பெரும்பாலான சமயங்களில், கிறிஸ்தவர்களாக இல்லாதவர்கள், வேதாகமத்தை மேற்கோள் காட்டி, விசுவாசிகளிடம் “நியாயத்தீர்க்காதிருங்கள்” (லூக்கா 6:37) என்கிறார்கள். ஒருவேளை இது தவறாகப் புரிந்துகொள்ளப்பட்ட கருத்துக்களில் ஒன்றாக இருக்கலாம். சுயநலமும் பெருமையும் கொண்ட தேவ ஊழியர்கள், தங்களை விமர்சிப்பவர்களை நிறுத்த இந்த வசனத்தை மேற்கோள் காட்டுகிறார்கள். உண்மையைச் சொல்லப்போனால், தங்களை விமர்சிப்பவர்களை அல்லது கேள்வி கேட்பவர்களை ஆணவமாக சபிக்கிறார்கள்.
சரியாக தீர்ப்பளிக்கவும்:
கர்த்தர் தமக்கு செவிசாய்ப்பவர்களிடம் "தோற்றத்தின்படி தீர்ப்புச்செய்யாமல், நீதியின்படி தீர்ப்புச்செய்யுங்கள்" என்றார் (யோவான் 7:24). வெளித்தோற்றத்தை அடிப்படையாகக் கொண்ட தீர்ப்பாக அல்லாமல், முழுமையான சூழ்நிலையைப் பற்றிய நுண்ணறிவோடு இருக்க வேண்டும். இது ஆவிக்குரியவர்களால் மட்டுமே சாத்தியம். ஆம், ஆவிக்குரியவர்கள் எல்லாவற்றையும் நிதானித்து அறிந்து நியாயந்தீர்ப்பதாக பவுல் எழுதுகிறார் (1 கொரிந்தியர் 2:15). பவுல் கொரிந்தியர்களுக்கு எழுதும் போது பாவத்தை அடையாளம் காணும்படி அழைக்கிறார். மேலும் ஒழுக்க நடவடிக்கை எடுக்குமாறு சபையை அவர் வலியுறுத்துகிறார். விசுவாசிகள் தேவதூதர்களை நியாயந்தீர்ப்பார்கள், எனவே உலக விஷயங்களை நியாயந்தீர்க்க தகுதியுடையவர்கள் (I கொரிந்தியர் 6:2-3) என வாசிக்கிறோமே.
வேதாகம தரநிலைகள்:
வேதாகமம் பாவம் என்று சொல்வதை கிறிஸ்தவர்கள் நியாயந்தீர்க்க வேண்டும், இவ்விஷயத்தில் எந்த சமரசமும் செய்து கொள்ளக் கூடாது.
முன்னெச்சரிக்கை:
தேவன் தீவிர சுய பரிசோதனையை எதிர்பார்க்கிறார், நீங்களும் அதே தரநிலைகளால் தீர்மானிக்கப்படுவீர்கள் என்கிறார். ஆம், தற்பரிசோசனை தீர்ப்புக்கு முந்தியது. மற்றவர்களை மதிப்பிடுபவர்கள் அவர்களிடம் குறைகளை தேடும் முன், தங்கள் கண்களில் இருக்கும் துரும்பை (அழுக்கை) முதலில் அகற்ற வேண்டும் என்று தேவன் எதிர்பார்க்கிறார் (லூக்கா 6:41-42).
உந்துதல் தரநிலைகள்:
விசுவாசிகள் மற்றவர்களை பெருமையுடனும், மேன்மையுடனும் மதிப்பீடு செய்யவோ அல்லது பகுத்தறியவோ கூடாது, மாறாக அன்பு, இரக்கம் மற்றும் பணிவுடனே நியாயத்தீர்க்க வேண்டும் (எபேசியர் 4:15).
கண்டனம்:
விசுவாசிகள் ஒரு நபரின் நடக்கையை கண்டனம் செய்ய முடியும், ஆனால் இறுதி நீதிபதி தேவன் தானே தவிர வேறு எவரும் அல்ல. மற்றவர்களை நியாயந்தீர்க்கும் நபர்கள் அதே பாவத்தைச் செய்தால் தவிர்க்க முடியாமல் தங்களைத் தாங்களே குற்றவாளியாகத் தீர்க்கிறார்கள் (ரோமர் 2:1).
கபட தீர்ப்பு:
தேவன் பாசாங்கு செய்பவர்களைக் கண்டனம் செய்தார், பாசாங்குத்தனத்திற்கு எதிராக எச்சரித்தார், மேலும் அவர்களைப் போல நியாயந்தீர்க்க வேண்டாம் என்று சீஷர்களுக்கு அறிவுறுத்தினார் (மத்தேயு 6:2,5,16; 7:1, 3-5).
பகுத்தறி:
ஆவிகளை சோதித்தறியும்படி அப்போஸ்தலனாகிய யோவான் விசுவாசிகளுக்கு அறிவுறுத்துகிறார் (1 யோவான் 4:1). சாத்தானால் ஏவப்பட்ட அல்லது ஆட்கொள்ளப்பட்ட மக்கள் இருப்பார்கள். அவர்கள் பன்றிகளைப் போல நடந்து கொள்ள முடியும். ஆகையால் அத்தகையவர்கள் முன், முத்துக்களை போட கூடாது (மத்தேயு 7:6).
மதிப்பீடு:
ஒரு சீஷன் கனி தரும் வாழ்க்கைக்கு பெயர் பெற்றவன் (லூக்கா 6:43-45). இந்த மதிப்பீடு அந்த நபரின் குணத்திலும் நடத்தையிலும் வெளிப்படுகிறது.
பகுத்தறிந்து சத்தியத்தையும் நீதியையும் கண்டறிவது, ஒரு சீஷனின் இன்றியமையாத பண்பு.
நான் சரியாகப் பகுத்தறிகிறேனா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்