ஒரு இடத்தில் வீட்டு வேலை செய்யும் பணிப்பெண் தான் ஒரு நாயைப் போல நடத்தப்படுவதாக தன் வேதனையைப் பகிர்ந்து கொண்டார். அந்த வீட்டு எஜமானர் நாய்களுக்கு போடுவதற்காக வாங்கின இறைச்சியை வேலையாட்களுக்கு உணவாகக் கொடுத்தார். எஜமானனுக்கும் அவரின் குடும்பத்திற்கும் எப்போதும் சிறந்த இறைச்சி இருந்தது. வேலையாட்கள் வாய்மொழியாகவும், சரீர ரீதியாகவும், பாலியல் ரீதியாகவும் துஷ்பிரயோகம் செய்யப்படுவதாகவும், சித்திரவதைக்கு உள்ளாக்கப்படுவதாகவும் செய்திகள் உள்ளன. ஆனால் வேதாகமம் அடிமைகளிடம் கூட நாம் எவ்வளவு தாராள மனப்பான்மையோடு இருக்க வேண்டும் என கற்பிக்கிறது; "அவனை விடுதலைபண்ணி அனுப்பிவிடும்போது அவனை வெறுமையாய் அனுப்பிவிடாமல், உன் தேவனாகிய கர்த்தர் உன்னை ஆசீர்வதித்ததின்படி, உன் ஆட்டுமந்தையிலும், உன் களத்திலும், உன் ஆலையிலும் எடுத்து அவனுக்குத் தாராளமாய்க் கொடுத்து அனுப்பிவிடுவாயாக" (உபாகமம் 15:13-14).
அடிமைகள்:
பண்டைய உலகில், அடிமைகள் பொதுவானவர்கள். யோசேப்பு கூட இஸ்மவேலர்களுக்கு / மீதியானியர்களுக்கு அடிமையாக விற்கப்பட்டான், அவனுடைய சகோதரர்கள் அவனை எகிப்திய அதிகாரியான போத்திபாருக்கு விற்றனர் (ஆதியாகமம் 37). எல்லா மனிதர்களுமே தேவ சாயலில் படைக்கப்பட்டவர்கள், ஆக அடிமைகளும் மனிதர்கள் தானே, அவர்களும் சக மனிதர்களாகக் கருதப்பட வேண்டும். எனவே பெருந்தன்மையான மனதை உடையவர்களாய் மகிழ்ச்சியுடன் கடைப்பிடிக்க வேண்டும்.
வெற்று கை:
தேவன் இஸ்ரவேலை எச்சரித்தார், அடிமைகளை வெறுங்கையுடன் அனுப்ப வேண்டாம் என்றும் ஆறு ஆண்டுகள் பணிபுரிந்த அடிமைகள் ஏழாவது ஆண்டில் விடுதலை செய்யவும் அனுமதிக்கப்பட்டனர் (யாத்திராகமம் 21:2; எரேமியா 34:14). ஆறு வருடங்கள் என்பது கணிசமான காலம், அவர்களுடைய சேவைக்குப் பிறகு, பலன்கள், சலுகைகள் மற்றும் போனஸ் இல்லாமல் அவர்களை அனுப்பக்கூடாது. அடிமைகள் மீண்டும் அடிமைத்தனத்தின் கீழ் செல்லாமல் சுயமாக நிலைத்திருக்க வேண்டும் என்பதே இதன் நோக்கம்.
மந்தை:
அடிமை ஆடு மாடுகளை மேய்ப்பவனாக இருந்தால், அவன் விடுதலையடைந்து செல்லும் போது மந்தையிலிருந்து சிலவற்றை தாராளமாக கொடுக்க வேண்டும் அதுவே எதிர்காலத்தில் அடிமையின் வாழ்வாதாரமாக மாறும்.
களத்துமேடு:
அடிமைக்கு அடுத்த சில மாதங்களுக்கு உணவு வழங்கப்பட வேண்டும், அதனால் அவர்கள் தனது வீடு அல்லது வணிகத்தை அமைக்க முடியும். அவர்கள் பட்டினி கிடக்க அனுமதிக்கக் கூடாது.
திராட்சைஆலை:
அவர்களுக்கு உடனடி உணவு வழங்கப்பட வேண்டும் என்றும், மந்தையை வளர்த்து வருங்காலத் தற்காப்புக்காகவும், எஜமானரின் கையிருப்பில் இருந்து திராட்சை ரசம் உண்டு வாழ்க்கையை அனுபவிக்க வேண்டும் என்றும் தேவன் கட்டளையிட்டார். ஆடம்பரத்தை கூட பகிர்ந்து கொள்ள வேண்டும்.
ஆசீர்வாதம்:
இஸ்ரவேலர்கள் அநேகருக்கு ஆசீர்வாதமாக இருக்க ஆசீர்வதிக்கப்பட்டார்கள் என்று கர்த்தர் அவர்களுக்கு நினைவுபடுத்தினார்.
தாராள மனப்பான்மை என்னும் ஆவிக்குரிய ஒழுக்கத்தை நான் சரியாய் கடைப்பிடிக்கிறேனா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்