யோபு இறுதியில் மீட்டெடுக்கப்பட்டான். அவனது மறுசீரமைப்பு ஏழு அம்சங்களைக் கொண்டது. துன்பப்பட்ட காலங்களுக்கு முன்பதாக யோபு எப்படி இருந்தானோ அந்த நிலைக்குக் கொண்டுவர தேவன் உண்மையுள்ளவராக இருந்தார், மேலும் அவர் வெகுமதியும் சேர்த்தளித்தார்.
1) ஆவிக்குரிய வாழ்வு:
மனந்திரும்புதல், ஒப்புதல் வாக்குமூலம் மற்றும் பணிவின் வெளிப்பாடு ஆகியவை தேவனுடனான அவரது உறவை மீட்டெடுத்தன. இந்த காலங்கள், கர்த்தருடனான யோபுவின் உறவு இன்னும் வலுவாகவும் நெருக்கமாகவும் ஆனது. மேலும் யோபு நல்ல ஆவிக்குரிய பக்குவத்தையும் அடைந்தார் எனலாம்.
2) அருட்பணி:
ஏழைகள், தேவையில் உள்ளோர், விதவைகள், அனாதைகள், வேலைக்காரர்கள் மற்றும் அந்நியர்களிடம் யோபு தாராள மனப்பாங்குடன் இருந்தார். இப்போது, அவருக்கு புதிய பணி தொடங்கியது; அவருடைய நண்பர்களிடம் ஊழியம் செய்வதும், அவர்களுக்காக பரிந்து பேசுவதும் என யோபுவிற்கு ஒரு பணி வழங்கப்பட்டது; மேலும் அவர்களின் சார்பாக சர்வாங்க தகனபலியிடுவதும் என யோபுவிற்கு அருட்பணி ஆரம்பித்தது. இது யோபுவிற்கு கிடைத்த என்ன ஒரு பாக்கியம்? (யோபு 42:8). முன்பு, யோபு தனது சொந்த குடும்பத்துக்காக மாத்திரம் ஆசாரியனாக இருந்தான், இப்போது அவன் தனது நண்பர்களுக்கும் ஆசாரியனானே.
3) உடைமை:
யோபு தனது உடைமைகள் அனைத்தையும் திரும்பப் பெறுமளவு தேவன் ஆசீர்வதித்தார். தேவன் அவனுக்கு பலம், வாய்ப்புகள், தொடர்புகள் மற்றும் மனிதர்களிடம் தயவையும் பெற்றுக் கொள்ளச் செய்தார்; மேலும் "யோபுக்கு முன் இருந்த எல்லாவற்றைப் பார்க்கிலும் இரண்டத்தனையாய்க் கர்த்தர் அவனுக்குத் தந்தருளினார்" (யோபு 42:10).
4) உணர்வு:
யோபுவின் துக்கமெல்லாம் ஆனந்தக் களிப்பாய் மாறியது. அவன் தனது இதயத்தில் சமாதானத்தையும், மனதில் திருப்தியையும் அனுபவித்து, துன்பத்தின் போது தன்னைப் புறக்கணித்தவர்களையும் மன்னித்தான். அவனுக்கு உறவினர்கள், நண்பர்கள் என பலரும் வந்து ஆறுதல் கூறி பரிசுகளை வழங்கினர் (யோபு 42:11).
5) சரீரம்:
யோபு நன்கு குணமடைந்தான், அவனுடைய உடல்நிலை மீட்கப்பட்டது. புண்கள் குணமாகி, சரீர வலி, அரிப்பு, காய்ச்சல் போன்ற மற்ற அறிகுறிகள் எல்லாம் போய்விட்டன. யோபு 140 வருடங்கள் வாழ்ந்து பூரண வயதுள்ளவனாய் மரித்தான் (யோபு 42: 16-17).
6) குடும்பம்:
யோபுக்கும் அவனுடைய மனைவிக்கும் இன்னும் பத்து குழந்தைகளைப் பெற முடிந்தது என்பது ஒரு அதிசயமே. யோபுவின் மனைவிக்கும் இது ஒரு வெகுமதியாக இருந்தது, முதிர்ந்த வயதில் அதிக குழந்தைகளைப் பெற்றெடுக்க தேவ கிருபையைப் பெற்றாள். அட, தேசத்தில் எங்கும் யோபின் குமாரத்திகளைப்போல் செளந்தரியமான பெண்கள் காணப்படவில்லையாமே (யோபு 42:15). மேலும் அவர்கள் சகோதரரின் நடுவிலே பெண்பிள்ளைகளுக்கு யோபு சுதந்தரம் கொடுத்தான்.
7) சமூகம்:
சமூகத்தில் யோபுவிற்கான மரியாதை மற்றும் கண்ணியம் மீட்டெடுக்கப்பட்டது. முன்பு போலவே, அவர் நகரத்தின் வாயிலில் தலைவர்கள், பெரியவர்கள் மற்றும் நியாயாதிபதிகளில் ஒருவரானான், ஆம் புத்திசொல்லி இளைத்த கைகளைத் திடப்படுத்தினான்.
நான் துன்பங்களைச் சந்தித்தாலும், என் மீட்பிற்காக அல்லது சுகவாழ்வு மீண்டும் துளிர்க்க தேவனை நம்புகிறேனா? சிந்திப்போமா.
Author: Rev. Dr. J .N. மனோகரன்