ஒரு மனிதன் தன் மகனுக்கு மாபெரும் ஆஸ்தியை விட்டுச் செல்ல விரும்பினார். மலை உச்சியில், இயற்கை அழகுடன், அனைத்து நவீன வசதிகளுடன் கூடிய மாளிகையை கட்டினார். தனது மகனின் பிறந்தநாளான 20ஆம் தேதி உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் கொண்டாடி அவனுக்கு கொடுக்க விரும்பினார். கொண்டாட்டத்திற்கு ஒரு நாள் முன்பு, புதிய வீடு இடிந்து நிலச்சரிவு ஏற்பட்டது. ஆம், பாறையிலோ, மலையிலோ கட்டப்பட்ட வீடு கூட அழிந்து போகும். ஆயினும்கூட, விசுவாசிகளுக்கு அழியாத, மாசற்ற, வாடாததுமான ஒரு சுதந்தரம் இருப்பதாக பேதுரு எழுதுகிறார் (1 பேதுரு 1:4).
அழியாதது:
அழிவு என்றால் அழித்தல், இல்லாது போதல் மற்றும் மறைந்து போதல் என்று பொருள். ஆம், சிறந்த தொழில்நுட்பம் மற்றும் பொருட்களுடன் கட்டப்பட்ட சிறந்த வீடு; சில நிமிடங்களில் அழிந்தது. தேவன் தம் மக்களுக்காக வைத்திருக்கும் சுதந்தரம்3 அழியாதது. தேவனால் ஆயத்தம் செய்யப்பட்ட சொத்தை எந்த சக்தியாலும் அழிக்க முடியாது. பரலோகத்தில், அநேக வாசஸ்தலங்கள் உள்ளன, தேவன் தனது அன்பான சீஷர்களுக்காக ஒரு ஸ்தலத்தை ஆயத்தம் செய்திருக்கிறார் அல்லது வடிவமைத்திருக்கிறார் (யோவான் 14:1).
மாசற்றது:
தேவன் பரிசுத்தமானவர், தேவதூதர்கள் அவரைப் பரிசுத்தமாக தொழுது கொள்கிறார்கள் (ஏசாயா 6:1-3). எந்தத் தீமையும், சேதப்படுத்தவோ, அழிக்கவோ, இழிவுபடுத்தவோ அல்லது சிதைக்கவோ என எதுவும் அவருடைய பரிசுத்த பிரசன்னத்தில் நுழைய முடியாது. பரலோகத்தில் தங்களுடைய பொக்கிஷங்களைச் சேமித்து வைக்கும்படி கர்த்தர் தம் சீஷர்களுக்கு அறிவுறுத்தினார். இவ்வுலகில் சேமித்து வைக்கப்படும் பொருட்கள் பூச்சியாவது, துருவாவது கெடுக்கும் (மத்தேயு 6:19-21). பரலோகத்தில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் பொக்கிஷங்கள் கெட்டுப் போகாது, துருப்பிடிக்காது, பழுதடையாது, திருடுபோகாது. இன்னும் வேறு வார்த்தைகளில் கூறுவதானால், தேவன் தரும் சுதந்தரம் பரிசுத்தமானது மற்றும் மகிமையானது.
மங்காதது :
மங்குதல் என்பது பிரகாசம், புத்துணர்ச்சி அல்லது அசல் தன்மையை இழப்பதாகும். நாட்கள் செல்ல செல்ல பல பளபளப்பான பொருட்கள் மங்கிவிடும். பரலோகம் எந்த வகையிலும் மங்காது அல்லது குறைவதில்லை. எனவே, சுதந்தரத்தை குறைக்கவோ, தேய்மானமாக்கவோ அல்லது ஒன்றுமில்லாமல் செய்யவோ முடியாது.
கிரீடங்கள்:
கிரீடங்கள் நித்திய சுதந்தரத்திற்கு கூடுதல் மதிப்பாகும். கர்த்தருடைய உடன் மேய்ப்பர்களாக மேய்த்து உழைக்கிறவர்கள் மகிமையுள்ள வாடாத கிரீடத்தைப் பெறுவார்கள் என்று பேதுரு எழுதுகிறார் (1 பேதுரு 5:4). நீதியின் கிரீடம் தனக்கு காத்திருக்கிறது என்று பவுல் குறிப்பிடுகிறார் (2 தீமோத்தேயு 4:8). அழிவில்லா கிரீடத்தைப் பற்றி பவுல் எழுதுகிறார் (1 கொரிந்தியர் 9:25). பரலோகம் மகிழ்ச்சிக்குரிய இடம், எனவே விசுவாசிகள் மகிழ்ச்சியின் கிரீடத்தைப் பெறுவார்கள் (1 தெசலோனிக்கேயர் 2:19; பிலிப்பியர் 4:1)
என் விருப்பம் தெய்வீக நித்திய ஆஸ்தியா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்