"வெள்ளம் எங்கள் பகுதியைச் சூழ்ந்ததால், எங்களில் பலர் எங்கள் சூட்கேஸ்களுடன் தப்பி ஓடிவிட்டோம்". பெருமழை காரணமாக திடீர் வெள்ளம் மற்றும் ஜலப்பிரளயத்தினால் சில நொடிகளில் வீடுகளை அடித்துச் செல்லலாம். மக்கள் பாதுகாப்பு தேடி ஓடுகிறார்கள். அவர்கள் எதை எடுத்துச் செல்ல வேண்டும்? சில ஆவணங்கள், அடையாள அட்டைகள், சான்றிதழ்கள், உயிர் காக்கும் மருந்துகள், சாவிகள், ஸ்மார்ட்போன்கள் மற்றும் மிக அவசியமான பொருட்களாக இருக்கும். ஜான் பன்யனின் யாத்ரீக பயணத்தில், முக்கியமான கதாபாத்திரமான கிறிஸ்தியான் தேவ கோபம் நகரத்தையே அழிக்கும் என அஞ்சி, வான நகரமான சீயோன் மலையை அடைய ஓடுகிறார், அங்கு அவர் தேவனுடனும் பரலோக சேனையோடும் நித்திய வாழ்வைப் பெற முடியும்.
பாம்பு குட்டிகள்
“விரியன் பாம்புக் குட்டிகளே! வருங்கோபத்துக்குத் தப்பித்துக்கொள்ள உங்களுக்கு வகைகாட்டினவன் யார்?” (மத்தேயு 3:7). யூத மதத்தின் தலைவர்களை விரியன் பாம்புக் குட்டிகளே என்று அழைக்க யோவான் ஸ்நானகனுக்கு தைரியம் இருந்தது. அவர்கள் நச்சுத்தன்மை வாய்ந்தவர்கள், மற்றவர்களை விழுங்கி விடுவார்கள், அதுமாத்திரமல்ல ஆவிக்குரிய மரணத்தை மக்களுக்கு கொண்டு வர முடியும். அவர்கள் தங்களை பிரமாணத்தைக் கடைப்பிடிப்பவர்கள், பாரம்பரியத்தை ஊக்குவிப்பவர்கள் என்று அழைத்தனர், ஆனால் அவர்கள் ஊழல்வாதிகள், சட்டத்தைக் கடைப்பிடிப்பவர்கள் மற்றும் பாசாங்குக்காரர்கள். பாம்புகளைப் போலவே, அவர்கள் ஆபத்தானவர்கள், வஞ்சகம் மற்றும் கொடியவர்கள். உண்மையில், அவர்கள் தங்கள் மதத்தில் பொய்களின் பிதாவான சாத்தானை பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள் (யோவான் 8:44).
ஆவிக்குரிய பகுத்தறிவு
திடீர் வெள்ளம், பெருமழை, சுனாமிகள், பூகம்பங்கள், காட்டுத் தீ, பயங்கரவாத தாக்குதல்கள், உள்நாட்டுப் போர்கள். என் திடீரென்று நிகழலாம். மக்கள் ஓடியோ அல்லது வாகனங்களிலோ தப்பிக்க முயற்சிப்பார்கள். பரிசேயர் மற்றும் சதுசேயர்களில் ஒரு சிலரே தாங்கள் பாவிகளென்றும், அவர்களுடைய மதப் பழக்கவழக்கங்களால் தாங்கள் இரட்சிப்பை அடைய முடியாது என்றும், தேவ கோபம் அவர்கள் மீது வரலாம் என்றும் புரிந்துகொள்ளும் ஆவிக்குரியப் பகுத்தறிவு இருந்தது, அதனால் மனந்திரும்பி, ஞானஸ்நானம் எடுக்க யோவானிடம் வந்தார்கள். இவர்களுக்கு எப்படி இவ்வளவு ஆவிக்குரிய பகுத்தறிவு இருந்தது என்று யோவான் ஆச்சரியப்பட்டார். ஆவிக்குரிய ரீதியாகவும், மனரீதியாகவும், இந்த மக்கள் பாவத்தை விட்டு ஓட தீர்மானித்தார்கள்.
பாவத்தின் சூழலில் இருந்து ஓடிவிடு
யோசேப்பு ஒரு வெற்றிகரமான இளைஞன். போத்திபார் யோசேப்பை தலைமை வேலைக்காரனாக்கினான். போத்திபாரின் மனைவி யோசேப்பின் மீது ஒரு கண் வைத்திருந்தாள். அவள் தனிமையில் அவனை மயக்கியபோது, அவளிடமிருந்து தப்பித்து, அவன் பாதுகாப்பான இடத்திற்கு ஓடிவிட்டான். பின்னர் யோசேப்பு அநியாயமாக விசாரணையின்றி சிறையில் அடைக்கப்பட்டான் (ஆதியாகமம் 39:12-18).
இறுதி தீர்ப்பு
பொல்லாதவர்கள் ஆட்டுக்குட்டியானவரின் கோபத்திலிருந்து தங்களை மறைத்துக் கொள்ள விரும்புவார்கள், அதனால் அவர்கள் பர்வதங்களையும் கன்மலைகளையும் தங்கள் மீது விழுந்து மறைக்க அழைப்பார்கள் (வெளிப்படுத்துதல் 6:16). இப்போது அவர்களுக்கு, பாவத்திலிருந்து ஓடுவதற்கான வாய்ப்பு முடிந்துவிட்டது, ஆனால் அவர்கள் நியாயத்தீர்ப்பிலிருந்து ஓட முடியாது.
நான் பாவத்திலிருந்து தப்பி தேவனிடம் அடைக்கலம் புகுவேனா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்