மோசேயின் வாழ்க்கையை வடிவமைத்த பெண்கள்
வேதாகமத்தில், தேவனுடைய திட்டம் மற்றும் நோக்கத்தில் பெண்களுக்கு ஒரு மூலோபாய பங்கு உள்ளது. அதிசயங்களையும் அற்புதங்களையும் செய்யும் விசுவாசமுள்ள பெண்கள் அனைவருக்காகவும் தேவனைத் துதியுங்கள். மீட்பின் திட்டத்தில், தேவன் ஆபிரகாமின் பேரனான யாக்கோபின் சந்ததியினரிடமிருந்து ஒரு தேசத்தை உருவாக்குவார். எனினும், வாக்குப்பண்ணப்பட்ட தேசம் அங்கு குடியிருந்த பொல்லாத தேசங்களைத் துரத்தத் தயாராகும் வரை அவர்கள் எகிப்தில் அடிமைகளாக இருப்பார்கள் (ஆதியாகமம் 15:16-21). மோசேயை தலைவராகவும், விடுவிப்பவராகவும், தீர்க்கதரிசியாகவும், பிரமாணத்தை வழங்குபவராகவும் தேவன் தயார் செய்தார். கர்த்தருக்குப் பயன்படும்படியாக மோசேயை வடிவமைக்க தேவன் மோசேயின் வாழ்க்கையில் பல பெண்களைப் பயன்படுத்தினார்.
1) சிப்பிராள் பூவாள்:
எகிப்திய பார்வோன் அனைத்து ஆண் குழந்தைகளையும் கொல்ல மருத்துவச்சிகளுக்கு கட்டளையிட்டான். ஆனால் மருத்துவச்சிகளான சிப்பிராளும் பூவாளும் தேவனுக்குப் பயந்ததால் பொல்லாத காரியத்தைச் செய்ய மறுத்துவிட்டனர் (யாத்திராகமம் 1:15). தேவனுடைய திட்டத்தில் இருந்தபடியால், மோசேயின் உயிர் கர்த்தரால் பாதுகாக்கப்பட்டது.
2) தாய் யோகெபேத் (யாத்திராகமம் 6:20):
மோசேயின் தாய் விசுவாசத்தில் வலுவான ஒரு பெண். அவள் மோசேயை தேவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட மகன் என்பதை உணர்ந்து மூன்று மாதங்கள் ராஜாவின் கட்டளைக்குப் பயப்படாமல் அவனை ஔித்து வைத்தாள் (எபிரெயர் 11:23). பார்வோனுடைய மகளால் சம்பளம் கொடுத்து மோசேயை வளர்க்கும் தாயாக இருக்க தேவன் உதவினார். அது அவனுக்குள் தேவபக்தியை வளர்க்க அத்தாய்க்கு உதவியது.
3) சகோதரி மிரியம் (யாத்திராகமம் 2:1-10):
பன்னிரண்டு வயது மிரியம் ஒரு புத்திசாலிப் பெண். ஒரு கூடையில் புதர்களுக்கு நடுவே மூன்று மாத குழந்தைக்கு என்ன சம்பவிக்கும் என நின்று பார்த்துக் கொண்டிருந்தாள். பார்வோனின் மகள் மோசேயைப் பார்த்ததும், மிரியம் பேச முன்வந்தாள், அதுமட்டுமல்ல, ஒரு எபிரெய பெண்ணை அக்குழந்தையை வளர்க்கும் பெற்றோராகக் கொண்டுவர அனுமதி பெற்றாள். பின்னர் புத்திசாலித்தனமாக, அவள் மோசேயின் தாயான யோகெபேத்தை அக்குழந்தையை வளர்க்க வரும் தாயாக அழைத்து வந்தாள்.
4) பார்வோனின் மகள்:
தேவன் பார்வோனின் மகளையும் அவளுடைய சிநேகிதிகளையும் நைல் நதிக்கு அனுப்பினார், அவர்கள் மோசேயைக் கண்டுபிடிக்கும் இடத்தை அடைந்தனர். அவள் மோசேயின் வளர்ப்புத் தாயாகவும், படிப்பிற்கு நிதியளிப்பவராகவும், பயனாளியாகவும் ஆனாள்.
5) மோசேயின் மனைவி:
மோசேயின் மனைவி சிப்போராள் ஒரு புத்திசாலி பெண். மீதியானில் வாழ்ந்தவரை மோசே மகனுக்கு விருத்தசேதனம் செய்யப்படவில்லை (யாத்திராகமம் 4:24-26). உடன்படிக்கையை நிறைவேற்றாததற்காக மோசே தண்டனைக்கு ஆளாகி இருக்க வேண்டியது ஆனால் இமைப்பொழுதில் கைப்பற்றி காப்பாற்றி அவள் தன் மகனுக்கு விருத்தசேதனம் செய்தாள்.
தேவனின் திட்டத்தில் பெண்களின் பங்களிப்புக்காக நான் தேவனுக்கு நன்றி கூறுகிறேனா?
Author : Rev. Dr. J. N. Manokaran