தோராவின் படி யூத மக்கள் வருடத்திற்கு மூன்று முறை எருசலேமில் காணப்பட வேண்டும்; புளிப்பில்லாத அப்பப்பண்டிகையிலும், வாரங்களின் பண்டிகையிலும், கூடாரப்பண்டிகையிலும் (உபாகமம் 16:16) என எல்லா யூத மக்களும் வருடா வருடம் எருசலேம் ஆலயத்திற்கு வருகை தர விரும்புகிறார்கள், ஆசைப்படுகிறார்கள் மற்றும் நினைக்கிறார்கள்.
புளிப்பில்லாத அப்பப்பண்டிகை:
இந்தப் பண்டிகையின் நோக்கம், இஸ்ரவேல் தேசத்தின் குடிமக்களாக மாறுவதற்காக யூத ஜனங்கள் அடிமைகளாக இருந்த எகிப்திலிருந்து விடுதலையோடு புறப்பட்ட நாளை உயிரோடிருக்கும் நாளெல்லாம் நினைக்கும்படி இது கொண்டாடப்படுகிறது.
வாரங்களின் பண்டிகை:
இது பஸ்காவுக்கு சரியாக ஏழு வாரங்களுக்குப் பிறகு நடக்கும் விவசாயக் கொண்டாட்டமாகும், அறுப்பின் பண்டிகையாகும். இது தோராவை வழங்கவும் கொண்டாடப்படுகிறது.
கூடாரப்பண்டிகை:
இது நாற்பது ஆண்டுகளாக பாலைவனத்தில் அலைந்து, தேவனின் விசுவாசம், முன்னேற்பாடு மற்றும் பாதுகாப்பை நினைவுகூரும் ஒரு கொண்டாட்டமாகும். பாவ நிவாரண நாள் (யோம் கிப்பூர்) உபவாசத்துடன் சுய பரிசோதனை செய்து பயபக்தியோடு கொண்டாடப்படுகிறது, இதிலிருந்து ஐந்து நாட்களுக்குப் பிறகு கூடாரப் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
புதுப்பித்தல்:
இந்த யாத்திரை யூத சமூகம் தேவனுடன் தங்கள் உடன்படிக்கையை புதுப்பிக்கவும், நெருக்கமான சமூகங்களின் தேசத்தை உருவாக்கவும் உதவியது. இது பலிக்காக விலங்குகளை வளர்ப்பது, விலங்குகளுக்கான சந்தை, வங்கி, நாணய பரிமாற்றம் மற்றும் எருசலேமில் வணிக நிறுவனத்திற்கும் உதவியது. இப்போது, ஆலயம் இல்லாமல், யூதர்கள் புனித யாத்திரை மேற்கொள்கிறார்கள் மற்றும் மேற்கத்திய அழுகை சுவரில் நின்று ஜெபம் செய்கிறார்கள். 70-ல் யூதர்களுடைய பரிசுத்த ஆலயம் அழிக்கப்பட்டபோது எஞ்சியிருந்தது இதுமட்டுமே.
பரிசுத்த ஆலயம்:
யூதர்களைப் பொறுத்தவரை, தேவன் இருந்த புனித நகரத்தில் ஆலயம் புனித இடமாக இருந்தது. அந்நகரம் யேகோவா ஷம்மா என்றும் பெயர்பெறும் (எசேக்கியேல் 48:35). உலகம் முழுவதும் வேறு எந்த பரிசுத்த ஸ்தலமும் இல்லை. ஆலயம், பலிகள், தேவன் தம் மக்களைச் சந்தித்த இடம், யாத்திரை என இவைகளற்ற வாழ்க்கையை அந்தக் காலத்தில் யூதர்களால் யோசிக்க முடியாது.
ஆலயத்தை விட பெரியது:
கர்த்தராகிய இயேசுவே ஆலயம் (யோவான் 2:13-22). ஆராதனை என்பது ஒரு புவியியல் இடத்திலோ அல்லது சமூக ஊடகங்களிலோ நடப்பது அல்ல, மாறாக ஆவியோடும் உண்மையோடும் அவரைத் தொழுது கொள்ள வேண்டும் (யோவான் 4:19-24). பிதாவின் மகிமை கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவிற்குள் இருக்கிறது, அதுவே பிதாவிடம் செல்லும் ஒரே வழி (யோவான் 1:14; 14:6). கர்த்தராகிய இயேசுவே சபையின் மையமாக இருக்கிறார் (கொலோசெயர் 1:18; வெளிப்படுத்துதல் 21:21-23). பழைய ஏற்பாட்டின் அனைத்து பலி தேவைகளையும் ஆண்டவர் நிறைவேற்றினார் (மத்தேயு 5:17; எபிரெயர் 9:1-4). கர்த்தராகிய இயேசு ஆலயத்தையும், பழைய ஏற்பாட்டில் குறிப்பிடும் அனைத்தையும் விட பெரியவர்.
வாசம் செய்யும் தேவன்:
கர்த்தராகிய ஆண்டவரை ஏற்றுக் கொள்கிறவர்களிடத்தில் அவர் வந்து வாசம் செய்கிறார்; அவர்கள் ஜீவனுள்ள தேவனுடைய ஆலயமாகிறார்கள் (வெளிப்படுத்துதல் 3:20; 1 கொரிந்தியர் 6:19-20).
நான் பரிசுத்த ஆவியின் ஆலயமா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்