தேவ ஜனங்கள் விசுவாசத்தில் ஈடுபடுத்திக் கொள்ள வேண்டியிருந்தது, சில சமயங்களில் தங்களிடம் உள்ளதை மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும் அல்லது தங்களிடம் உள்ளதைக் கூட கைவிட வேண்டும் என்ற நிலை. தேவனை நம்புதல் என்பது, அவரது அழைப்பு, அவரது விசுவாசம் மற்றும் அவரது வாக்குத்தத்தங்களை நம்பி அவர்கள் முன்பின் அறியாத பாதைகளில் சென்றனர். அவர்கள் விசுவாசத்தில் உறுதியாக இருந்தார்கள், தேவன் அவர்களுக்கு அதற்கான பலனளித்தார்.
இலக்கு இல்லாமல்:
ஆபிரகாம் தனது சொந்த ஊரான ஊர், மெசொப்பொத்தாமியா விட்டு வெளியேற வேண்டியிருந்தது; பின்னர் புதிய நகரமான ஆரான் மற்றும் தெரியாத இடத்திற்குச் செல்கிறான் (அப்போஸ்தலர் 7:1-4; ஆதியாகமம் 12:1). வரைபடம் அல்லது ஜிபிஎஸ் இல்லாமல் அவன் செல்ல வேண்டியிருந்தது. வானத்தில் நட்சத்திரங்கள் உதவியிருக்கலாம், ஆனால் எந்த திசையில் செல்ல வேண்டும் என்பதை அறிய அவனுக்கு இலக்கில்லை. ஆம், தேவன் அவனைப் பல நாடுகளுக்குத் தந்தையாக ஆக்கினார்.
வளங்கள் இல்லாமல்:
தேவன் தாம் தேர்ந்தெடுத்த மக்களை ஏன் கைவிட்டார் என்று கிதியோன் ஆச்சரியப்பட்டான். மீதியானியரை எதிர்த்துப் போரிடத் தன்னிடம் உள்ள பலத்துடன் செல்லும்படி ஆண்டவர் கட்டளையிட்டார் (நியாயாதிபதிகள் 6:14). கிதியோன் தேவனுடைய இறையாண்மை அதிகாரத்தையும் வல்லமையையும் நம்பி, இஸ்ரவேலரை அவர்களுடைய அடிமைத்தனத்திலிருந்து விடுவித்தான்.
வாள் இல்லாமல்:
போர் விதிகளை மாற்றிய கோலியாத்துக்கு எதிராக தனித்து போராட தாவீது தானாக முன்வந்தான். சவுலும் அவனுடைய படையும் பயந்தார்கள். ஆனால் ஒரு அனுபவமற்ற, பயிற்சி பெறாத ஆடு மேய்க்கும் பையன் செல்ல தயாராக இருந்தான். சவுல் தாவீதுக்கு பொருந்தாத, தனது கவசத்தை கொடுத்தான். வாளோ, ஈட்டியோ, கேடயமோ இல்லாமல், ஜீவனுள்ள தேவனின் நாமத்தோடு கூட ஒரு சில கற்கள் மற்றும் கவணோடு சென்றான். ஆம், கோலியாத்தை தோற்கடிக்க கவணும் கல்லும் போதுமானதாக இருந்தது (1 சாமுவேல் 17).
படை இல்லாமல்:
இஸ்ரவேல் மக்களை எகிப்திய அடிமைத்தனத்திலிருந்து விடுவிக்க தேவன் மோசேயை அனுப்பினார் (யாத்திராகமம் 3:10). பார்வோனின் வீட்டில் ஒரு இளவரசனாக இருந்ததால், எகிப்தியர்களின் இராணுவ பலத்தை மோசே அறிந்திருந்தான். நிச்சயமாக, எபிரேய அடிமைகளை விடுவிப்பதற்கு எகிப்தின் இராணுவத்தை விட அதிக சக்திவாய்ந்த இராணுவம் அவனுக்குத் தேவைப்படும். ஆனால் மோசே வெறுமனே ஒரு கோலுடன் தான் அனுப்பப்பட்டான், ஆம், அவன் இஸ்ரவேலை விடுவித்து அடிமைத்தனத்திலிருந்து ஒரு தேசமாக மாற்றினான்.
நெருப்பு இல்லாமல்:
யெகோவா நெருப்பினால் பதிலளிக்கிறார் என்பதை இஸ்ரவேல் தேசத்திற்கு நிரூபிக்க பாகாலின் கள்ளத் தீர்க்கதரிசிகளை எலியா எதிர்கொள்ள வேண்டியிருந்தது. பலிபீடத்தை எழுப்பவும், பலி செலுத்தவும், விலங்குகள் மீது தண்ணீர் ஊற்றவும், பின்னர் ஜெபிக்கவும் அவன் விசுவாசமற்ற இஸ்ரவேலரை அழைத்தான். தேவன் அக்கினியை அனுப்பி, பலியை ஏற்றுக் கொண்டதன் மூலம் பதிலளித்தார் (1 இராஜாக்கள் 18).
தேவன் என்னை அனுப்பும் போது நான் விசுவாசத்துடன் போகிறேனா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்