பத்தாவது கட்டளை பேராசைக்கு எதிரானது (யாத்திராகமம் 20:17). பேராசை என்பது நமக்குச் சம்பந்தமே இல்லாத ஒன்று. இது எதையும் சட்டவிரோதமாக வைத்திருக்கதான் வழிவகுக்கும். ஆகான் கொள்ளையிலே நேர்த்தியான ஒரு பாபிலோனிய சால்வையையும், இருநூறு வெள்ளிச்சேக்கலையும், ஐம்பது சேக்கல் நிறையான ஒரு பொன்பாளத்தையும் கண்டு, அவைகளை இச்சித்து அதைத் தனக்காக எடுத்துக்கொண்டான், அது தேவனுக்கு சொந்தமானது (யோசுவா 7:21). எரிகோ நகரம் அழிவுக்கு விடப்பட்டது, அந்த நகரத்திலிருந்து கொள்ளையடிக்கப்பட்ட அனைத்தையும் திரும்பப் பெறுவது சாபங்களை வருவிக்கும். ஆகான் சபிக்கப்பட்டதோடு மட்டுமல்லாமல், முழு யூத தேசத்தின் மீதும் சாபத்தையும் தோல்வியையும் கொண்டு வந்தான். பேராசை என்பது விக்கிரகாராதனையான பொருளாசை என்று பவுல் எழுதுகிறார் (கொலோசெயர் 3:5).
தன்னை தானே வஞ்சித்தல்:
செல்வமும் ஐசுவரியமும் அன்றாட வாழ்வதற்கு மிக முக்கிய காரணமாக இருக்கலாம். தேவனுடன் சரியான உறவு கொண்டிருப்பதற்குப் பதிலாக, அத்தகைய மக்கள் வாழ்க்கை ஏராளமான செல்வங்களைக் கொண்டது என்று நினைக்கிறார்கள். "பின்பு அவர் அவர்களை நோக்கி: பொருளாசையைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள்; ஏனெனில் ஒருவனுக்கு எவ்வளவு திரளான ஆஸ்தி இருந்தாலும் அது அவனுக்கு ஜீவன் அல்ல என்றார்" (லூக்கா 12:15). ஆகான் முட்டாள்தனமாக செல்வத்தை ஒரு ஆசீர்வாதமாக நினைத்து, தன் வாழ்க்கையின் தரத்தை உயர்த்தி, செழுமையையும் பிரபலத்தையும் கொண்டு வந்தான். துரதிர்ஷ்டவசமாக, அவன் மரண தண்டனையைப் பெற்றான் மற்றும் முழு தேசத்தின் மீதும் ஒரு சாபத்தை கொண்டு வந்தான்.
தன்னை தானே மகிழ்வித்தல்:
ஆவேசத்துடன் செல்வத்தைப் பின்தொடர்பவர்கள் மற்றவர்களுக்கு அநியாயம் செய்வார்கள், ஒடுக்கப்பட்ட மற்றும் பலவீனமானவர்களைச் சுரண்டுவார்கள், ஏழைகளை ஒடுக்குவார்கள். செல்வத்திற்கான இந்த வேட்கை அடக்க முடியாததாகிறது. அவர்கள் தங்களுக்குள் "இன்னும் கொஞ்சம் இருந்தால் நல்லது" என்று சொல்லிக் கொள்கிறார்கள். ஆகான் தன்னைப் பிரியப்படுத்த விரும்பினான் அல்லது பாபிலோனிய மேலங்கி, வெள்ளி மற்றும் தங்கத்தால் தன்னைத் திருப்திப்படுத்த விரும்பினான். ஐயோ, அதே நாட்டமும் ஆசையும் தான் அவனுக்கு மரணத்தை வருவித்தது.
தன்னை தானே அழித்தல்:
செல்வத்தை அல்லது பணத்தை தேர்ந்தெடுப்பது என்பது கிறிஸ்துவை நிராகரிப்பதாகும். ஆகானுக்கு ஒரு சிறந்த மாதிரியாக மோசே இருந்தான். பார்வோனின் மகளின் வளர்ப்பு மகன், எகிப்தின் சரியான வாரிசு மற்றும் செல்வாக்கு மற்றும் செல்வத்தின் வாரிசாக இருந்தபோதிலும், மோசே சுகபோக வாழ்வை, ஐசுவரியத்தை மறுத்துவிட்டான். அவன் தேவ ஜனங்களுடன் துன்பப்படுவதையே தேர்ந்தெடுத்தான். இனிவரும் பலன்மேல் நோக்கமாயிருந்து, எகிப்திலுள்ள பொக்கிஷங்களிலும் கிறிஸ்துவினிமித்தம் வரும் நிந்தையை அதிக பாக்கியமென்று எண்ணினான் (எபிரெயர் 11:24-26). பேராசை என்பது ஒரு ஆவிக்குரிய தற்கொலை போலாகும், அது கிறிஸ்துவை நிராகரிப்பது பரிசுத்த தேவனுடனான நித்திய ஜீவனை நிராகரிப்பதற்கு சமம்.
தன்னை தானே வழிபடுதல்:
பேராசை தன்னை வணங்குவதற்கும், தன்னைப் போற்றுவதற்கும், சுய வழிபாட்டிற்கும் வழிவகுக்கிறது. லூசிபர் தேவனுக்கு உரிய வழிபாட்டை விரும்பினான். அவன் தேவனைப் போல தன்னை ஆராதிக்க வேண்டும் என்று விரும்பினான், எனவே தேவனுக்கு மேலாக தனது சிம்மாசனத்தை உயர்த்த வேண்டும் என்று கனவு கண்டான் (ஏசாயா 14:12). இன்றைய தலைமுறையினர் தங்கள் சரீரத்தை வணங்குகிறார்கள். நம் சரீரம் தேவனின் ஆலயம் என்று வேதாகமம் போதிக்கிறது, ஆனால் பாவிகள் அதை வழிபாட்டின் பொருளாக ஆக்குகிறார்கள்.
செல்வத்தின் மீதான பற்று ஏற்படும் போதெல்லாம் நாம் ஆகார் பள்ளத்தாக்கை நினைவு கூர்வோம் (யோசுவா 7: 20-26).
நான் பேராசையின் சோதனையை வெல்கிறேனா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்