வேதாகமத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள சோகமான நிகழ்வுகளில் ஒன்று; அனனியா மற்றும் சப்பீராள் தம்பதியினரின் செயல். அவர்களுக்குக் கொடுக்க வேண்டும் என்பதான நல் விருப்பங்கள் தான் இருந்தன; ஆனால் கொடுத்தலின் போது ஏற்பட்ட பாவ உந்துதலால், தங்கள் ஜீவனையே இழந்தார்கள் (அப்போஸ்தலர் 5:1-12). அவர்கள் பர்னபாவை பின்பற்றி, தங்கள் நிலத்தை சபைக்கு காணிக்கையாக கொடுத்து, நற்பெயரைப் பெற விரும்பினர். ஆனாலும், விற்பனை மூலம் கிடைத்த தொகையை முழுவதுமாக கொடுக்காமல், ஒரு பகுதியை எடுத்து வஞ்சித்து வைத்திருந்தனர். பரிசுத்த ஆவியானவரிடம் பொய் சொன்னதற்காக இருவரும் பேதுருவின் முன்னிலையில் ஜீவனை விட தேவன் அவர்களை நியாயந்தீர்த்தார்.
1) அவமதிப்பு:
ஒருவர் தேவனுக்காக எதையாவது அர்ப்பணித்தால் அது ஆண்டவருக்கே சொந்தம். பின்பதாக அந்தப் பங்கில் இருந்து எடுத்தால் அது திருடுவதற்கும் தேவனை அவமதிப்பதற்கும் சமமாகும். ஏலி "அவன் குமாரர் தங்கள்மேல் சாபத்தை வரப்பண்ணுகிறதை அவன் அறிந்திருந்தும், அவர்களை அடக்காமற்போன பாவத்தினிமித்தம், நான் அவன் குடும்பத்துக்கு என்றும் நீங்காத நியாயத்தீர்ப்புச் செய்வேன் என்று அவனுக்கு அறிவித்தேன்" (1 சாமுவேல் 3:13) என்றார் கர்த்தர்.
2) பாசாங்குத்தனம்:
வெளிப்புறமாக, அனனியாவும் சப்பீராளும் தாங்கள் தேவனை நேசிப்பவர்களாகவும், அர்ப்பணிப்பவர்களாகவும், தியாகம் செய்பவர்களாகவும், தாராள மனப்பான்மையுள்ளவர்களாகவும், ஆவிக்குரியவர்களாகவும் தங்களைக் காட்டிக் கொண்டனர். ஆனால், சொல்லப்போனால் அவர்கள் வெள்ளையடிக்கப்பட்ட கல்லறைகளுக்கு ஒப்பாயிருக்கிறார்கள் (மத்தேயு 23:27-28).
3) விசுவாசக் குறைவு:
அவர்களால் தேவனை நம்ப முடியவில்லை. நிலத்தை விற்றதில் ஒரு பகுதியை வைத்திருப்பது கடினமான காலங்களில் அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய உதவும் என எண்ணியிருப்பார்கள். தேவனை நம்புவதற்கு பதிலாக, அவர்கள் தங்கள் செல்வத்தை நம்பினர்.
4) பொய்:
அவர்கள் பரிசுத்த ஆவியிடம் பொய் சொன்னார்கள், நியாயந்தீர்க்கப்பட்டார்கள்.
5) பேராசை:
தியாகம் செய்ய வேண்டும் என்ற வாஞ்சை அவர்களுக்கு இருந்தது, ஆனால் அவர்கள் மனதில் பேராசையும் இருந்தது. அதன் விளைவு, அவர்கள் தங்கள் செல்வத்தின் ஒரு பகுதிக்கு ஆசைப்பட்டனர், இது ஒரு முட்டாள்தனமான யோசனை அல்லவா!
6) பயனற்ற ஒரு உருவாக்கம்:
எருசலேம் நகரத்திலுள்ள சபையின் பார்வையில் தங்களை தாராள மனப்பான்மையுள்ளவர்கள் என்பது போலான ஒரு பிம்பத்தை உருவாக்க நினைத்தார்கள். ஆயினும்கூட, இது ஒரு மிகைப்படுத்தப்பட்ட மற்றும் தற்பெருமைக்கான (பகட்டு) திட்டமாகும்.
7) சுயநலப் பெருமை:
அவர்கள் மனத்தாழ்மையால் வழிநடத்தப்படவில்லை, மாறாக பெருமையால் வழிநடத்தப்பட்டனர். தேவ அங்கீகாரத்தை விட சக விசுவாசிகளின் புகழைத் தேடுவதில் அவர்கள் சுயநலமாக இருந்தனர்.
முதல் நூற்றாண்டு சபையில் ஒழுங்காக கொடுக்காததற்கு மாதிரி இருந்தது. இது காயீன் கொடுப்பதைப் போன்றது (ஆதியாகமம் 4). காயீனைப் போலவே, இந்த ஜோடியும் ஆண்டவரின் விருப்பப்படி கொடுக்க விரும்பாமல் தங்கள் சொந்த விருப்பத்தின் அடிப்படையில் தேவனுக்கு கொடுக்க விரும்பினர்.
தேவனுக்குக் கொடுத்ததில் என் உந்துதல் என்ன?
Author : Rev. Dr. J. N. Manokaran