பல சபைகளில் ஆராதனைக்கு பயன்படுத்தப்படும் பல பாடல்களை எழுதிய ஒரு நல்ல தேவ ஊழியர், தனது குடும்பச் செலவுகளை நிர்வகிக்க கடினமாக உழைத்தார். மேலும் தான் தினமும் சம்பாதிக்க வேண்டும், அன்றைக்கு என்ன உணவோ அதை உண்ண வேண்டும், ஆனால் எதையும் சேமிக்கக்கூடாது என்று நினைத்தார். மேலும் "நான் சேமித்து வைத்தால்; எங்களுக்கு வேண்டிய ஆகாரத்தை இன்று எங்களுக்குத் தாரும் என்று நான் எப்படி ஜெபிக்க முடியும்?" என அதை அவர் நியாயப்படுத்தினார். இந்த உறுதியான நிலைப்பாட்டின் காரணமாக, அவரது மனைவி மற்றும் குழந்தைகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். "மிஞ்சின நீதிமானாயிராதே, உன்னை அதிக ஞானியுமாக்காதே; உன்னை நீ ஏன் கெடுத்துக்கொள்ளவேண்டும்?" (பிரசங்கி 7:16) என்று சாலொமோன் எச்சரிக்கிறார்.
1) துறவு:
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் சீஷர்கள் சிலர் தங்கள் வீடுகளையும் மக்களையும் கிராமங்களையும் விட்டு வெளியேறி குகைகள் அல்லது மடங்களில் வாழ்ந்தனர், திருமணமாகாதவர்கள், தங்கள் சரீரங்களைப் பயிற்றுவிக்க கடுமையான ஒழுக்கங்களைக் கடைப்பிடித்தனர். தேவன் எல்லா சீஷர்களையும் சந்நியாசியாக அழைப்பதில்லை. கர்த்தராகிய இயேசு கிறிஸ்து மக்கள் மத்தியில் தானே வாழ்ந்தார், அவருக்கு ஊழியம் செய்பவர்கள் உலகத்தை விட்டு ஓடிப்போனவர்களாக இருக்க வேண்டிய அவசியமில்லையே.
2) சட்டவாதம்:
பரிசேயர்கள் அவர்களின் பாசாங்குத்தனம் மற்றும் சட்ட முறைமைக்காக கண்டனம் செய்யப்பட்டனர். அவர்கள் நீதி, இரக்கம் மற்றும் விசுவாசத்தை புறக்கணித்தனர், ஆனால் மதங்களின் சிறிய அம்சங்களை மிகுந்த ஆர்வத்துடனும் வைராக்கியத்துடனும் பின்பற்றினர் (மத்தேயு 23:23).
3) வெளிப்புற தூய்மை:
மனிதர்கள் வெளிப்புற பக்தியைக் காட்டாமல், அக வேதனையோடும், மனந்திரும்புதலோடும், துக்கத்தோடும் தேவனின் முகத்தைத் தேட வேண்டும் என்று யோவேல் தீர்க்கதரிசி கூறுகிறார் (யோவேல் 2:12-13). இது ஒரு நபர் எவ்வளவு நேரம் உபவாசம் இருப்பார் அல்லது அடிக்கடி உபவாசம் இருப்பாரா என்பதைப் பற்றியது அல்ல, மாறாக இதயத்தில் கொண்டிருக்கும் நோக்கம் மற்றும் உந்துதல் மிக அவசியம்.
4) அனுமானம்:
அனுமானங்களை விசுவாசமாக நினைத்து சிலர் நீதிமான்களாக இருக்கிறார்கள். இறையாண்மையுள்ள தேவன் அனைத்து பறவைகளுக்கும் உணவளிக்கிறார், அதற்காக வசதியாக கூடுகளில் இருந்து கொள்ளலாம் என்பதல்ல, அவை வெளியே சென்று இரை தேட வேண்டும் (மத்தேயு 6:26).
5) சேமிப்பு அல்லது பதுக்கல்:
எறும்புகளைப் போல் சேர்த்து வைக்க சாலொமோன் ஞானமற்ற மக்களை அறிவுறுத்தினார் (நீதிமொழிகள் 6:6-8). இருப்பினும், பதுக்கல்காரர்கள் மக்களால் கண்டிக்கப்படுவார்கள், கோபத்திற்கு ஆளாவார்கள் (நீதிமொழிகள் 11:26). ஒரு பணக்காரனின் உவமையில் அவன் தனது கிடங்குகளை விரிவுபடுத்தினான் மற்றும் பல ஆண்டுகளாக தானியங்களை பதுக்கி வைத்தான் (லூக்கா 12:13-21), தேவன் அவனை நோக்கி; மதிகேடனே, உன் ஆத்துமா உன்னிடத்திலிருந்து இந்த இராத்திரியிலே எடுத்துக்கொள்ளப்படும், அப்பொழுது நீ சேகரித்தவைகள் யாருடையதாகும் என்றார்.
சாதாரண அடிப்படை சத்தியத்தை எடுத்து அதனை மிகைப்படுத்திக் கைக்கொள்வதினால் கள்ள உபதேசம் தான் மிஞ்சும். தினசரி உணவிற்காக ஜெபிப்பதன் மூலம் பரலோகத் தகப்பனைச் சார்ந்து வாழும் வாழ்க்கையை நடத்த தேவன் தம் சீஷர்களுக்குக் கற்றுக் கொடுத்தார். சேமிப்பதையோ முன்யோசனையுடன் வாழ்வதையோ அவர் கண்டிக்கவில்லை.
நான் மிஞ்சின நீதிமானா அல்லது அதிக ஞானமுள்ளவனா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்