ஒரு பணக்காரர் சமாதானத்திற்கான வழி வேண்டும் என்று விரும்பினார். ஆலோசகர்கள் மற்றும் அறிவுரையாளர்கள் தனக்கு உதவுமாறு செய்தித்தாள்களில் விளம்பரம் செய்தார். சில அழைப்புகளும் மின்னஞ்சல்களும் வந்தன. அதில் ஒரு மின்னஞ்சல் சுவாரசியமாக இருந்தது. ஒரு நபர் தனது நீண்ட வாழ்க்கையையும் மற்றும் அனுபவத்தைப் பற்றியும் எழுதினார். அதற்கு அவர் ஒரு பெரிய கட்டணத்தை பற்றியும் குறிப்பிட்டிருந்தார் மற்றும் ஒரு நியமிக்கப்பட்ட நாள் மற்றும் நேரத்தில் அவரை அழைத்துச் செல்வதாக உறுதியளித்தார். அந்த பயணம் நீண்டதாகவும், சாகசம் நிறைந்ததாகவும் இருக்கும்; பின்பதாக பெரும் அமைதிக்கான இலக்கை அடையும் என்று விவரித்தார்; விரக்தியடைந்த பணக்காரரும் நிம்மதி தேடி ஒப்புக்கொண்டார். இருவரும் பயணம் செய்தனர். மலைப்பாதையாக இருந்ததால் வண்டி நின்றது. ஆலோசகர் கதவைத் திறந்து, ஒரு தனிமையான பாதையைச் சுட்டிக்காட்டி, பணக்காரரை ஒரு மைல் நடக்கச் சொன்னார், மேலும் அங்கு நீங்கள் ஒரு பெரிய வளாகத்தைக் காண்பீர்கள் அங்கு தான் நிம்மதியாக இருக்க முடியும்; அது மாத்திரமல்ல தனியாகச் சென்றால்தான் நிம்மதி கிடைக்கும் என்றார் ஆலோசகர். பணக்காரர் அங்கு சென்றடைந்தபோது, அது முதலாம் உலகப்போர் கல்லறையாக இருந்தது. அதைக் கண்டதும் அவர் கூச்சலிட்டார்; ஆலோசகரிடம் ஓடி வந்தார். அப்போது அந்த ஆலோசகர் பதிலளித்தார்; ஆம், நீங்கள் தேடும் நிம்மதி இங்கு தான் கிடைக்கும்; அங்கே போய் படுத்துக் கொள்ளுங்கள், வேறு வழியில்லை என்றார்.
வாக்களிக்கப்பட்ட சமாதானம்:
சமாதானத்தையும் மகிழ்ச்சியையும் தேடி அயராது உழைத்தாலும், அது ஒரு மாயைதான், அது ஒரு காணல் நீர் போன்றது. அது தனிமனித நிம்மதியாக இருக்கலாம் அல்லது குடும்பத்திற்குள் தேவைப்படும் சமாதானமாக இருக்கலாம் அல்லது சமூகம் அல்லது தேசங்களுக்கு இடையேயான அமைதியாக இருக்கலாம். கர்த்தராகிய இயேசு தம் சீஷர்களுக்கு வாக்குறுதி அளித்தார்; “சமாதானத்தை உங்களுக்கு வைத்துப்போகிறேன், என்னுடைய சமாதானத்தையே உங்களுக்குக் கொடுக்கிறேன்; உலகம் கொடுக்கிறபிரகாரம் நான் உங்களுக்குக் கொடுக்கிறதில்லை. உங்கள் இருதயம் கலங்காமலும் பயப்படாமலும் இருப்பதாக” யோவான் 14:27. சமாதான பிரபு அவர், தேவ குமாரன் தம் சீஷர்களுக்கு, தன்னை விசுவாசிப்பவர்களுக்கு சமாதானத்தை உத்தரவாதம் செய்கிறார்.
ஆவிக்குரிய சமாதானம்:
மனிதர்கள் கலகக்காரர்கள், கீழ்ப்படியாதவர்கள், பாவிகள் மற்றும் தேவனுக்கு எதிரானவர்கள். அவர்கள் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மூலம் தேவனோடு ஒப்புரவாக்கப்படுகிறார்கள் (2 கொரிந்தியர் 5:18-21).
சமூகத்திற்கான சமாதானம்:
தங்கள் வழிகள் தேவனைப் பிரியப்படுத்தும்போது எதிரிகள் கூட அவர்களுடன் சமாதானமாக இருப்பார்கள் என்று தேவன் வாக்குறுதியளித்தபடி, கிறிஸ்தவர்கள் மிகுந்த அமைதியை அனுபவிக்க முடியும். “ஒருவனுடைய வழிகள் கர்த்தருக்குப் பிரியமாயிருந்தால், அவனுடைய சத்துருக்களும் அவனோடே சமாதானமாகும்படி செய்வார்” (நீதிமொழிகள் 16:7).
உணர்வுபூர்வமான சமாதானம்:
ஆவியானவரால் வழிநடத்தப்படுபவர்கள் மகிழ்ச்சியையும் சமாதானத்தையும் உள்ளடக்கிய ஆவியின் கனியை அனுபவிப்பார்கள் (கலாத்தியர் 5:22-23).
மன சமாதானம்:
விசுவாசிகள் தங்கள் கவலைகளை ஜெபத்தின் மூலம் தேவனுக்கு தகவலாக மாற்றுமாறு பவுல் அறிவுறுத்துகிறார், அது சமாதானத்தை விளைவிக்கும் (பிலிப்பியர் 4:6-7).
தேவன் வரமாக கொடுத்தச் சமாதானத்தை நான் அனுபவிக்கிறேனா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்