"எங்களைச் சோதனைக்குட்படப்பண்ணாமல், தீமையினின்று எங்களை இரட்சித்துக்கொள்ளும்" (மத்தேயு 6:13) என்பது ஆண்டவரின் ஜெபம். தேவனுடைய பிள்ளைகளை, சாத்தான் சோதனைகளை பயன்படுத்தி சிக்க வைக்க, ஊனப்படுத்த, அவர்களிடமிருந்து திருட, அவர்களை அழிக்க மற்றும் கொலை செய்ய எப்போதும் கடினமாக உழைக்கிறான் (யோவான் 10:10). "தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள், விழித்திருங்கள்; ஏனெனில், உங்கள் எதிராளியாகிய பிசாசானவன் கெர்ச்சிக்கிற சிங்கம்போல் எவனை விழுங்கலாமோ என்று வகைதேடிச் சுற்றித்திரிகிறான்" (1 பேதுரு 5:8) என்று பேதுரு விவரிக்கிறார். நாம் பலவீனமானவர்கள் மற்றும் பாதிப்பிற்குள்ளாக கூடியவர்கள் என்பதை தேவனிடம் ஒப்புக்கொள்ளவும் ஜெபம் நமக்கு உதவுகிறது. சோதனைகளின் ஆதாரம் மிரட்டல், ஏமாற்றுதல், வஞ்சித்தல் என இருக்கலாம்.
பயமுறுத்தப்பட்ட பேதுரு:
பன்னிரண்டு பேரில் வல்லவனான பேதுரு, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை ஒருபோதும் மறுதலிப்பதில்லை மற்றும் அவருக்காக மரிக்கவும் தயார் என்று உறுதியாக இருந்தான் (மத்தேயு 26:35). இருப்பினும், சேவல் இரண்டு முறை கூவுவதற்கு முன்பே கர்த்தராகிய இயேசுவை மூன்று முறை மறுதலித்தான். அவன் பொந்தியு பிலாத்து அல்லது பிரதான ஆசாரியரால் பயமுறுத்தப்படவில்லை, ஒரு வேலைக்காரப் பெண்ணைக் கண்டு அல்லவா பயந்து போனான் (லூக்கா 22:54-62). மிரட்டல் என்பது அதிகாரம் உள்ளவர்களிடமிருந்து தான் வர வேண்டும் என்று அவசியமில்லை, அது சாதாரண மக்களிடமிருந்தும் வரலாம். பேதுரு அதீத தன்னம்பிக்கையில் இருந்தான், சோதனையை சமாளிக்க தேவனின் வல்லமைக்காக ஜெபிக்கவில்லை.
ஏமாற்றப்பட்ட யூதாஸ்:
யூதாஸ் பணம் என்ற சோதனையில் அகப்பட்டு விழுந்தான் (மாற்கு 4:19). யூதாஸ் தன்னை நேசித்த கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவைக் காட்டிக் கொடுக்க தானாகவே முன்வந்தான், மேலும் அவரை முப்பது வெள்ளிக்காசுகளுக்காக அல்லவா காட்டிக் கொடுத்தான் (மத்தேயு 26:14:15). வெள்ளிக்காசுகள் யூதாஸின் உறுதியை விட வலிமையாக இருந்தது போலும்.
தோமாவின் சந்தேகம்:
சந்தேகங்களை எழுப்புவதன் மூலம் சாத்தான் எப்போதும் தேவ ஜனங்களை ஏமாற்றினான். "சர்ப்பமானது ஸ்திரீயை நோக்கி: நீங்கள் தோட்டத்திலுள்ள சகல விருட்சங்களின் கனியையும் புசிக்கவேண்டாம் என்று தேவன் சொன்னது உண்டோ என்றது" (ஆதியாகமம் 3:1). தோமா அத்தாட்சியைக் கோரினான், மற்ற பத்து சீஷர்களும் ஆண்டவரைக் கண்டு அனுபவிக்கும் பாக்கியத்தைப் பெற்றனர். ஆனால் தோமாவோ அவரின் தெய்வீகத்தையும் உணரவில்லை வல்லமையையும் உணரவில்லை அல்லது மற்ற சீஷர்கள் கூறிய சாட்சியையாவது நம்பியிருக்க வேண்டும்; அதையும் நம்ப முடியவில்லை.
கலாச்சார வஞ்சனை:
ஆறுதலின் மகனான பர்னபா கூட சத்தியத்திற்கு முரணான கலாச்சார விழுமியங்களுக்கு ஆளாக நேரிட்டது. யூத கலாச்சாரம் புறஜாதிகளை தீண்டத்தகாதவர்களாகக் கருதியது, அவர்களுடன் உணவருந்தவில்லை. துரதிர்ஷ்டவசமாக, பர்னபாவும் வேதத்தை விட கலாச்சாரத்தை பின்பற்றினான். உறவுகளுக்கு மதிப்பளிக்கும் பர்னபாவே சத்தியத்தின் படி நடவாமல் வழி விலகினானே (கலாத்தியர் 2:11-14). எல்லா மனிதர்களும் தேவ சாயலில் படைக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதையும், ஆதாம் ஏவாளின் சந்ததியினர் என்பதையும், கர்த்தராகிய இயேசு கிறிஸ்து எல்லா மனிதர்களுக்காகவும் தான் மரித்தார் என்பதையும் அவன் மறந்துவிட்டான்.
உலகில் சோதனைகள் என்பது நிச்சயமான உண்மைகளே. மனித பலத்தால், சாத்தானின் தூதர்களை வெல்வது சாத்தியமில்லை.
விடுதலையளிக்கும் தேவ பிரசன்னத்தையும் சோதனைகளை மேற்கொள்ளும் வல்லமையையும் நான் அனுபவிக்கிறேனா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்