நிலச்சரிவின் போது அநேக வீடுகள் இடிபாடுகளுக்கு மத்தியில் புதைந்தது, இடிபாடுகளுக்கு அடியில் புதையுண்ட ஒருவர்: “யாராவது என்னைக் காப்பாற்றுங்கள். நான் ஒரு கோடீஸ்வரன்; உங்களுக்கு பல லட்சங்களை தருகிறேன்” என்று கூக்குரலிட்டார். துரதிர்ஷ்டவசமாக, அவர் வெளியே இழுக்கப்படுவதற்கு முன்பே, அவரது உயிர் பிரிந்தது. ஆம், பணத்தை வைத்து அவரைக் காப்பாற்ற முடியவில்லையே. “தேவன் தம்முடைய பிள்ளைகளுக்கு பரலோகத்தில் வைத்திருக்கின்ற ஆசீர்வாதங்களை நம்பிக்கையோடு எதிர்ப்பார்க்கின்றோம். அந்த ஆசீர்வாதங்கள் அழிவற்றது; அழிக்கப்பட முடியாதது; அதன் அழகு மாறாதது” (1 பேதுரு 1:4). கூடுதலாக, வேதாகமம் புதையல் மற்றும் வெகுமதிகளைப் பற்றி கற்பிக்கிறது.
கர்த்தரே சுதந்தரம்:
“கர்த்தர் மேலும் ஆரோனிடம், “நீ எவ்வித நிலத்தையும் பெறமாட்டாய். மற்றவர்களுக்குச் சொந்தமான எதுவும் உனக்குச் செந்தமாவதில்லை. கர்த்தராகிய நானே உனக்கு உரியவர். இஸ்ரவேல் ஜனங்கள் நான் வாக்களித்தபடி நிலத்தைப் பெற்றுக்கொள்வார்கள். ஆனால் என்னை நானே உனக்கு சுதந்திரமாகத் தந்துள்ளேன்” (எண்ணாகமம் 18:20). இருப்பவராகவே இருக்கும் தேவன், நித்திய பிதா, பரிசுத்தமான தேவன் லேவியர்கள் மற்றும் ஆசாரியர்களின் சுதந்தரமாவார். நாம் கிறிஸ்துவுக்குள் ராஜாக்களாகவும் ஆசாரியர்களாகவும் இருக்கிறோம் என்று பேதுரு எழுதுகிறார் (1 பேதுரு 2:9-12). கர்த்தர் தன்னுடைய பங்கு என்றும் அவருடைய சுதந்தரம் இனிமையானது என்றும் சங்கீதக்காரன் பாடுகிறான் (சங்கீதம் 16:5-6). கர்த்தராகிய இயேசு கிறிஸ்து ஒவ்வொரு சீஷருக்கும் பரலோகத்தில் பிதாவின் வீட்டில் ஒரு இடத்தை ஆயத்தம் செய்வதாக வாக்குறுதி அளித்தார் (யோவான் 14:1-3).
பொக்கிஷங்கள்:
கர்த்தராகிய இயேசு கிறிஸ்து தம் சீஷர்களுக்கு பரலோகத்தில் பொக்கிஷங்களைச் சேமித்து வைக்கக் கற்றுக் கொடுத்தார் (மத்தேயு 6:19-21). கர்த்தருடைய வேலையிலும், ராஜ்ய வேலையிலும் முதலீடு செய்வதும், எளியவர்களிடம் தாராள குணத்துடன் இருப்பதும் பரலோகத்தில் பொக்கிஷத்தை சேமித்து வைப்பதாகும். பரலோகத்தில், கொள்ளையர்கள் கொள்ளையடிக்க முடியாது, இயற்கை சீரழிவு நடக்காது. ராஜ்ய நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படும் போது தற்காலிக பொக்கிஷங்கள் பரலோக பொக்கிஷங்களாக மாற்றப்படலாம். பூமிக்குரிய செல்வத்துடன், ஒரு விசுவாசி நித்திய நண்பர்களைப் பெற முடியும், அவர்கள் பரலோகத்தில் அவருடன் இருப்பார்கள் (லூக்கா 16:9).
வெகுமதி:
தேவன் தம் மக்களுக்கு வெகுமதி அளிக்க உண்மையுள்ளவர். அவர்கள் ஒரு கோப்பை தண்ணீரைப் பகிர்ந்து கொண்டாலும், அவர்கள் வெகுமதியை இழக்க மாட்டார்கள். பரிசுத்தவான்களின் உழைப்பை மறப்பதற்கு தேவன் அநீதியானவர் அல்ல. விசுவாசிகளின் அனைத்து செயல்களும் சோதிக்கப்படும், நெருப்பினால் சோதித்தபின் பொன்னாக விளங்குமல்லவா (மத்தேயு 10:42; எபிரெயர் 6:10; 1 கொரிந்தியர் 3:13-15). பரிசுத்தவான்கள் பெறும் வெகுமதிகளில் கிரீடங்களும் ஒன்றாகும், மேலும் தனக்காக ஒரு கிரீடம் நிச்சயமாக உண்டு என்பதில் பவுல் உறுதியாக இருந்தார் (2 தீமோத்தேயு 4:8).
எனக்கு நித்திய ஆஸ்தி, பொக்கிஷம் மற்றும் வெகுமதிகள் உள்ளதா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்