சாத்தான் காரியங்களைத் தனக்கு சாதகமாகப் பயன்படுத்தி மக்களை தன் பக்கம் இழுத்துக் கொள்ள முடியும், ஆகையால் ஒரு விசுவாசி சாத்தானின் உத்திகளைப் பற்றி அறியாமலோ அல்லது அப்பாவியாகவோ இருக்கக்கூடாது; "சாத்தானாலே நாம் மோசம்போகாதபடிக்கு" கவனமாய் இருக்க வேண்டும் என்று பவுல் எச்சரிக்கிறார் (2 கொரிந்தியர் 2:11).
வஞ்சித்தல்:
சாத்தான் ஒரு பொய்யன், அவன் பொய்க்குப் பிதாவுமாய் இருக்கிறான் (யோவான் 8:44). எனவே, அவன் எப்போதும் தவறானவை, பொய், அசத்தியங்கள், அரை உண்மைகள், திரிக்கப்பட்ட உண்மைகள் மற்றும் வேதவசனத்திற்கு தவறான விளக்கங்களை அளித்து ஏமாற்ற பயன்படுத்துவான். சாவே கிடையாது என்று கூறி ஏவாளை ஏமாற்றினான் (ஆதியாகமம் 3:4,5).
சந்தேகித்தல்:
விசுவாசிகளின் உள்ளங்களில் சந்தேகத்தின் விதையை சாத்தான் விதைக்கிறான். ஏதேன் தோட்டத்தில் இருந்த பாம்பு ஏவாளிடம் கேட்டது; தேவன் உண்மையில் சொன்னாரா? பேதுரு தண்ணீரில் நடந்தான், திடீரென சந்தேகம் வந்தது, கர்த்தரால் மீட்கப்பட்டான். அவனது சந்தேகம் மற்றும் பலவீனமான நம்பிக்கைக்காக "அற்ப விசுவாசியே" என்று அவன் கண்டிக்கப்பட்டான் (மத்தேயு 14:31). தேவன் அவர்களை நேசிக்கவில்லை என்று விசுவாசிகளின் காதுகளிலும் சாத்தான் கிசுகிசுக்கிறான். இத்தகைய கிசுகிசுக்களை நம்புவது விசுவாசிகளுக்கு குழப்பத்தையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்துகிறது.
கவனச்சிதறல்:
மனிதர்கள் ஆடுகளைப் போன்றவர்கள் வழிதவறிச் செல்லும் வாய்ப்புகள் உண்டு (ஏசாயா 53:6). முட்களுக்கு நடுவே விதைக்கப்பட்ட விதை உலகத்தின் கவலையாலும் வஞ்சகச் செல்வங்களாலும் திசைதிருப்பப்பட்டதால் பலனைத் தரவில்லை (மத்தேயு 13:22).
மனச்சோர்வடைதல்:
தேவ ஜனங்கள் சில சமயங்களில் சோர்ந்து போவதை சாத்தான் தனக்கு உகந்ததாக பயன்படுத்துகிறான். விசுவாசிகள் விமர்சனங்கள், துன்புறுத்தல், உபத்திரவங்கள் மற்றும் பலனற்ற ஆவிக்குரிய வாழ்க்கை ஆகியவற்றால் ஊக்கம் இழக்கலாம். தொலைதூர இடங்களில் உழைக்கும் பல மிஷனரிகள் சோர்வடைகிறார்கள். பெரிய பாரங்களை தனியாக சுமக்கும் தலைவர்கள் பெரும்பாலும் சோர்வடைவதுண்டு. ஊக்கமின்மையால் முடங்கிய பல நல்ல தலைவர்கள் தங்கள் ஊழியத்தில் சிறந்து விளங்குவதில்லை.
பிரிவினை ஏற்படுத்துதல்:
விசுவாசத்தைப் பிளவுபடுத்துதல், குடும்பத்தைப் பிளவுபடுத்துதல் மற்றும் சமூகங்களில் ஏற்படும் பிளவுகள் என சாத்தான் பிளவுகளை உருவாக்கலாம். முழுமையான விசுவாசம் அவசியமில்லை என்பதாக சாத்தான் விசுவாசியை தன் பக்கம் ஈர்க்கிறான். அவர்கள் தங்களுடைய அனைத்தையும் தேவனுடைய ராஜ்யத்திற்குக் கொடுக்க வேண்டியதில்லை. தேவன் அன்பானவர், எப்போதும் தண்டிக்க மாட்டார் எனப் போன்று களைகளை விதைக்கிறான். தாவீதின் ஜெபமோ "கர்த்தாவே, என் இருதயத்தை ஒருமுகப்படுத்தும்" (சங்கீதம் 86:11) என்கிறது. பெற்றோரிடமிருந்தோ அல்லது உடன்பிறந்தவர்களிடமிருந்தோ வாழ்க்கைத் துணையையோ பிள்ளைகளையோ பிரிப்பதன் மூலமும் சாத்தான் குடும்பத்தில் பிளவைக் கொண்டுவருகிறான். கொரிந்து சபையைப் போலவே, சபைகளும் பிரபலங்கள், ஜாதி, குலம், மொழி அல்லது வர்க்கத்தால் பிரிக்கப்படலாம்.
சாத்தானை தோற்கடித்தல்:
சாத்தான் ஒரு தோற்கடிக்கப்பட்ட பகைவன், சிங்கத்தைப் போல சுற்றித் திரிந்து விழுங்குவதற்கான வாய்ப்பைத் தேடுகிறான். "தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள், விழித்திருங்கள்; ஏனெனில், உங்கள் எதிராளியாகிய பிசாசானவன் கெர்ச்சிக்கிற சிங்கம்போல் எவனை விழுங்கலாமோ என்று வகைதேடிச் சுற்றித்திரிகிறான்" (1 பேதுரு 5:8). "மரணம் நேரிடுகிறதாயிருந்தாலும் அதற்குத் தப்பும்படி தங்கள் ஜீவனையும் பாராமல், ஆட்டுக்குட்டியின் இரத்தத்தினாலும் தங்கள் சாட்சியின் வசனத்தினாலும் அவனை ஜெயித்தார்கள்" (வெளிப்படுத்துதல் 12:11). கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் சாட்சியின் வார்த்தையினாலும் இரத்தத்தினாலும் விசுவாசிகள் அவனை ஜெயிக்க வேண்டும்.
நான் எப்போதும் சாத்தானை மேற்கொள்கிறேனா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்