உலகின் மிகப் பெரிய பணக்காரர்களில் ஒருவரான பில் கேட்ஸ், தூக்கம் சோம்பேறித்தனமானது மற்றும் தேவையற்றது என்று தான் நினைத்ததாகக் கூறினார். தனது 30 மற்றும் 40 வயதுகளில், அவர் தனது தூக்கத்தை குறைத்தார். மூளை உட்பட உடலின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு தூக்கம் அவசியம் என்பதை பிற்காலத்தில் உணர்ந்தார் (NDTV செய்திகள் ஆகஸ்ட் 9, 2023). பொதுவாக, சரீர தேவையின் அடிப்படையில் புத்துணர்வு ஆவதற்கும் மற்றும் மறுசீரமைப்புக்கும்; உணர்வுகளின் அடிப்படையில் ஒரு அமைதி தேவை; ஆவிக்குரிய விதத்தில் தேவன் மீது நம்பிக்கை வைத்து உறங்குதல் என தூக்கம் அதனதன் தேவையை பூர்த்தி செய்கிறது.
ஆதாமின் தூக்கம்
தேவன் ஆதாமுக்கு ஆழ்ந்த உறக்கத்தை அளித்து, ஏவாளை அவனது விலா எலும்பில் இருந்து உருவாக்கினார். தேவ ஜனங்கள் அவரை நம்பி அவரிடம் எல்லாவற்றையும் ஒப்படைத்துவிட்டு தூங்கும்போது, அவர் சிறந்ததைக் கொண்டுவர கிரியைச் செய்கிறார். ஏவாள் ஆதாமுக்கு அவனது வாழ்க்கைத் துணையாகவும் நல்ல உதவியாளராகவும் உருவாக்கப்பட்டு அளிக்கப்பட்டாள் அல்லவா (ஆதியாகமம் 2:22-24).
ஆழ்ந்த இனிமையான தூக்கம்
தேவன் தமக்குப் பிரியமானவனுக்கு நித்திரை அளிக்கிறார் (சங்கீதம் 127:2). தேவனின் தாராளமான கிருபையானது, தமக்கு அன்பானவர்கள் நிம்மதியாக தூங்க உதவுகிறது. எரேமியா தீர்க்கதரிசி மிகவும் நொந்து போனவராக, துக்கமாக இருந்தார், ஆனால் அது இன்பமாக மாறியது. எனவே, அவர் தனது தூக்கம் இனிமையானதாக அல்லது மகிழ்ச்சியாக இருந்தது என்று எழுதுகிறார். "இதற்காக நான் விழித்துப்பார்த்துக் கொண்டிருக்கிறேன்; என் நித்திரை எனக்கு இன்பமாயிருந்தது" (எரேமியா 31:26).
களைப்பில் வரும் தூக்கம்
இயேசு தம் சீஷர்களுடன் படகில் பயணம் செய்தபோது அயர்ந்தார் (மாற்கு 4:37). அலைகள், புயல்கள், காற்றுகள், தண்ணீர் கொந்தளிப்பு போன்றவை கூட அவரை எழுப்ப முடியவில்லை. சீஷர்களின் துயர அழைப்புகள் மட்டுமே அவரை எழுப்பின. கடினமான வேலைகளைச் செய்பவர்கள், தங்கள் தூக்கத்தை அனுபவிக்கிறார்கள். ஆம், அனைவரும் விரும்பும் இன்பங்களில் தூக்கமும் ஒன்று. "மனுஷன் புசித்துக் குடித்து, தன் பிரயாசத்தின் பலனை அநுபவிப்பதைப்பார்க்கிலும், அவனுக்கு ஒரு நன்மையும் இல்லை; இதுவும் தேவனுடைய கரத்திலிருந்து வருகிறது என்று நான் கண்டேன்" (பிரசங்கி 2:24).
தூக்கமா அல்லது மன அழுத்தமா
அரியணையை கைப்பற்றுவதற்காக நடந்த உள்நாட்டுப் போரில் அப்சலோமால் தாவீது பின்தொடரப்பட்டார். இருப்பினும், தாவீது தேவனை நம்பி உறங்க முடிந்தது. அதைதான் “நான் படுத்து நித்திரை செய்தேன்; விழித்துக்கொண்டேன்; கர்த்தர் என்னைத் தாங்குகிறார்"
என்கிறார் (சங்கீதம் 3:5). ஆம், பயமோ மன அழுத்தமோ கவலையோ இல்லை.
முட்டாள் தூக்கம்
முதலாவதாக, வேலை செய்ய விரும்பாதவர்கள், உறங்குவார்கள், வறுமையில் மூழ்குவார்கள். "இன்னுங்கொஞ்சம் உறங்கட்டும், இன்னுங்கொஞ்சம் கைமுடக்கிக்கொண்டு நித்திரை செய்யட்டும் என்பாயோ? உன் தரித்திரம் வழிப்போக்கனைப்போலும் உன் வறுமை ஆயுதமணிந்தவனைப்போலும் வரும்"
(நீதிமொழிகள் 24:33-34). இரண்டாவது, சவுலின் மெய்க்காவலர்கள் பணியின் போது தூங்கினர், அவர் தாவீதினால் கொல்லப்பட்டிருக்க முடியும் (1 சாமுவேல் 26:7). மூன்றாவதாக , யோனா தேவ அழைப்பிலிருந்தும் சமூகத்திலிருந்தும் ஓடிப்போனார், கப்பலில் நன்கு தூங்கினார், பின்னர் சமுத்திரத்தில் எறியப்பட்டார் (யோனா 1:4-5). நான்காவதாக, ஒருவேளை பவுலின் நீண்ட பிரசங்கத்தால் சலித்து, ஜத்திகு என்னும் வாலிபன் மூன்றாம் மாடியிலிருந்து கீழே விழுந்தான் (அப்போஸ்தலர் 20:9). ஐந்தாவதாக, முட்டாள் கன்னிகள் சரியான ஆயத்தமின்றி நித்திரை மயக்கமடைந்து தூங்கி விட்டார்கள் (மத்தேயு 25:1-13).
தேவன் எனக்கு அளிக்கும் ஆழ்ந்த நிம்மதியான உறக்கத்தை நான் அனுபவிக்கிறேனா?
Author: Rev. Dr. J .N. மனோகரன