சொந்தமாக வீடு கட்ட வேண்டும் என்பது பலரின் கனவு. அதற்காக மக்கள் தியாகத்தோடு சேமித்தும் வைக்கிறார்கள். சுவாரஸ்யமாக, கேரளா மாநிலத்தில் உள்ள அநேகர் பலர் வெளிநாடுகளுக்கு குடிபெயர்ந்தனர். தங்களின் பணி காலம் முடிந்தப்பிறகு ஊரில் வந்து ஓய்வெடுக்குமாறு வீட்டைக் கட்ட குடும்பத்தினருக்கு பணம் அனுப்புகிறார்கள். இருப்பினும், அவர்களின் குழந்தைகள் வெளிநாட்டில் வாழ்வதையே தெரிவு செய்கின்றனர். அந்த சூழ்நிலையில் வயதான பெற்றோர்கள் அவர்களுடன் தங்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது அல்லது இந்தியாவுக்குத் திரும்பி வந்து முதியோர் இல்லங்களில் வாழ வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. ஆக கட்டிய மாடமாளிகைகள் (கிட்டத்தட்ட 12 லட்சம்) காலியாக உள்ளன. குறைந்த விலைக்கு கூட வீடுகள் விற்கப்படாமல் வெறுமையாக இருக்கின்றன (டைம்ஸ் ஆஃப் இந்தியா, மே 7, 2023). இப்போது, அவை யாருக்கும் பயன்படாத சொத்துக்கள், உயிரற்றவை. இது ஒரு திறமையான மனிதன் தனது திறமையை மண்ணில் புதைத்து வைப்பது போன்றது (மத்தேயு 25:25).
பூமிக்குரிய கனவு இல்லம்:
பெரும்பாலான மக்கள் சில உடைமைகளைப் பெற வேண்டும், சில அந்தஸ்தைப் பெற வேண்டும், ஒரு தொழிலில் சிறந்து விளங்க வேண்டும், ஒரு மரபை உருவாக்க வேண்டும் அல்லது தன்னைக் குறித்து ஒரு நினைவை வைத்து விட்டு செல்ல வேண்டும் என்று கனவு காண்கிறார்கள். அதற்காக அவர்கள் தங்கள் வாழ்நாள் மற்றும் வளங்கள் அனைத்தையும் முதலீடு செய்கிறார்கள். இறுதியில், ஆசையாக கட்டிய வீடு ஒரு அருங்காட்சியகமோ அல்லது தூசிகளாலும் ஒட்டடைகளாலும் மூடப்பட்டு பிரயோஜனமற்று ‘பாழடைந்த பங்களா’ என்றாகி விடுகிறது. ஒரு பணக்காரன் மகத்தான மகசூலைப் பெற்றபோது, தனது தானிய கிடங்குகளை விரிவுபடுத்தி, பல வருடங்கள் அனுபவிக்கத் திட்டமிட்டான். ஆனால் அந்தோ பாவம், அவன் மரணத்தை எதிர்கொண்டான், மேலும் அவனது சொத்துக்கள் அனைத்தும் அவனோடே மரித்தன என்றே சொல்ல வேண்டும் (லூக்கா 12:16-21). மோசே இந்த உலகத்தின் இன்பங்களை நிராகரித்து, தேவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களுடன் துன்பப்படுவதையே தேர்ந்தெடுத்தார் (எபிரெயர் 11:24-26).
நித்திய கனவு நகரம்:
ஊர் நகரைச் சேர்ந்த ஆபிரகாம், ஆரானுக்கு குடிபெயர்ந்தார், தான் போகின்ற இடம் இன்னதென்று அறியாமலே சென்றார் (ஆதியாகமம் 12:1). அவரும் அவருடைய வழித்தோன்றல்களான ஈசாக்கும் யாக்கோபும் இலக்கில்லாமல் அலைந்து திரிபவர்கள் அல்ல, மாறாக விசுவாசத்தின் யாத்ரீகர்கள். “ஏனெனில், தேவன் தாமே கட்டி உண்டாக்கின அஸ்திபாரங்களுள்ள நகரத்துக்கு அவன் காத்திருந்தான்” (எபிரெயர் 11:10). விசுவாசத்தின் பிதாக்கள் நிரந்தர வீடுகள் வேண்டுமே என்று மாத்திரம் தேடவில்லை, மாறாக தேவனின் நித்திய நகரத்தையே தேடிக்கொண்டிருந்தனர்.
நித்திய கனவு இல்லம்:
கர்த்தராகிய இயேசு கிறிஸ்து உபத்திரவத்தில் இருந்த சீஷர்களை அற்புதமான வாக்குத்தத்ததுடன் ஊக்கப்படுத்தினார். பரலோகத் பிதாவின் வீட்டில் அநேக வாசஸ்தலங்கள் உள்ளன என்றார். கர்த்தராகிய இயேசு தம்முடைய உண்மையுள்ள சீஷர்களுக்காக ஒரு இடத்தை ஆயத்தப்படுத்துகிறார். அந்த வீடுகள் தனிப்பயனாக்கப்பட்ட, சரியான, நிரந்தர, விசாலமான, அழகான மற்றும் மகிழ்ச்சியான குடியிருப்பு இடங்களாக இருக்கும். அவர் தனது மக்களை அங்கு அழைத்துச் செல்வார் (யோவான் 14:1-2). பரலோகத்தில் காலியான வீடுகள் என்று ஒன்று இருக்காது.
எனக்கு நித்திய வீடு இருக்கிறதா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்