அப்போஸ்தலரின் அருங்குணங்கள்

ஆதித் திருச்சபையின் அஸ்திபாரத்தை இட்ட அப்போஸ்தலர்கள் உலகின் பார்வையில் சாதாரண மனிதர்களாக விளங்கியபோதும் தங்களின் அர்ப்பணிப்புள்ள வாழ்க்கையின் மூலம் உலகையே அசைத்தனர். அதற்குக் காரணம் அவர்கள் தங்கள் சொந்த வாழ்க்கையில் தாங்கள் விசுவாசித்துப் பற்றிக்கொண்ட கர்த்தராகிய இயேசுவைப் பின்பற்றினர் என்பதே!

தங்களின் ஊழியப் பாதையெங்கும் கிறிஸ்துவை அப்படியே பிரதிபலித்து அவரைப்போலவே வாழ்ந்து மறைந்த அப்போஸ்தலர்களின் சிறப்பியல்புகளுள் சிலவற்றை இக்கட்டுரையில் காண்போம்.

1) Boldness in Ignorance

பேதைமையில் துணிவு

அலங்கார வாசல் மனிதன் அற்புத சுகம் பெற்றதைத் தொடர்ந்து பேதுருவும் யோவானும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவைப்பற்றி துணிவோடு எடுத்துரைக்கின்றனர். அவர்கள் பிரசங்கித்த சுவிசேஷச் செய்தி எருசலேம் நகரத்தையே அசைக்க, அதிகார வர்க்கமே ஆடிப்போய்விட்டது. சனதரீன் சங்கத்தின்முன் அப்போஸ்தலர்கள் நிறுத்தப்பட்டபோது, அவர்கள் பேதமையுள்ளவர்களாக (ignorant) இருந்தும் தைரியமாய்ப் (boldly) பேசுவதற்கு, அவர்கள் இயேசுவுடன் இருந்ததே காரணம் (Acts.4:13) என்று அச்சங்கம் கருதியது.

ஆம், அந்தரங்க வாழ்வில் இயேசுவுடன் இருப்பவர்களால் மட்டுமே வெளியரங்க வாழ்வில் துணிவுடன் திகழமுடியும். அந்தத் துணிவே சமூகத்தை அசைக்கும்! Boldness in Ignorance என்பது அப்போஸ்தலர்களிடம் காணப்பட்ட முதலாவது சிறப்பியலபாகும்.

2) Faithfulness in Deeds

செயல்பாடுகளில் உண்மை

தப்பிச் செல்ல எல்லா வாய்ப்புகளும் இருந்தும் தப்பிச்செல்லாமல், "நாங்கள் இங்குதான் இருக்கிறோம்" (Acts.16:28) என்று சொன்ன கைதியை பிலிப்பு பட்டண சிறைக்காவலன் தன் வாழ்க்கையில் அநேகமாக அன்றுதான் பார்த்திருப்பான். அப்போஸ்தலனின் அந்த நேர்மைதான் அவனை அசைத்தது. அவன் தன் வீட்டாருடன் விசுவாசியாவதற்கு வழிகோலியதும் அந்த நேர்மையே! வார்த்தைகளில் (words) மட்டுமல்ல செயல்பாடுகளிலும் (deeds) நேர்மை வேண்டும்.

எபேசிய மூப்பர்களை மிலேத்துவிற்கு அழைத்து தன் நேர்மையுள்ள செயல்பாடுகளைப் பட்டியலிட்ட பவுல் ( Acts. 20:19 - 35) அந்த மூப்பர்களுக்கு தன் சொந்த வாழ்வின் மாதிரியையே முன்வைத்தார். நமக்காக அடிச்சுவட்டை முன்வைத்துப்போன கிறிஸ்துவின் நேர்மையை அல்லவா அவர் பிரதிபலித்தார்!

Faithfulness in Deeds என்பது அவர்களிடம் காணப்பட்ட இரண்டாவது சிறப்பியல்பாகும்.

3) Awesomeness in Weakness

பலவீனத்தில்  பலம்

தான் பலவீனனாக இருக்கும்போது தேவனுடைய பலம் தனக்குள் வேலைசெய்வதால் (2 Cor.12:9) பலவீனனாக இருப்பதையே தன் பலமாகக் கருதினார் பவுல். 

பலமுள்ளவை பலமற்றவை என்பதற்கான இவ்வுலகின் வரையறையினின்று தேவனின் வரையறை (Definition) முற்றிலும் மாறுபட்டது.

உடல் வலிமையோ அல்லது பணம், பதவி, படிப்போ அல்ல, கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பதே நமக்கு பலம் (நெகே.8:10) என்பதே பலத்திற்கான தேவனுடைய வரையறை.

பவுல் தனது உடல் பலவீனத்தின் மத்தியிலும் கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருந்தார். ஆனால், அவர்தம் போதனைகளோ பலவீனமாயிருக்கவில்லை.

பலவீனமான இவ்வுடலினால்தான் தேவனுடைய பலம் வாய்ந்த சுவிசேஷ ஊழியத்தைச் செய்கிறோம். அதுதான் இச்சமூகத்தை அசைக்கிறது!

Awesomeness in Weakness என்பது நாம் பின்பற்றத்தக்கதும் அவர்களிடம் காணப்பட்டதுமான மூன்றாவது சிறப்பியல்பாகும்.

4) Firmness in Teachings

போதனையில் உறுதி

மாற்றி மாற்றிப் பேசுதல் எப்படி தேவகுணமில்லையோ அதேபோல தேவனுடைய மனிதர்களின் குணமாகவும் அது இருக்கக்கூடாது. தேவ நியமங்கள் மாற்றப்பட முடியாதவை. நாம் நம்புகிற, பிரசங்கிக்கிற சுவிசேஷம் தேவனுடையதாகையால் அதற்கு நாம் make up போடத் தேவையில்லை. சுவிசேஷம் என்ற பெயரில் கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை அளிக்கவோ, மனிதனின் சடங்குகளை அதனுடன் சேர்க்கவோ வேண்டியதில்லை. அது சிலுவையில் நடந்துமுடிந்த ஒரு செயலினைப்பற்றிய அறிவிப்பாக மட்டுமே இருந்தால் போதும். இதைத்தான் கலாத்தியருக்கு எழுதுகையில் பவுல் வலியுறுத்துகிறார். நாங்கள் அறிவித்த செய்திக்கு மாறாக நாங்களோ, வானத்திலிருந்து வரும் தூதனோ வேறு செய்தியைச் சொன்னால் அவன் சபிக்கப்பட்டவன் (கலாத். 1:8) எவ்வளவு உறுதி! Firmness in Teachings என்பது அவர்களின் நான்காவது சிறப்பியல்பு!

5) Delightfulness in Death

மரணத்தில் மனரம்மியம்

அப்போஸ்தலர்களைப் பொறுத்தவரை அவர்கள் தங்கள் சரீர மரணத்தைக் குறித்து அஞ்சியதே இல்லை. இன்னும் சொல்லப்போனால் அவர்கள் அதை வாஞ்சித்தனர் ( பிலி.3:10; Act. 20:24) என்பதே உண்மை.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்து தம்மை சிலுவையில் அறைந்தவர்களுக்கு மன்னிப்பு வேண்டி பிதாவிடம் கேட்டுக்கொண்டதைப்போலவே ஸ்தேவானும் ஜெபித்ததை Acts.7:59, 60 ல் வாசிக்கலாம். இந்த உடலிலிருந்து நம் உயிர் பிரிந்தால் கர்த்தரிடம் சேர்க்கப்படுவோம் (2 Cor. 5:8) என்றும் "நம்முடைய குடியிருப்பு பரலோகத்திலிருக்கிறது" (Philip.3:20) என்றும் அவர்கள் கொண்டிருந்த நம்பிக்கையே  மரண அச்சமின்றி வாழ அவர்களை உந்தியது. எனவே மரணம் அவர்களுக்கு மகிழ்வையே தந்தது.

Delightfulness in Death அவர்களின் ஐந்தாவது சிறப்பியல்பாகும்.

முடிவுரை:

நம் காலத்தில் நாம் பெற்று அனுபவிப்பதைப்போன்ற சமூக, தொழில்நுட்ப மற்றும் தொலைத்தொடர்பு வசதிகளையோ, இன்று நாம் பெற்றிருப்பதைப்போன்ற அரசியல் சுதந்திரங்களையோ அவர்கள் பெற்றிராவிட்டாலும்  எல்லாவற்றிலும் கர்த்தரையே மையமாகக் கொண்டு உன்னதத்தை நோக்கிப் பயணித்தனர். 

அவர்கள் சென்ற அதே பாதையில், அவர்கள் கொண்டிருந்த அதே நம்பிக்கையோடு நாமும் பின்தொடர்வோம் - அதே கிறிஸ்துவை நோக்கி!

(பின்குறிப்பு: 3 வது குறிப்பு ஆங்கிலத்தில் Strength [பலம்] என்பதற்கு பதிலாக Awesome [அருமை] எனும் சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. பலவீனத்தில் தேவ பலம் விளங்குவது அருமையிலும் அருமையல்லவா?)

Author: Pon VA Kalaidasan



Topics: bible study Pon Va. Kalaidasan Bible Articles

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download