கர்த்தராகிய இயேசு கிறிஸ்து ஈஸ்ட் (புளிப்பு) பற்றி போதித்தார். ஈஸ்ட் என்பது அசல் பாவத்தை குறிக்கிறது என்று யூத அறிஞர்கள் நம்பினர். செய்தியின் அர்த்தத்தைப் புரிந்துகொள்வதற்குப் பதிலாக, அவர்களின் எண்ணங்கள் பயணத்திற்கு ரொட்டியை பொதி செய்ய மறந்த நிகழ்விற்குச் சென்றன. சீஷர்களின் உணர்வற்ற நிலையை தேவன் கடிந்து கொண்டார் (மாற்கு 8:14-20); அதனைக் காண்போம்.
1) விவாதம்:
அவர்களின் ஆவிக்குரிய பயணத்திற்கு ஆபத்தை விளைவிக்கும் பாவத்தைப் பற்றி கர்த்தர் பேசிக் கொண்டிருக்கும்போது, அவர்கள் ஏன் மறந்துபோன ரொட்டியைப் பற்றி விவாதிக்கிறார்கள் என்றால், இதெல்லாம் ஒரு பெரிய விஷயமாக தெரியவில்லை போலும்; அவர்களின் மனம் ஆவிக்குரிய சொற்பொழிவிலிருந்து திசை திருப்பப்பட்டது. இது எப்படி என்றால் ஜெபம் அல்லது பிரசங்கம் கேட்கும் போது பலரின் மனம் வேறு எங்கேயோ சிந்திப்பது போல் அல்லவா இருக்கிறது.
2) உணர்வில்லை:
சீஷர்கள் தாங்கள் கவனித்ததைப் புரிந்துகொள்ள தங்கள் மனதைப் பயன்படுத்தவில்லை, பக்குவப்படுத்தவில்லை எனலாம்.
3) நிதானிக்கவில்லை:
சீஷர்கள் அர்த்தத்தை மாத்திரம் எடுக்க தவறவில்லை, விளக்கவும், அர்த்தத்தைப் புரிந்துகொள்ளவும் கூட தவறிவிட்டனர். ஆம், அவர்கள் அடையாளங்களை நிதானிக்க முடியாத பரிசேயர்களைப் போல் இருந்தனர் (மத்தேயு 16:3).
4) கடினமான இதயங்கள்:
சீஷர்கள் மிகவும் மந்தமான இதயத்துடன் இருந்தனர், அவர்களின் மனமும் வேலை செய்யவில்லை. ஆண்டவர் மீது அன்பு இல்லாத இருதயம் அல்லது கீழ்ப்படியும் எண்ணம் ஆகியவை கடினப்பட்ட இருதயத்தையும் இருண்ட மனதையும் ஏற்படுத்தும்.
5) செயல்படாத கண்கள் மற்றும் காதுகள்:
அவர்கள் பார்க்கிறார்கள், கேட்கிறார்கள், ஆனால் சர்வசாதாரணமாக நடந்து கொண்டனர், அதன் அர்த்தத்தைப் புரிந்துகொள்வதற்கும் கிரகிப்பதற்கும் எந்த நோக்கமும் இல்லாமல் இருந்ததால் ஆண்டவர் அவர்களைக் கடிந்துகொண்டார். நன்றாக கூர்ந்து கவனிப்பதை விடுத்து கண்டும் காணாமல் இருந்தனர்.
6) நினைவக இழப்பு:
மதிய உணவை மட்டும் மறக்கவில்லை, ஆண்டவரின் அற்புதமான செயல்களையும் அதாவது ஐயாயிரம் பேருக்கு போஷித்ததையும், நாலாயிரம் பேருக்கு போஷித்தது என இரண்டு நிகழ்வுகளையும் மறந்துவிட்டார்கள். அவர்களின் மனம் சட்டென்று செயல்படவும் இல்லை, கடந்த கால போதனை அனுபவங்களை கூட மறந்துவிட்டார்கள்.
7) கூடைகளின் எண்ணிக்கை:
ஐயாயிரம் பேருக்கு உணவளித்தது போக மீதம் எத்தனை கூடைகளைச் சேகரித்தார்கள் என்பதை நினைவுகூரும்படி ஆண்டவர் அவர்களிடம் கேட்டார். அது பன்னிரண்டு என்று சீஷர்கள் தெளிவாக நினைவு கூர்ந்தனர். ஆனால் கர்த்தராகிய ஆண்டவர் பன்னிருவருக்கும் பாடம் கற்பிக்க நினைத்தார், ஆனால் அவர்கள் கற்றுக்கொள்ளவில்லை.
8) இரண்டாவது எண்ணிக்கை:
நான்காயிரத்திற்கு உணவளித்த பிறகு எத்தனை கூடைகளை எடுத்தார்கள் என்று இறைவன் கேட்டார். அதற்கு சீஷர்கள் விரைவாய் ஏழு என்று பதில் சொன்னார்கள். உண்மைகள் நினைவில் உள்ளன, ஆனால் கற்றுக் கொண்ட பாடங்கள் மறந்துவிட்டன.
9) புரிந்து கொள்ளவில்லை:
கேள்விகளை ஆராய்ந்த பிறகு, சீஷர்களால் புரிந்துகொள்ள முடிந்ததா? இன்னும் எத்தனை முறை திரும்ப திரும்ப விளக்கங்களும் தெளிவுபடுத்தல்களும் தேவை?
நான் தேவ காரியங்களை பகுத்தறிந்து, உணர்ந்து, புரிந்து கொள்கிறேனா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்