ஆவிக்குரிய வாழ்க்கை, தனிப்பட்ட வாழ்க்கை, குடும்ப வாழ்க்கை, ஆலயம் மற்றும் பொதுவெளி என அனைத்திற்கும் நிறைவான மையப்புள்ளியாக இருக்கும் இஸ்ரவேலின் பாவத்தைக் கண்டு எசேக்கியேல் திகைத்தார். பாபிலோனில் குடியேறியவர்களில் எசேக்கியேலும் ஒருவராக இருந்தார். கிமு 592 செப்டம்பர் 17 அன்று, இஸ்ரவேலின் மூப்பர்கள் அவரைச் சந்திக்க வந்தனர். அப்போது எசேக்கியேல் தனது தலைமுடியால் பிடிக்கப்பட்டு எருசலேமுக்கு கொண்டு செல்லப்பட்டார், எருசலேம் ஆலயத்தில் அவர் நான்கு அருவருப்புகளை கவனிக்க முடிந்தது. எசேக்கியேல் ஒரு ஆசாரியன் மற்றும் எருசலேம் ஆலயத்தை நன்கு அறிந்தவர்.
1) ஆவிக்குரிய வெளி:
பரிசுத்த இடமான எருசலேம் ஆலயத்தில் யூத மதத்தை நம்பாத மக்களும் அனுமதிக்கப்பட்டனர். மகா பரிசுத்த ஸ்தலத்திற்கு திரைச்சீலை போடப்பட்டிருக்கும்; வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே பிரதான ஆசாரியர் முழு ஆயத்தத்துடனும், அதே சமயம் பாவத்தின் காரணமாக அவர் உள்ளேயே இறந்து விழுந்தால், அவரை வெளியே இழுக்க ஒரு சங்கிலியையும் கட்டி விடுவார்கள். வேறு யாருக்கும் உள்ளே அனுமதியில்லை. எசேக்கியேல் தேவனுடைய மகிமையான பிரசன்னத்தை அறிய முடியவில்லை, மாறாக எருசலேமின் உள்வாசலின் நடையிலே எரிச்சலுண்டாக்குகிற விக்கிரகம் இருந்தது (எசேக்கியேல் 8:5-6). ஆலயத்தில் / சபையில் தேவ மகிமையும் விக்கிரகமும் ஒன்றாக இருக்க முடியாது. வருத்தம் என்னவெனில், அந்த உருவத்திற்கு ஒரு பலிபீடம் இருந்தது; மக்கள் தங்கள் பிள்ளைகளை அங்கே பலியிட்டனர். மனித பலிகள் தேவனுக்கு அருவருப்பானது, அவர்கள் தங்கள் பிள்ளைகளை பலி செய்யத் துணிந்தனர்.
2) தனிப்பட்ட வெளி:
சாப்பானுடைய குமாரனாகிய யசனியா உட்பட எழுபது மூப்பர்களும் ஆலய பிரகார வாசல் வழியே செல்லும் ஒரு இரகசிய அறையில் சகலவித ஊரும் பிராணிகள், அருவருப்பான மிருகங்களுமாகிய இவைகளின் சுரூபங்களும், இஸ்ரவேல் வம்சத்தாருடைய நரகலான சகல விக்கிரகங்களும் சுவரில் சுற்றிலும் சித்திரந்தீரப்பட்டிருந்தன; அதையெல்லாம் அவர்கள் வழிபடுவதை தேவன் காட்டினார் (எசேக்கியேல் 8:7-12). இது அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை, சிந்தை, கற்பனைகள், நோக்கங்கள் அனைத்தும் பொய்மையாலும் வஞ்சகத்தாலும் சிதைக்கப்பட்டதைக் காட்டியது.
3) குடும்ப வெளி:
பெண்கள் தம்முசுக்காக ஆலயத்தின் வடக்கு வாசலின் நடையிலே இருந்து அழுவது அடுத்த அருவருப்பானது (எசேக்கியேல் 8:13-14). இது ஒரு மெசொப்பொத்தேமியா பெண்தெய்வம், அவளுக்கு துக்கம் அல்லது அழுகை வழிபாடு சடங்கு பாலினத்தை உள்ளடக்கியது. இஸ்ரவேலில் குடும்ப அலகுகளை சீர்குலைக்கும் வகையில் பெண்கள் வழிதவறினர்.
4) பொது வெளி:
அடுத்த காட்சியாக கர்த்தருடைய ஆலயத்தின் வாசல் நடையிலே மண்டபத்துக்கும் பலிபீடத்துக்கும் நடுவே, ஏறக்குறைய இருபத்தைந்து புருஷர், தங்கள் முதுகைத் கர்த்தருடைய ஆலயத்துக்கும் தங்கள் முகத்தைக் கீழ்த்திசைக்கும், நேராகத் திருப்பினவர்களாய்க் கிழக்கே இருக்கும் சூரியனை நமஸ்கரித்தார்கள் (1 நாளாகமம் 23; எசேக்கியேல் 8:15-16). அநேகமாக, மனாசேயால் ஊக்குவிக்கப்பட்ட சூரியக் கடவுளுக்கான குதிரைத் தேர் இருந்திருக்கலாம் (2 இராஜாக்கள் 23:5,11). சூரியன் ஒளியைக் கொடுப்பதற்காகப் படைக்கப்பட்டது, அது வழிபாட்டுப் பொருளாக இருக்க முடியாது. எந்த தேவன் சூரியன் சந்திரனை தொழுது சேவிக்க இணங்காதபடி எச்சரிக்கையாயிருங்கள் என்றாரோ அவருக்கு முதுகைக் காட்டி விட்டு சூரியனை வணங்கினர் (உபாகமம் 4:19).
நான் தேவனை மாத்திரம் தொழுது கொள்வேன் என்ற உறுதியோடு மனந்திரும்பிய நபராக அவர் பக்கம் திரும்பியுள்ளேனா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்