ஒரு சிலர் மற்றவர்களை குறித்து எதிர்மறையான விஷயங்களைப் பேசுகிறார்கள், காரணமின்றி விமர்சிக்கிறார்கள், மட்டப்படுத்துகிறார்கள், இழிவுபடுத்துகிறார்கள். அத்தகையவர்களுக்கு ஒருவேளை தங்களைக் குறித்து மேன்மையான எண்ணம் இருக்கலாம் அல்லது தாழ்வு மனப்பான்மையாக இருக்கலாம். இப்படி நம்மைச் சுற்றி காணப்படும் சூழ்நிலையை எப்படி எதிர்கொள்வது? அதற்கு பவுலின் பதில்; "கூடுமானால் உங்களாலானமட்டும் எல்லா மனுஷரோடும் சமாதானமாயிருங்கள்" (ரோமர் 12:18) என்பதாகும். நல்ல முயற்சிகள் இருந்தாலும், அத்தகையவர்களின் மனப்பான்மை மாறாது.
விமர்சனம்:
தாவீது விமர்சனத்தை எதிர்கொண்டபோது, அவன் ஒரு சுவாரஸ்யமான ஆனால் ஆரோக்கியமான அணுகுமுறையைக் கொண்டிருந்தான். அதாவது தேவன் யாரையாவது தனக்கு எதிராகப் பேச அனுமதித்திருந்தால், அவனால் தேவனுக்கு எதிராகப் போராட முடியாது (2 சாமுவேல் 16:10) என்பதே. ஆகையால் அமைதியாகவும் தன்னை தானே பரிசோதித்து பார்ப்பவர்களாகவும் இருக்க வேண்டும்.
கருத்து:
மக்கள் எதிர்மறையான கருத்துக்களை பேசும் போது காது கேளாதவர்கள் போல இருப்பது நல்லது. "சொல்லப்படும் எல்லா வார்த்தைகளையும் கவனியாதே; கவனித்தால் உன் வேலைக்காரன் உன்னை நிந்திப்பதைக் கேள்விப்படவேண்டியதாகும்'" (பிரசங்கி 7:21) என்பதே ஞானியின் அறிவுரை. சுவாரஸ்யம் என்னவெனில், எல்லா மனிதர்களுக்கும் இதுபோன்று தங்கள் கருத்துக்களை சொல்லும் பழக்கம் இருப்பதாக அவன் கூறுகிறான். எனவே, மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை நாம் கவனிக்க ஆரம்பித்தால் நம் வீட்டிலுள்ள வேலைக்காரர்கள் பேச்சையும் கவனிக்க வேண்டியிருக்கும்; ஆகையால் எதற்கும் கவலைப்படக்கூடாது.
சாபம்:
சாபங்களுக்கு அஞ்சுபவர்கள் பலர். மதத் தலைவர்கள் அல்லது முதியவர்கள் அல்லது பெற்றோர்கள் போன்று யாராவது சபித்தால், மக்கள் பயப்படுகிறார்கள். "அடைக்கலான் குருவி அலைந்துபோவதுபோலும், தகைவிலான் குருவி பறந்து போவதுபோலும், காரணமில்லாமலிட்ட சாபம் தங்காது" (நீதிமொழிகள் 26:2). ஆம், காரணமில்லாத சாபங்கள் காற்றில் மிதந்து இலக்கைத் தாக்காத வெற்று வார்த்தைகள். தேவ பிள்ளைகள் அமைதியுடன் பொறுமையாக இருக்கும்போது, ஆபிரகாமின் விசுவாச சந்ததியினரை சபிப்பவர்களை தேவன் சபிப்பார் என்ற பாதுகாப்பைப் பெற்றிருக்கிறார்கள். "உன்னை ஆசீர்வதிக்கிறவர்களை ஆசீர்வதிப்பேன், உன்னைச் சபிக்கிறவனைச் சபிப்பேன்; பூமியிலுள்ள வம்சங்களெல்லாம் உனக்குள் ஆசீர்வதிக்கப்படும்" (ஆதியாகமம் 12:3).
மனசாட்சி:
சிலர் எந்த காரணமும் இல்லாமல் பய உணர்வையும் மற்றும் குற்ற உணர்ச்சியையும் சுமக்கிறார்கள். சபிப்பதற்கு அதிகாரமும் சிறப்பு சக்தியும் இருப்பதாக சில ஜனங்கள் நினைக்கிறார்கள், அப்படியிருக்கும்போது தாங்கள் தவறுதலாக ஆவிக்குரிய அல்லது வல்லமையுள்ள ஊழியக்காரர்களை விமர்சிப்பது அவர்களை புண்படுத்தி விடுமோ என்று பயப்படுகிறார்கள் அல்லது குற்றவுணர்வு அடைகிறார்கள்.
உற்சாகம்:
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவைப் பின்பற்றுபவர்கள் பயப்படவோ அல்லது பொய்யான குற்ற உணர்ச்சியால் வேதனைப்படவோ தேவையில்லை. சுய பழி சாத்தானின் பொறி. மாறாக, அவர்கள் கர்த்தரின் இரட்சிப்பு மற்றும் பாதுகாப்பிற்காக அவரில் களிகூர வேண்டும்.
ஆறுதல்:
மக்கள் நோகடிக்கும் போது, துன்புறுத்தும்போது, விமர்சிக்கும்போது, கேலி செய்யும்போது, விசுவாசிகள் எல்லா ஆறுதலையும் தரும் தேவனிடம் சமாதானத்தைத் தேடுகிறார்கள் (2 கொரிந்தியர் 1:3-5). வேதத்தை வாசிப்பது, வார்த்தையை தியானிப்பது மற்றும் அவருடைய வாக்குறுதிகளை புரிந்துகொள்வது ஆறுதலையும் அரவணைப்பையும் தருகிறது.
நான் ஆறுதலுக்காகவும், தேறுதலுக்காகவும் தேவனைத் தேடுகிறேனா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்