ஒரு திருச்சபையில் இந்த WWW என்பதை கருப்பொருளாக கொண்டு ஒரு சின்னத்தை அமைத்துள்ளனர். அதாவது வார்த்தை, வழிபாடு (ஆராதனை) மற்றும் வாழ்க்கைமுறை (சாட்சி). ஆம், இது கிறிஸ்துவின் சரீரத்தின் நோக்கத்தை அழகாக சுருக்கமாகக் கூறுகிறது.
வார்த்தை:
திருச்சபை என்பது சத்தியத்தின் தூண் (1 தீமோத்தேயு 3:15). பழங்கால கட்டிடங்களில், முழு கட்டிடத்தையும் தாங்கும் மைய தூண் ஒன்று இருந்தது. தேவனுடைய வார்த்தையை விசுவாசிகள் தங்கள் தனிப்பட்ட வாழ்க்கையிலும், குடும்ப வாழ்க்கையிலும் படித்து, புரிந்துகொண்டு, நடைமுறைப்படுத்த வேண்டும் மற்றும் சமுதாயத்தில் வேதாகம சத்தியத்தின்படி வாழ வேண்டும். அப்படி வாழும் மக்கள் பெரோயா விசுவாசிகளைப் போல உன்னதமானவர்களாகவும், நீதியுள்ளவர்களாகவும், உண்மையுள்ளவர்களாகவும் இருப்பார்கள் (அப்போஸ்தலர் 17:11). வார்த்தை அடிப்படையிலான உலகக் கண்ணோட்டம், மனம் புதுப்பிக்கப்படுவதன் மூலம் பெறப்படுகிறது மற்றும் தனிநபர்கள், சமூகங்கள் மற்றும் தேசங்களில் என ஒரு பெரிய வாழ்வியல் மாற்றத்தை ஏற்படுத்துகிறது (ரோமர் 12:2). வார்த்தையைப் பிரசங்கிக்க வேண்டும் மற்றும் சபையிலும் உலகிலும் சத்தியத்தைப் பிரகடனப்படுத்த வேண்டும்.
ஆராதனை:
உள்ளூர் திருச்சபை என்பது தேவனை ஆராதிக்க விசுவாசிகளின் அழைக்கப்பட்ட சமூகமாகும். தேவன் பரிசுத்தமானவர், எல்லா புகழுக்கும், மரியாதைக்கும், வணக்கத்திற்கும் தகுதியானவர். ஆராதனை என்பது சரீரம், ஆத்துமா மற்றும் ஆவி என அனைத்தையும் உள்ளடக்கியது. மேலும், ஆராதனை என்பது குறிப்பிட்ட இடங்கள் அல்லது மணிநேரங்களுக்கு மட்டும் அல்ல. உண்மையில், விசுவாசிகளுக்கு ஆராதனை என்பது ஒரு வாழ்க்கை முறையாக இருக்க வேண்டும். அவர்கள் எதைச் செய்தாலும் அதை தேவனுக்காக செய்கிறார்கள். அப்படி செய்யும் அவர்களுடைய நற்செயல்கள் உலகத்திற்கு வெளிச்சமாகவும், பூமிக்கு உப்பாகவும் இருப்பதால் கிறிஸ்தவர் அல்லாதவர்கள் கூட இவற்றையெல்லாம் கண்டு பரலோகத் தகப்பனை கனம் பண்ண தூண்டுதலாக அமைகிறது (மத்தேயு 5:15-17). யாத்திராகமம் 32ல் படிப்பது போல், ஆரோன் மக்களை பாவத்திற்கு வழிநடத்தியதால், வார்த்தையிலிருந்து துண்டிக்கப்பட்ட ஆராதனை சிலை வழிபாடாக மாறியதே (யாத்திராகமம் 32). ஆராதனை என்பது தேவனுக்கு காணிக்கை கொடுப்பதும் அடங்கும். அப்போஸ்தலர்களின் நாட்களைப் போலவே அப்பம் பிட்பது என்பது ஆராதனையின் ஒரு பகுதியாகும் (அப்போஸ்தலர் 2:42-47).
சாட்சி:
உக்கிரமாக எரியும் விளக்கு அதிக தூரத்திற்கு வெளிச்சத்தைக் கொடுக்கும். யோவான் ஸ்நானகன் எரியும் மற்றும் பிரகாசிக்கும் ஒளி (யோவான் 5:25). அவருடைய தேவபக்தியும், பரிசுத்தமும், தைரியமும், போதனையும் வனாந்தரத்தில் அவரின் வார்த்தையைக் கேட்க மக்களை ஈர்த்தது. உள்ளூர் திருச்சபை மலையின் மேல் உள்ள நகரம் போன்றது (மத்தேயு 5:14). பரிசுத்த ஆவியால் அதிகாரம் பெற்ற விசுவாசிகள் தங்கள் வீடுகளிலும், சுற்றுப்புறங்களிலும், பணியிடங்களிலும் கர்த்தருக்குப் பரிசுத்த சாட்சிகளாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்தியோக்கியா திருச்சபை செய்தது போல், சாட்சியமளிக்கும் சபைகள் மிஷனரிகளை மற்ற எட்டாத இடங்களுக்கு அனுப்புகிறது (அப்போஸ்தலர் 13:1-2).
நான் வார்த்தையைப் பெற்றிருக்கிறேனா, ஆராதனை வாழ்க்கை முறையைக் கொண்டிருக்கிறேனா, அவருடைய சாட்சியாக வாழ்கிறேனா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்