நீல வண்ண வானில் முழுநிலா பவனிவரத் தொடங்கியது. நிலவுக் குழந்தையைத் தன் அலைகரத்தால் அணைக்க கடலன்னை துடித்துக் கொண்டிருந்தாள். அந்த அழகிய காட்சியில் தங்கள் கவலைகளை மறக்க, இன்பமாக பொழுதைக் கழிக்க என மெரினாபீச்சில் எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. இக்கூட்டத்தை விட்டு ஒதுங்கி ஒதுக்குப்புறமான இடத்திலே அமர்ந்திருந்த அவனது உள்ளத்தில் கடலலைகளுடன் போட்டியிட்டுக் கொண்டு எண்ண அலைகள் மோதிக் கொண்டிருந்தன. சாதாரணமாக இக்காட்சியைக் கண்டதும் பலநூறு கவிதைகள் எழுதிக் குவித்திருப்பான். ஆனால் இன்றோ துக்க சாகரத்தில் மூழ்கியவனாக அமர்ந்திருந்தான். தான் இந்த உலகில் துன்பம் அனுபவிக்கவென்றே பிறந்தவன்தானோ என்று எண்ணமிட்டுக் கொண்டிருந்தவன்,
“சமாதானம் எங்கே?” துண்டுப் பிரதியைத் தன்முன் நீட்டியவனை நிமிந்து பார்த்தான். திடுக்கிட்டான். பிரதியை நீட்டியவனும் அதிர்ச்சியடைந்தவனாக,
“நீ குட்டிக் கவிஞர் டேவிட் தானே” என வினவினான். தலையை அசைத்தவன், “நீங்கள் பாஸ்கர்குமார் தானே” என கேட்டான்.
“யெஸ் டேவிட்! ஐயாம் வெரி கிளாட் டு மீட் யூ” டேவிட்டை இறுக அணைத்துக்கொண்டான் பாஸ்கர்! இருவர் நினைவுகளும் இருபது ஆண்டுகள் பின்னோக்கிச் சென்றது. இருவரும் உயர்நிலைப் பள்ளியில் இறுதியாண்டு படித்துக் கொண்டிருந்தனர்! பாஸ்கா்..... பெரும் பணக்காரர் பெரியசாமியின் ஏக வாரிசு. அவனைச் சுற்றி எப்போதும் மாணவர் கூட்டம் இருக்கும். கலாட்டா, ஸ்டிரைக் எது நடந்தாலும் அதன் நாயகன் பாஸ்கர்தான். அப்பள்ளிக்கு அவன் தந்தை நன்கொடைகளை அள்ளி வழங்கியுள்ளதால் அவனைக் கண்டிக்க ஆசிரியர்களும் தயங்கினர். அந்த வகுப்பில் மிகச் சின்னவன் டேவிட். ஏழைக் கிறிஸ்தவப் பெற்றோரின் மூத்த மகன். ஏழ்மையில் வாடிய டேவிட் நன்கு படித்தாலும்கூட சக மாணவர்களிடமிருந்து ஒதுங்கியே வாழ்ந்தான்! தன்னைத் தவிர மற்றவர்கள் அனைவருமே செல்வத்தில் புரளுவதாக மயங்கினான். பாஸ்கரின் உணவு, உடை, நண்பாகளுக்கு செலவழிப்பது இதையெல்லாம் கண்ட அவன் பிஞ்சு உள்ளம் ஏங்கியது. மனதின் ஏக்கத்தை யாரிடமும் சொல்ல முடியாதவன், இயற்கை எழிலில் தன் மனதைப் பறிகொடுத்து, அவற்றை எழுத்தில் வடிக்க ஆரம்பித்தான். பாஸ்கருக்கு அவனை அறியாமலேயே டேவிட் மீது இனம் தெரியாத அன்பு இருந்தது. டேவிட்டின் தனிமையைக் கலைத்து அவன் எழுதியவற்றை படிப்பதில் அலாதி இன்பம் கொள்வான் பாஸ்கர்! டேவிட்டுக்கு “குட்டிக் கவிஞா்” என பெயர் சூட்டி அழைத்து வந்தான். பள்ளிப் படிப்பை முடித்த டேவிட் ஓர் அலுவலகத்தில் எழுத்தர் பணியேற்றான். அவன் விரும்பிய வாழ்வு வாழ முடியவில்லை! அவன் உள்ளத்தில் பெரும் பணக்காரணாக வாழ வேண்டும் என்ற விருப்பம் இல்லை. வெறியே ஏற்பட்டுவிட்டது. “இளந்தென்றல்” என பெயர் சூட்டிக் கொண்டு கவிதைகள் எழுதி வந்தான். அவன் கவிதைகளுக்கு நல்ல வரவேற்பு இருந்தது , திரையுலகம் தன் வாயிலை விரிவாக அவனுக்குத் திறந்தது. அவன் எழுதாத பாடல்கள் கொண்ட படமே இல்லை எனலாம்.
மெளனத்தைக் கலைத்தான் பாஸ்கர். “டேவிட் நீ தான் இளந்தென்றல் என்ற திரைப்படக் கவிஞா் எனக் கேள்விப்பட்டேனே உண்மையா?”
“ஆமாம்! பாஸ்கர்” தலையைக் குனிந்து கொண்டான் டேவிட்! அவன் மனசாட்சி அவனைக் குடைந்தது.
“இரு பொருள்பட எழுதப்பட்ட பாடல்களைக் கேட்ட பொழுது அது நீ எழுதியதாக இருக்காது என நம்பினேன்”........ சிறிது நிறுத்தியவன் தொடர்ந்து பேசினான்,
“சிறுவயதிலேயே மிக அழகிய, தரமான கவிதைகளை வடிக்கும் நீ எப்படி இப்படி மாறினாய்? தரமற்ற இப்படிப்பட்ட கவிதைகளை வடிக்க வேண்டுமென்றால்....... ஒன்று! அவன், அதாவது எழுதுபவன் தரமற்றவனாக இருப்பான். யாக்கோபு கூறுகிறார் (யாக். 3:11-13): “அத்திமரம் ஒலிவப் பழங்களையும், திராட்சைச் செடி அத்திப் பழங்களையும் கொடுக்குமா?
அப்படியே உவப்பான நீரூற்று தித்திப்பான ஜலத்தைக் கொடுக்க மாட்டாது” என்று. நம் நாதர் இயேசுவும் (மத்.12:35) “நல்ல மனுஷன் இருதயமாகிய நல்ல பொக்கிஷத்திலிருந்து நல்லவைகளை எடுத்துக் காட்டுகிறான். பொல்லாத மனுஷன் பொல்லாத பொக்கிஷத்திலிருந்து பொல்லாதவைகளை எடுத்துக் காட்டுகிறான்” என்று கூறுகிறார். நீ அத்தகையவன் அல்ல! மற்றொரு காரணம் பண ஆசை! பணத்திற்காக எழுதுவார்கள். நீ...
பாஸ்கரன் பேச்சு டேவிட்டின் மனத்திலிருந்த அணையை உடைத்தது. வெள்ளம் புரண்டது. மனம் விட்டுப் பேச ஆரம்பித்தான்.
“பாஸ்கர்! சிறுவயதிலிருந்தே ஏழ்மையில் வதங்கிய எனக்கு செல்வந்தனாக வாழ வேண்டும் என்ற விருப்பம் ஏற்பட்டது. விளைவு தான் இது பாஸ்கர்! நான் விரும்பிய செல்வம் தேடி வந்தது. நவீன வசதிகள் கொண்ட பங்களா! பஞ்சு மெத்தைப்படுக்கை! பாலும் பழமும் உணவு, காலால் இட்ட வேலையை தலையால் முடிக்கும் வேலையாட்கள்! அழகே உருவான மனைவி! அமுத மொழி பேசும் குழந்தை! இத்தனை இருந்தாலும் நிம்மதி சமாதானம்...... மகிழ்ச்சி இல்லையே! பாஸ்கர்! மகிழ்ச்சியில்லையே!””
“டேவிட்! பண ஆசை எல்லா தீமைக்கும் வேராயிருக்கிறது (1தீமோ.6:10) என்று வேதம் விளம்புகிறது. நம் நாதர் இயேசுவும் “மனுஷன் உலக முழுவதையும் ஆதாயப்படுத்திக் கொண்டாலும் தன்னைத்தான் கெடுத்து நஷ்டப்படுத்தினால் அவனுக்கு லாபம் என்ன?” (லூக்கா 9:25) என்று வினவுகிறார். டேவிட் உன்னை ஒன்று கேட்கிறேன். மறைக்காமல் பதில்
சொல்! உண்மையாக உன்னால் மனம்விட்டு ஜெபிக்க முடிகிறதா? வேதம் வாசிக்க முடிகிறதா?”
“இல்லை! பாஸ்கர்! நான் வேதம் வாசிப்பதோ, ஜெபிப்பதோ இல்லை. அதை செய்வதற்கு நான் அருகதையற்றவன் என்ற எண்ணம் என்னுள் வேரூன்றி விட்டது”
“நீயும் தேவனோடு பேசுவதில்லை ஜெபம். தேவனும் உன்னோட பேச அனுமதிப்பது இல்லை (வேதம் வாசிப்பது). உற்ற நட்பை , பாசமிக்க உறவை துண்டித்துவிட்டு நீ எப்படி நிம்மதியாக இருக்க முடியும்?”
“உண்மை! பாஸ்கர்! உண்மை! ஆனால் கரைபடிந்த என் கரங்களால் எப்படி நான் திருமறையைத் தொட முடியும்? கரம் குவித்து வணங்க முடியும்? "நீதிமான் ஒருவரும் இல்லை” என்றுதான் வேதம் கூறுகிறது. “வருத்தப்பட்டு பாரம் சுமக்கிறவர்களே நீங்கள் எல்லோரும் என்னிடத்தில் வாருங்கள். நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்” என்றுதான் கடவுள் கூறுகிறார். “பாவிகளை இரட்சிக்கவே வந்தேன்.” என்றுதான் பரமன் கூறுகிறார். நீயும் தாவிதைப் போல “நீர் என்னை ஈசோப்பினால் சுத்திகரியும். அப்பொழுது நான் சுத்தமாவேன். என்னைக் கழுவியருளும். அப்பொழுது நான் உறைந்த மழையிலும் வெண்மையாவேன். என்று கதறி உன் கறைபடிந்த கரங்களை கர்த்தரிடம் ஒப்படை! உன் பாவங்களை மன்னிப்பார்! பரம சந்தோஷத்தைத் தருவார்”
டேவிட்டின் அலைபாய்ந்த உள்ளம் அமைதியடைந்தது. “பாஸ்கர்! நீங்கள் எப்படி கிறிஸ்டின் ஆனீர்கள்? இப்பொழுது என்ன செய்கிறீாகள்?”
சவுலை மாற்றிய தேவன் என்னை விட்டு விடுவாரா? நானும் அவா் பிள்ளைதானே! அதையெல்லாம் வீட்டிற்கு வந்து விபரமாக கூறுகிறேன். இப்பொழுது பெங்களூரில் இஞ்ஜினியராக இருக்கிறேன். மாமா வீட்டிற்கு வந்துள்ளோம். சும்மாதானே இருக்கிறோம் என்று டிராக்ட்ஸ் கொடுக்க வந்தேன். ஓய்வு நேரத்தில் கர்த்தருக்கு ஊழியம் செய்வேன்.”
ஆச்சரியமாக பாஸ்கரை நிமிர்ந்து பார்த்தான் டேவிட்! “ஒரு இஞ்ஜினியா் டிராட்க்ஸ் கொடுப்பதா?”
“டேவிட்! தாவீது மகாராஜா காத்தருடைய பெட்டியை தாவீதின் நகரத்திற்குக் கொண்டு வரும்போது கர்த்தருக்கு முன் ஆடிப் பாடினான். அவனை அற்பமாக பேசிய மீகாளிடம் (2சாமு. 6:21,22) “அற்பனும் நீசனுமான என்னைக் கர்த்தார் உயர்த்தினார். நான் ஆடுவேன்” என பதிலுரைத்தான். சீர்கெட்ட என்னை சீர்ப்படுத்தி, நல்ல நிலைக்குக் கொண்டு வந்த என் அப்பன் இயேசுவைப் பற்றி பிறருக்கு எடுத்துரைப்பதில் என்ன வெட்கம்?”
பாஸ்கரின் பேச்சு உண்மையான மனமாற்றத்தை டேவிட்டுக்கு உணர்த்தியது. ஒரு முடிவுக்கு வந்தவனாக உறுதியாகப் பேசினான். “பாஸ்கர்! இந்த கறைபடிந்த கரம் இனி கவிதையே எழுதாது!”
“டேவிட் இப்பொழுதுதான் நீ அதிகத் தவறு செய்கிறாய். (லூக்கா 19:15-27) எஜமான் தன் ஊழியக்காரருக்குத் திரவியங்களைப் பகிர்ந்து கொடுத்து தூரதேசம் சென்று திரும்பி வந்தபோது, தான் கொடுத்ததை வைத்து அதிகம் சம்பாதித்தவனைப் பாராட்டி கனப்படுத்தினான். சீலையிலேயே சுற்றி வைத்தவனை (நிலத்தில் புதைத்து வைத்தவனை) “பொல்லாத சோம்பலுள்ள ஊழியக்காரனே” என இகழ்ந்து, தண்டித்தான் என இயேசு நாதா உவமையாக கூறியுள்ளார். திரவியம் என்பது தேவன் நமக்கு ஈந்துள்ள ஆற்றல்களும் ஆசீர்வாதங்களும்! அதைப் பயன்படுத்தி, அநேக மக்களை அவர் இராஜ்ஜியத்திற்குப் பங்குள்ளவர்களாக மாற்றவேண்டும்! புதைக்கக் கூடாது. மனித மனங்களைக் கெடுத்து சாத்தானின் சேனைக்கு ஆட்சேக்கும் இரு பொருட்பாடல்களை எழுதாதே! இறைப்பற்றையும், நற்குணங்களையும் மக்கள் மனதில் பதியச்செய்யும் நற்கவிதைகளை எழுது. நல்ல இதழ்கள் மூலம் வெளியிடு! உனக்கிருக்கும் செல்வத்தை வைத்து சிறந்த புத்தகங்கள் வெளியிடு! நல்லதொரு இதழ் உன் எஜமானுடைய சந்தோஷத்திற்குள் பிரவேசி” என்ற பரம தகப்பனின் பாராட்டைப் பெற்றுக்கொள்” புன்னகையோடு முடித்தான் பாஸ்கர்!
“பாஸ்கர்! முதலில் வீட்டிற்குப்போய் நம் நாதர் இயேசுவிடம் என் பாவங்களை அறிக்கையிட்டு, மன்னிப்புப் பெற்று என் கறைபடிந்த கரங்களை சுத்தம் செய்ய ஆண்டவரிடம் ஒப்படைப்பேன்! அதன்பின் என் ஆண்டவர் நாம மகிமைக்கென்றே என் கரம் எழுதும்” மகிழ்ச்சியோடு கூறினான் டேவிட்!
“மிக்க மகிழ்ச்சி என் குட்டிக் கவிஞரே” பாஸ்கர் அகமகிழ்ந்தான்.
இருவர் மட்டுமா மகிழ்ந்தனர்! என் அப்பன் இயேசுவோடு வானுலகமும் அல்லவா மகிழ்ந்தது!
இந்த கதை இதயம் தந்த பரிசு என்ற புத்தகத்திலிருந்து Sis. Vanaja Paulraj அவர்களின் அனுமதியுடன் போடப்பட்டுள்ளது.