தேவன் ஒரு எழுத்தாளர்; தேவன் பல வழிகளில் எழுதினார் மற்றும் தொடர்ந்து எழுதுகிறார்.
1) மரபணு (டிஎன்ஏ):
சங்கீதக்காரன் எழுதுகிறான்; "என் கருவை உம்முடைய கண்கள் கண்டது; என் அவயவங்களில் ஒன்றாகிலும் இல்லாதபோதே அவைகள் அனைத்தும், அவைகள் உருவேற்படும் நாட்களும், உமது புஸ்தகத்தில் எழுதியிருந்தது" (சங்கீதம் 139:16). கோடிக்கணக்கான மக்களிடையே ஒரே மாதிரியான உடல் அம்சங்களோ அல்லது புத்திசாலித்தனமோ அல்லது மனோபாவமோ கொண்ட இரண்டு நபர்கள் கூட இல்லை என்பது எவ்வளவு ஆச்சரியமாக இருக்கிறது. தேவன் மரபணு குறியீட்டை ஒவ்வொருவருக்கும் தனித் தனியாக எழுதுகிறார்; அது வளர்ச்சிக்காகவும், முன்னேற்றத்திற்காகவும் மற்றும் ஆரோக்கியத்திற்கும் அவசியமானது.
2) பிரமாணம்:
இரண்டு கல் பலகைகளைக் கொண்டுவரும்படி தேவன் மோசேக்கு கட்டளையிட்டார். அதன் மீது அவர் அனைத்து மனிதகுலத்திற்குமான பத்துக் கட்டளைகளை எழுதினார். எல்லா மனிதர்களும் வேதாகமத்தில் வெளிப்படுத்தப்பட்ட அவருடைய கட்டளைகளின் படி அல்லது நியமனங்களின்படி நியாயந்தீர்க்கப்படுவார்கள்.
3) சுவரில் எழுதுதல்:
பெல்ஷாத்சார் எருசலேம் தேவாலயத்தில் இருந்து கொண்டு வந்த பொன் வெள்ளி பாத்திரங்களைப் பயன்படுத்தி விருந்து வைத்து, பொன்னும் வெள்ளியும் வெண்கலமும் இரும்பும் மரமும் கல்லுமாகிய தேவர்களைப் புகழ்ந்தார்கள். அந்த நேரத்தில் மனுஷர் கைவிரல்கள் தோன்றி விளக்குக்கு எதிராக ராஜ அரமனையின் சாந்து பூசப்பட்ட சுவரிலே எழுதிற்று; எழுதின அந்தக் கையுறுப்பை ராஜா கண்டான். ஆம், அவனுக்கு தேவன் தீர்ப்பு எழுதினார். "எழுதப்பட்ட எழுத்து என்னவென்றால்: மெனே, மெனே, தெக்கேல், உப்பார்சின் என்பதே. இந்த வசனத்தின் அர்த்தமாவது: மெனே என்பதற்கு, தேவன் உன் ராஜ்யத்தை மட்டிட்டு அதற்கு முடிவுண்டாக்கினார் என்றும், தெக்கேல் என்பதற்கு நீ தராசிலே நிறுக்கப்பட்டு, குறையக் காணப்பட்டாய் என்றும், பெரேஸ் என்பதற்கு, உன் ராஜ்யம் பிரிக்கப்பட்டு, மேதியருக்கும் பெர்சியருக்கும் கொடுக்கப்பட்டது என்றும் அர்த்தமாம் என்றான். அன்று இராத்திரியிலே கல்தேயரின் ராஜாவாகிய பெல்ஷாத்சார் கொலைசெய்யப்பட்டான்" (தானியேல் 5). சில அறிஞர்கள், விபச்சாரத்தில் சிக்கிய ஸ்திரீயைக் கல்லெறிந்து கொல்ல விரும்புவோருக்கு மேற்கண்ட விஷயத்தை நினைவூட்டுவதற்காக கர்த்தராகிய இயேசு தரையில் எழுதினார் (யோவான் 8:6) என்று எண்ணுகிறார்கள்.
4) ஜீவ புஸ்தகம்:
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை இரட்சகராக ஏற்றுக்கொண்ட அனைவரின் பெயர்களும் ஜீவ புஸ்தகத்தில் எழுதப்பட்டுள்ளன (பிலிப்பியர் 4:3).
5) ஞாபகப்புஸ்தகம்:
"கர்த்தருக்குப் பயந்தவர்களுக்காகவும் அவருடைய நாமத்தைத் தியானிக்கிறவர்களுக்காகவும் ஞாபகப்புஸ்தகம் ஒன்று அவருக்கு முன்பாக எழுதப்பட்டிருக்கிறது" என்பதாக (மல்கியா 3:16) தீர்க்கதரிசி எழுதுகிறார். தேவனுக்கு நினைவக ப்ராம்ப்டரோ (செய்தியாளர்கள் படிக்க வார்த்தைகளைக் காண்பிக்க அவர்கள் முன்பு இருக்கும் சாதனம்) அல்லது தரவைப் பதிவு செய்வதற்கான ஒரு கருவியோ தேவையில்லை. உதாரணமாக; பாரசீகத்தைப் போன்ற பண்டைய மன்னர்கள் அரசர், அரசரின் குடும்பம் மற்றும் ராஜ்யத்திற்கு சேவை செய்தவர்கள் பற்றிய புத்தகங்கள், பதிவுகள் மற்றும் ஆவணங்கள் ஆகியவற்றைக் கொண்டிருந்தனர். அவர்களுக்கு வெகுமதி வழங்கப்படும். மொர்தெகாயின் பெயர் பதிவு செய்யப்பட்டிருந்தது ஆனால் வெகுமதி அளிக்கப்படவில்லை, ஒரு தூக்கமில்லாத இரவு ராஜா அதைப் படிக்கும் போது அவனுக்கு வெகுமதி அளித்தார் (எஸ்தர் 6:1-3). "சீஷன் என்னும் நாமத்தினிமித்தம் இந்தச் சிறியரில் ஒருவனுக்கு ஒருகலசம் தண்ணீர் மாத்திரம் குடிக்கக் கொடுக்கிறவனும் தன் பலனை அடையாமற்போகான்" (மத்தேயு 10:42) ஆம், தேவனுக்காக செய்கிற காரியங்கள் அல்லது அன்பின் பிரயாசங்கள் எதையுமே அவர் மறந்து விடுவதேயில்லை (எபிரெயர் 6:10).
தன்னை வெளிப்படுத்த எழுதும் எல்லாம் அறிந்த தேவனை நான் மகிழ்ச்சியுடன் ஆராதிக்கின்றேனா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்