சமீபத்தில் ஒரு பிரபலம் இவ்வாறாகக் கூறினார்; "திருமணம் என்பது ஒரு காலாவதியான அமைப்பு". மற்றொருவர்; "மகிழ்ச்சியான திருமணம் என்ற ஒன்று இல்லை" என்பதாக கூறினார். பரப்புரையாளர்கள் (சமூக ஆலோசகர்கள்) திருமணத்திற்கான வரையறையை மாற்றியமைக்க (மறுவரையறை) விரும்புகிறார்கள்; அதாவது ஓரினச்சேர்க்கை திருமணங்களுக்கு சட்டப்பூர்வ அந்தஸ்து வழங்குவது, திருமணமாகாமலேயே கணவன் மனைவியாக இணைந்து வாழ்வது, பலதார மணம் (ஆண் பெண் இருவருமே ஒன்றுக்கு மேற்பட்ட திருமணம் செய்தல்), உடன்பிறப்புகளை திருமணம் செய்தல் என இது போன்று இன்னும் பற்பல. ஆனால் வேதாகமம் தெளிவாக எச்சரிக்கிறது; “விவாகம் யாவருக்குள்ளும் கனமுள்ளதாயும், விவாகமஞ்சம் அசுசிப்படாததாயுமிருப்பதாக" (எபிரெயர் 13:5).
1) தேவனுக்கு கனம்:
தேவன் முதல் மனிதனுக்கு திருமணம் என்ற அமைப்பை உருவாக்கினார். இது ஒரு படிப்படியான வளர்ச்சி திட்டமோ அல்லது கலாச்சாரம் தொடர்பான யோசனையோ அல்லது சில தத்துவஞானிகளின் பரிந்துரையோ அல்ல. ஆதாமுக்கு ஏவாள் என்ற ஒரு பெண்ணை உருவாக்கி அவர்களை ஒரே மாம்சமாக (சரீரம்) இணைப்பது தேவனின் முன்முயற்சி. தேவன் ஏதேன் தோட்டத்தில் இந்த அமைப்பை உருவாக்கினார், அதே நேரத்தில் கானாவூரில் நடந்த திருமணத்தில் ஒரு அற்புதத்தை நிகழ்த்தி தேவ குமாரன் இந்த அமைப்பிற்கு சான்றளித்தார் (யோவான் 2:1-11).
2) தேவ நியமனங்களுக்கு கனம்:
திருமணம் என்பது ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையேயான உடன்படிக்கை என்று தேவனுடைய கட்டளை கற்பிக்கிறது. இது வாழ்க்கையின் அனைத்து அம்சங்களிலும் அதாவது உடல், பொருள், ஆவி, ஆத்துமா என அனைத்தும் இசைந்த வாழ்க்கை. ஒருவனுக்கு ஒருத்தி என்பது குடும்பங்களுக்கான தேவனின் திட்டம்.
3) துணைக்கான கனம்:
கணவன் தன் மனைவியை நேசிக்க வேண்டும் என்று வேதாகமம் மட்டுமே கற்பிக்கிறது. பல கலாச்சாரங்களில், மனைவி என்பது ஒரு பொருள் அல்லது உடைமை அல்லது சொத்து, விருப்பமிருந்தால் வைத்துக் கொள்ளலாம் அல்லது அகற்றி விடலாம். தியாகமான அன்பின் மூலம், தூய்மையான அன்பின் மூலம், அக்கறை செலுத்துவதின் மூலம், ஊடல் கூடல் அன்பின் மூலம் வாழ்க்கைத் துணையைக் கனப்படுத்த வேண்டும் (1 கொரிந்தியர் 13; ஆதியாகமம் 2:24). இது அதிகாரம் செலுத்துவதற்கான போராட்டமோ அல்லது விளையாட்டோ அல்ல மாறாக பரஸ்பர அர்ப்பணிப்பு; ஆம் ஒருவருக்கொருவர் கீழ்ப்படிதல் (எபேசியர் 5:21-23).
4) குழந்தைகளுக்கான கனம்:
குழந்தைகளை வளர்க்கவும், பலப்படுத்தவும், பெரிய நபர்களாக ஆக்குவதற்கும் கற்றுத் தரும் இடம் வீடு. ஆபிரகாம் தன் சந்ததிக்கு நீங்கள் நீதியையும் நியாயத்தையும் செய்து, கர்த்தருடைய வழியைக் காத்து நடவுங்கள் என்று கட்டளையிடுவான் (ஆதியாகமம் 18:19) என்று தேவன் ஆபிரகாமை நம்பினார். ஆம், அப்படிக் கற்பிக்கப்படும் குழந்தைகள் தேசங்களுக்குக் கற்பிப்பார்கள்; இதனால், ஆபிரகாம் பல தேசங்களுக்கு ஆசீர்வாதமாக இருப்பானல்லவா.
5) சபைக்கான கனம்:
கிறிஸ்து மற்றும் சபைக்கான உறவு ஒரு திருமணமாக அதாவது கர்த்தராகிய இயேசு மணமகனாகவும், சபை மணமகளாகவும் விவரிக்கப்படுகிறது. இதனால் தான் ஆண்டவர் திருமணத்திற்கு அதிக முன்னுரிமையும் அந்தஸ்தும் கொடுத்தார்.
6) சமுதாயத்திற்கான கனம்:
எந்த ஒரு சமூகத்திற்கும் குடும்பம் தான் கட்டுமானப் பொருள். குடும்ப வாழ்க்கையில் தோல்வி ஏற்பட்டால், மக்கள் குழு, சமூகம் மற்றும் தேசம் பாதிக்கப்படும்.
7) தேசத்திற்கான கனம்:
வலுவான குடும்பங்கள் வலிமையான நாட்டை உருவாக்குகின்றன. குடிமக்கள் தங்கள் குடும்பங்களுக்கு விசுவாசமாக இருக்கும்போது, அவர்கள் தங்கள் அருகாமையினருக்கும், சமூகத்திற்கும், தேசத்திற்கும் விசுவாசமாக இருப்பார்கள்.
நான் திருமண உறவை கனப்படுத்துகிறேனா?
Author : Rev. Dr. J. N. Manokaran