பரிசேயர்கள் தங்கள் நீண்ட அங்கிகளுடன், ஜெப ஆலயங்களிலும் வீதிகளின் சந்திகளிலும் நின்று ஜெபம் பண்ண விரும்புகிறார்கள். மனுஷர் காண வேண்டும் என்பது அவர்களின் இலக்காக இருந்தது, அவர்கள் அதைப் பெற்றனர். ஜெபங்கள் தேவனால் கவனிக்கப்படவில்லை அல்லது பதிலளிக்கப்படவில்லை. கர்த்தராகிய இயேசு தம்முடைய சீஷர்களுக்கு அந்தரங்கமாய் ஜெபிப்பது எப்படி என்று கற்றுக் கொடுத்தார், ஆம், அந்தரங்கத்தில் ஜெபிக்கும் போது பிதாவானவர் அவர்களுக்கு வெளிப்படையாகவோ அல்லது பகிரங்கமாகவோ பலனளிக்க முடியும் (மத்தேயு 6:5-6). “ஜெபத்தைக் கேட்கிறவரே, மாம்சமான யாவரும் உம்மிடத்தில் வருவார்கள்” (சங்கீதம் 65:2).
யோசேப்பு:
யோசேப்பு ஆட்கடத்தலுக்கு பலியானான், அவனது சகோதரர்களால் விற்கப்பட்டான், மீதியானியர்களால் வாங்கப்பட்டான், மேலும் எகிப்தியனான போத்திபாருக்கு மறுவிற்பனை செய்தார்கள் (ஆதியாகமம் 37). தனிமையில், கைவிடப்பட்ட உணர்வோடும், ஏக்கத்தோடும், தேவனிடம் ஜெபம் செய்தான். தேவன் அவனது அழுகைகளையும் அலைந்து திரிந்ததையும் கணக்கிட்டு, எகிப்தின் இரண்டாம் நிலை அதிகாரியாகும்படி செய்தார், தேவன் அவனுக்கு பதிலளித்தார் அல்லது பலனளித்தார் என்றே சொல்ல வேண்டும்.
தாவீது:
இனிய பாடகனான தாவீது ஆடுகளை மேய்க்கும்போது தேவனை வணங்கி துதி பாடிக்கொண்டிருந்திருக்க வேண்டும். சாமுவேல் தீர்க்கதரிசி தன் வீட்டில் என்ன செய்கிறார் என்பது அவனுக்குத் தெரியாது. ஆனால் தேவன் அவனுடைய ஏக்கங்களுக்கும் ஆசைகளுக்கும் பதிலளித்து அவனை அரசனாக நியமித்தார் (1 சாமுவேல் 16:10-12).
ரூத் மற்றும் நகோமி:
மோவாபில், நகோமியின் வாழ்க்கை மாராவைப் போல் கசப்பானது. அவள் விடுதலைக்காக தேவனிடம் அந்தரங்கமாக மன்றாடியிருக்க வேண்டும். அந்த நேர்மையான மற்றும் உண்மையான ஜெபத்தை ரூத் கவனித்திருக்கலாம். தேவன் ரூத்திற்கு போவாஸைக் கணவனாகக் கொடுத்தார், மேலும் நகோமிக்கு ஒரு பேரன், அவன் பெயர் ஓபேத். இந்த சந்ததியின் மூலம் மேசியா வருவார்.
மோசே:
சுமார் நாற்பது வருடங்கள் தன் மாமனாரின் ஆடுகளை மேய்த்துக்கொண்டிருந்த மோசேயின் ஜெபங்கள் என்ன? தேவன் அவனுடைய ஜெபங்களையும், இஸ்ரவேல் புத்திரரின் கூக்குரலையும் கேட்டார். தேவன் மோசேயை அனுப்பி அவர்களை எகிப்திய அடிமைத்தனத்திலிருந்து விடுவித்தார்.
யோனா:
மீனின் துர்நாற்றம் வீசும் வயிற்றின் அந்தரங்க அறையிலிருந்து யோனா கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டான். தேவன் அவருடைய கூக்குரலைக் கேட்டு, நினிவேயில் பிரசங்கிக்கும் தேவனின் பணியை நிறைவேற்ற அவனை நினிவேக்கு அழைத்துச் சென்றார்.
நெகேமியா:
நெகேமியாவின் உறவினரான ஆனானி சூசானுக்கு வந்தபோது, எருசலேம் நகரத்தின் மதில்களின் பரிதாபமான நிலையைப் பற்றி அறிந்தான் (நெகேமியா 1). அவன் பானபாத்திரக்காரனாக தனது உத்தியோகபூர்வ கடமையிலிருந்து விடுப்பு எடுத்து, உபவாசம் இருந்தான், அந்தரங்கத்தில் ஜெபித்தான். ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக பாழடைந்து கிடந்த சுவரை 52 நாட்களில் மீண்டும் கட்ட தேவன் அவனைப் பயன்படுத்தினார்.
எனக்கு அந்தரங்க ஜெபம் செய்யும் பழக்கம் உள்ளதா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்