்கமாட்டீரே; ...' என்று ஆபகூக் 1:13 ஆம் வசனத்தில் கர்த்தரை நோக்கி ஆபகூக் தீர்க்கதரிசி கூறுவதை வாசிக்கிறோம். தெய்வபயமற்றவர்கள் தங்கள் கண்களினால் ஒழுக்கமின்மை, வன்முறை பால் உணர்ச்சி படங்கள் மற்றும் கேடான முறையில் சிற்றின்பம் அளிக்கக்கூடியவைகளால் தங்கள் இருதயத்தைக் கறைபடுத்திக் கொண்டு மாறுபாடாக நடக்கிறார்கள். விசுவாசிகளாகிய நாமும் அப்படிப்பட்ட தீமையானவைகளை நம் கண்கள் முன்னின்று அகற்றி நம்மை நாமே சோதனையில் விழாமல் பாதுகாத்துக் கொள்ளவேண்டும்.
2. குடும்ப வாழ்க்கையில் தூய்மை (வச.2,7)
"... என் வீட்டிலே உத்தம இருதயத்தோடு நடந்துகொள்ளுவேன்' என்று (வச.2) தாவீது தனது குடும்ப வாழ்க்கையிலும் தனிப்பட்ட வாழ்க்கையின் தூய்மையை கொண்டுவருவதைப் பார்க்கிறோம். தேசத்தை ஆளும் இராஜா தனது வீட்டை நேர்மையாக நடத்திச் செல்லக்கூடிய ஊழியனாக இருக்கவேண்டும்.
"கண்காணிப்பை விரும்புகிறவன் ... தன் சொந்தக் குடும்பத்தை நன்றாய் நடத்துகிறவனு, ... மாயிருக்க வேண்டும்'என்று 1 தீமோத்தேயு 3:1-5 வசனங்களில் தேவ ஊழியரைப்பற்றி வாசிக்கிறோம்.
3. தேசத்தை ஆளுவதில் தூய்மை (வச.6,7,8)
தேவனுடைய இராஜ்ஜியம் தூய்மையானது. தேவனுடைய இராஜ்ஜியத்திலிருந்து தீமையும், தீமை செய்பவர்களும் அகற்றப்படுவார்கள் என்று 1 தெச.1:8-10, வெளி.21:27, 22:15 வசனங்களில் வாசிக்கிறோம். தாவீது இராஜாவின் வைராக்கியம் தேசத்தில் உண்மையற்றவர்கள் (வச.6) கபடு செய்கிறவர்கள் (வச.7), பெரு நெஞ்சுள்ளவர், மேட்டிமைக் கண்ணுடையவர் (வச.5) இருக்கக்கூடாது. ஆகவே, தேசத்தை சுத்திகரிக்கும் விதத்தில் அவர்களை சங்கரித்துப்போடுவேன் என்று கூறுகிறான் (வச.8).
அப்படிப்பட்ட வைராக்கியம் விசுவாசிகளாகிய நமக்கும் காணப்படுமானால் நாம் தேசத்தில் அக்கிரமமும் வஞ்சகமும் தொலைய ஊக்கமாக ஜெபிப்போம். சத்திய சுவிசேஷத்தை பிரஸ்தாபப்படுத்தி தேவனுடைய பரிசுத்தத்தை நிலைநாட்ட வைராக்கியமாக செயல்படுவோம்.
Author: Rev. Dr. R. Samuel