திருச்சபை என்பது பரிபூரணமாகவும், சிறந்ததாகவும், பிழையற்றதாகவும் இருக்க வேண்டும் என்று யாரேனும் எதிர்பார்த்தால், அது மாயை தான். த மிடாஸ் டச் என்ற புத்தகத்தில், 'மனிதர்கள் எந்த நிறுவனத்தில் அங்கம் வகிக்கிறார்களோ அது கெட்டுப்போகும் அல்லது பாவத்தால் கறைபடும்' என எழுதப்பட்டுள்ளது. முதல் நூற்றாண்டில் கூட திருச்சபைகளில் பிரச்சனைகள் இருந்தன மற்றும் தலைவர்கள் தேவ வார்த்தையின் படியேயும் சரியான போதனையுடனும் மற்றும் பரிசுத்த ஆவியின் உதவியாலும் அவற்றை சரிசெய்தனர்.
1) ஆதிக்கம் செலுத்துதல்:
தியோத்திரேப்பு ஆதிக்கம் செலுத்தும், ஆணையிடும் மற்றும் கட்டுப்படுத்தும் தலைவராக இருந்தான் (3 யோவான் ). அவன் தாழ்மையுடன் இல்லை, அப்போஸ்தலனாகிய யோவானின் அதிகாரத்தை நிராகரித்தான் மற்றும் சரியான காரணமின்றி விசுவாசிகளை வெளியேற்றினான்.
2) பாகுபாடு காண்பித்தல்:
விதவைகளுக்கு பொருள் வழங்கும் நலத்திட்டத்தில் எபிரெய மற்றும் கிரேக்க மொழி பேசும் விதவைகளுக்கு இடையே பாகுபாடு காட்டப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது, விதவைகள் அன்றாட விசாரணையில் திட்டமாய் விசாரிக்கப்படவில்லை (அப்போஸ்தலர் 6) என்றனர். சரியான தலைவர்களைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் அப்போஸ்தலர்கள் அதைச் சரிசெய்ய வேண்டியிருந்தது. பேதுரு உட்பட யூத சீஷர்கள் புறஜாதி சீஷர்களை விட உயர்ந்தவர்களாக உணர்ந்தனர் (கலாத்தியர் 2:11-14).
3) வஞ்சித்தல்:
அனனியாவும் சப்பீராளும் தங்கள் காணியாட்சியை தேவனுக்கு அர்ப்பணித்தனர். அதை விற்ற பிறகோ, அவர்களுக்கு சிந்தை மாறியது, சில பகுதியைத் தங்களுக்கென்று வைத்துக் கொண்டனர். ஆனால் அவர்கள் அனைத்தையும் கொடுத்தது போல ஒரு மதிப்பை உருவாக்கினர். வஞ்சித்ததன் விளைவாக அவர்கள் தேவ சமூகத்தில் மடிந்தனர் (அப்போஸ்தலர் 5).
4) பகுத்தறிய தவறுதல்:
பகுத்தறிவு இல்லாத, அரசனைப் பிரியப்படுத்த விரும்பிய தீர்க்கதரிசிகள், பொய்யின் ஆவிகளால் தவறாக வழிநடத்தப்பட்டனர் (1 இராஜாக்கள் 22:22-23). இன்றும் மக்களை திருப்திப்படுத்தும் தீர்க்கதரிசிகள் அல்லது போதகர்களுக்கு பகுத்தறிவு இல்லை என்றே சொல்ல வேண்டும். விசுவாசிகள் பொய் சொல்கிறார்கள்; ஆனால் "ஒருவருக்கொருவர் பொய் சொல்லாதிருங்கள்" (கொலோசெயர் 3:9) என வேதாகமம் கூறுகின்றது.
5) பிரிவுகள்:
கொரிந்துவில் உள்ள சபையில் பல்வேறு வகையான குழுக்கள் இருந்தன. அதன் ஒவ்வொரு குழுவும் பவுல் அல்லது கேபா அல்லது அப்பொல்லோ போன்ற தலைவர்களின் ரசிகர்களாக மாறியது (1 கொரிந்தியர் 1:10-17).
6) கருத்து வேறுபாடு மற்றும் நீதிமன்ற வழக்குகள்:
எயோதியா மற்றும் சிந்திகேயாளாவால் ஒருவரையொருவர் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. சில விசுவாசிகள் மற்ற விசுவாசிகளுக்கு எதிராக வழக்கு மன்றத்தில் நீதி கேட்டு முறையிட்டனர் (பிலிப்பியர் 4:2; 1 கொரிந்தியர் 6:1).
7) கோட்பாடில் குறைபாடுகள் :
தியத்தீரா சபை கள்ள போதகர்களை பொறுத்துக்கொண்டது, கர்த்தர் அந்த சபையைக் கடிந்துகொண்டார் (வெளிப்படுத்துதல் 2:18-29).
8) துணிச்சலான பாலியல் பாவங்கள்:
"உங்களுக்குள்ளே விபசாரம் உண்டென்று பிரசித்தமாய்ச் சொல்லப்படுகிறதே, ஒருவன் தன் தகப்பனுடைய மனைவியை வைத்துக்கொண்டிருக்கிறானே; அது அஞ்ஞானிகளுக்குள்ளும் சொல்லப்படாத விபசாரமாயிருக்கிறதே" (1 கொரிந்தியர் 5:1) என விபச்சாரத்தில் அதுவும் தாயாக எண்ணப்பட வேண்டியவளிடம் தவறாக நடந்து கொள்ளும் நபரை கண்டித்தார். உலகத்தாரிடம் கூட இப்பட ஒரு செயல் பொறுத்துக் கொள்ளப்படாதே என்றார்.
9) கண்ணியம் மறுக்கப்படுதல்: பணக்கார விசுவாசிகள் கர்த்தருடைய இராப்போஜனத்தை துஷ்பிரயோகம் செய்தனர் மற்றும் ஏழை விசுவாசிகளைப் புறக்கணித்தனர் (1 கொரிந்தியர் 11:17-34).
சபைகளில் உள்ள பிரச்சனைகளில் தலையிடுகிறேனா அல்லது தீர்வு ஏற்பட பங்களிக்கிறேனா?
Author: Rev. Dr. J. N. Manokara