நற்செய்தியின் மதிப்பு இந்த உவமையில் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவால் கற்பிக்கப்படுகிறது. "மேலும், பரலோகராஜ்யம் நல்ல முத்துக்களைத் தேடுகிற வியாபாரிக்கு ஒப்பாயிருக்கிறது. அவன் விலையுயர்ந்த ஒரு முத்தைக் கண்டு, போய், தனக்குண்டான எல்லாவற்றையும் விற்று, அதைக் கொள்ளுகிறான்" (மத்தேயு 13:45-46). வருத்தம் என்னவெனில், இந்த உவமையைக் கேட்ட பிறகும், யூதாஸ் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை 30 வெள்ளிக்காசுகளுக்காகக் காட்டிக்கொடுத்தான்.
பிரதான ஆசாரியனைப் பொறுத்தவரை, கர்த்தராகிய இயேசு கிறிஸ்து சடங்காச்சார மதங்களுக்கு எதிரான கொள்கையில் பற்றுடையவர். "ஜனங்களெல்லாரும் கெட்டுப்போகாதபடிக்கு ஒரே மனுஷன் ஜனங்களுக்காக மரிப்பது நமக்கு நலமாயிருக்குமென்று.." தீர்க்கத்தரிசனமாக கூட உரைத்தவர் (யோவான் 11:50). இப்போது, அவருக்கு ஒரு நெருக்கடி, தான் கூறிய தீர்க்கதரிசனத்தை நிறைவேற்ற வேண்டுமே; அந்த நேரத்தில் தானே யூதாஸ் சிக்கினான், காரியமும் நடந்தது. அவர்களது மனதில் ஒரு விலையை நிர்ணயம் செய்திருந்தார்கள். 30 வெள்ளிக்கு மேல் விலையை உயர்த்தக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தார்கள். அவர்களைப் பொறுத்தவரை, கலிலேயாவிலிருந்து வந்த படிப்பறியாதவருக்கு (ரபீக்களின் கல்வியை பயிலாத) எந்த தகுதியும் இல்லை. தேவன் ஒரு அடிமையாகவே கருதப்பட்டார், சுயாதீனனாக அல்ல. "நான் அவரை உங்களுக்குக் காட்டிக்கொடுக்கிறேன், நீங்கள் எனக்கு என்ன கொடுக்கிறீர்கள் என்றான் யூதாஸ். அவர்கள் அவனுக்கு முப்பது வெள்ளிக்காசைக் கொடுக்க உடன்பட்டார்கள்" (மத்தேயு 26:15). யாத்திராகமம் 21:32ல் கூறப்பட்டபடி, மோசே பிரமாணத்தின்படி ஒரு அடிமையின் விலை 30 வெள்ளிக்காசுகள்.
சகரியா தனது தீர்க்கத்தரிசனத்தை நாடகம் போல் நடித்துக் கொண்டிருந்தார். அவர் தன்னை ஒரு மேய்ப்பனாக அறிவித்துக் கொண்டார். மந்தையின் உரிமையாளர் 30 வெள்ளிக்காசு என கூலி கொடுத்தார் (சகரியா 11:12). குயவனுக்காகப் பணம் கர்த்தருடைய ஆலயத்தில் எறியப்பட்டது (மத்தேயு 27:3-10). யூதாஸ் பணத்தை ஆலயத்தில் எறிந்தபோது, அந்நியர்களை அடக்கம் பண்ணுவதற்கு குயவனுடைய நிலத்தை வாங்குவதற்கும் இதுவே நடந்தது. குயவன் வயல் என்பது குயவனால் நிராகரிக்கப்பட்ட, உடைந்த, பயனற்ற பானைகளை வீசுவதற்கான இடமாகும். ஆம், உண்மையில், உடைந்த, நொந்துபோன, நிராகரிக்கப்பட்ட, பயனற்ற மக்களை மீட்க கர்த்தராகிய இயேசு குயவனின் நிலத்தை வாங்கினார்.
மரியாள் கர்த்தராகிய இயேசுவை 300 வெள்ளிக்காசுகள் கொண்ட விலையுயர்ந்த தைலத்தால் அபிஷேகம் செய்தாள் (யோவான் 12:3-6). இது ஏழைகளுக்குப் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்று யூதாஸ் கருத்து தெரிவித்தான். யூதாஸ் ஒரு திருடன், அதனால் தான் இப்படியெல்லாம் தேவையற்ற கருத்து தெரிவிப்பதாக யோவான் கூறினார். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை ஆராதிக்க மரியாள் செலவழித்ததின் தசமபாகத்திற்கு இணையான தொகையை யூதாஸ் காட்டிக் கொடுப்பதற்காக பெற்றான்.
லட்சக்கணக்கானோர் ஆண்டவராகிய இயேசுவை தேவனின் விவரிக்க முடியாத பொக்கிஷமாகக் கண்டுள்ளனர்.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை நான் எவ்வாறு கருதுகிறேன்?
Author : Rev. Dr. J. N. Manokaran