ஜேமி கூட்ஸ் அமெரிக்காவின் கென்டக்கியில் உள்ள போதகர். பாம்புகள் மீது தேவன் தனக்கு அதிகாரம் கொடுத்திருப்பதால், பாம்பு கடியில் இருந்து தனக்கு நோய் எதிர்ப்பு சக்தி இருப்பதாக ஜேமி கூறினார். சபை ஆராதனைகளின் போது விரியன், சங்கிலிக்கருப்பன் போன்ற பாம்புகளைக் கையாள்வார். இப்படியிருக்கும்போது ஒரு ஆராதனையில், அவரை பாம்பு கடித்தது. அவர் பலவீனம் அடைவதை சபை கவனித்தது, ஆனாலும் அவசர சேவைக்கான மருத்துவ நிபுணர்களை அழைக்க மறுத்துவிட்டார். சிறிது நேரத்தில், அவர் தானாகவே வீட்டிற்கு சென்று படுத்திருந்தார், அவசரகால மருத்துவ உதவியாளர்கள் வீட்டிற்கு வரவழைக்கப்பட்டு, அவரை வலுக்கட்டாயமாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர், அங்கு அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது (டெய்லி ஹன்ட், ஜூன் 3, 2024).
விசுவாசம் மற்றும் அனுமானம்:
விசுவாசத்திற்கும் அனுமானத்துக்கும் உள்ள வித்தியாசத்தைப் புரிந்துகொள்ளாத ஜேமி கூட்ஸ் போன்ற அநேகர் இருக்கிறார்கள். விசுவாசம் என்பது தேவன், அவருடைய சத்தியம், அவருடைய வார்த்தை, அவருடைய வாக்குத்தத்தங்கள் மற்றும் அவருடைய சித்தத்தின் அடிப்படையிலானது. விசுவாசிகளுக்கு பாம்பு கடிக்கு எதிராக நோய் எதிர்ப்பு சக்தி கொடுக்கப்படுவதாக வேதாகமம் போதிக்கவில்லை. இந்த அனுமானம் மாற்கு நற்செய்தியில் உள்ள வசனங்களை தவறாகப் புரிந்துக் கொண்டு பயன்படுத்தியதின் அடிப்படையில் உள்ளது (மாற்கு 16:17-18). அந்த வசனத்தின் அர்த்தம், அவர்கள் விஷத்தைக் குடிக்கக் கட்டாயப்படுத்தப்படும் அல்லது பாம்புகளுக்கு மத்தியில் வீசப்படும் சூழ்நிலைகள் போன்று இருக்கலாம். அப்படி சூழ்நிலைகள் வந்தாலும், சீஷர்கள் பயமின்றி காணப்படலாம், ஏனென்றால் ஒன்று எவ்வித சேதமுமின்றி தேவன் காப்பார் அல்லது தேவனுக்காக இரத்த சாட்சியாக இறக்கலாம்.
பவுலின் வாழ்வில் நடந்த அதிசயம்:
கப்பல் விபத்திற்குப் பிறகு, மெலித்தா தீவை வந்தடைந்தனர், மழை மற்றும் குளிர் காரணமாக பவுல் நெருப்புக் குச்சிகளை சேகரித்து நெருப்பில் போட்டுக் கொண்டிருந்தார், அப்போது விஷப்பாம்பு ஒன்று வெப்பத்தினால் வெளியேறி வந்து பவுலின் கையில் கடித்தது, ஆனால் பவுல் அந்த பாம்பை தீயினுள் உதறினான். பவுலுக்கு எந்தத் தீங்கும் ஏற்படவில்லை (அப்போஸ்தலர் 28:1-8). உண்மையில், மாற்குவின் நற்செய்தி இதைத்தான் போதிக்கிறது.
பாம்பின் தூண்டுதல்.. தேவனை சோதித்தல்:
கர்த்தராகிய இயேசு கிறிஸ்து சாத்தானால் சோதிக்கப்பட்டார், தேவாலயத்தின் உயரமான இடத்தில் கொண்டு போய் நிறுத்தி, “நீர் தேவனுடைய குமாரன் என்பது உண்மையானால், இங்கிருந்து கீழே குதியும். ஏனென்றால், “‘தேவன் உமக்காகத் தன் தூதர்களுக்குக் கட்டளையிடுவார், தூதர்களின் கரங்கள் உன்னைப் பற்றும். ஆகவே உன் கால்கள் பாறைகளில் மோதாது’ என்று வேதவாக்கியங்களில் எழுதியிருக்கிறது” எனக் கூறினான். ஆனால் அதற்கு இயேசு “தேவனாகிய உன் கர்த்தரை சோதிக்கக் கூடாது என்றும் வேதவாக்கியங்களில் எழுதப்பட்டுள்ளதே” என்று சாத்தானைக் கடிந்து கொண்டார் (மத்தேயு 4:5-7). ஜேமி கூட்ஸ் பாம்பை மட்டும் சீண்டவில்லை, அவர் தனது முதிர்ச்சியின்மை, அனுமானம் மற்றும் வேதத்தை தவறாகப் பயன்படுத்துவதன் மூலம் தேவனை சோதித்தார்.
சிக்கல்களை வரவழைத்தல்:
துன்புறுத்தலையும் பிரச்சனையையும் தாமாகவே வரவழைக்க தேவனுடைய ஜனங்களுக்கு வேதாகமம் கற்பிக்கவில்லை. தேவன் தம் சீஷர்களுக்குப் பாம்புகளைப் போல் சாதுரியமாக இருக்க கற்றுக் கொடுத்தார், பாம்புகளுடன் விளையாட சொல்லவில்லை (மத்தேயு 10:16).
நான் பரபரப்பை உருவாக்கும் நபரைப் பின்பற்றுகிறேனா அல்லது வேதவாக்கியங்களை பின்பற்றுகிறேனா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்