கிறிஸ்துமஸ் பரிசு

தேவராஜுக்கு நம்பவே முடியவில்லை. “தன்மகன், தன் மகனா இப்படிக் கேட்கிறான்? இப்படியும் நடக்குமா?” ஒரே அதிர்ச்சி! ஒரே ஆச்சரியம்! எதிரே கல்லில் செதுக்கிய சிலையைப் போல அமர்ந்திருக்கும் தன் மனைவி கிறிஸ்டியைப் பார்த்தார். மெல்ல தன் மகனின் அறையை நோக்கி நடந்தார்.

தேவராஜ் மங்களபுரம் மேல்நிலைப்பள்ளியின் தலைமையாசிரியர். அவ்வூர் சபையின் பொருளாளராக பதவி வகிக்கும் முக்கியஸ்தர். அவருடைய மூத்த மகன் தான் சாம்ஜெபர்ஸன். பொருத்தனைப்படி தன் மகனை குருத்துவப் பணிக்கே அனுப்பி வைத்தார். பக்தியுள்ள ஜெபர்ஸனும் குருவாக பூம்பொழில் கிராமத்தில் பணியாற்றி வருகிறார். திருமறையில் தன் முகம்பட குனிந்திருந்த மகனின் தோளில் மெல்லத்தட்டி வெளியே வந்தார். மூவரூமே அமர்ந்தனர். ஒவ்வொருவர் முகத்திலும் ஏதோ ஒரு ஏக்கம்! எது நடந்தாலும் நிதானத்தை இழக்காத தேவராஜே பேச்சைத் தொடங்கினார்.

தேவராஜ்: “ஜெபா! நீ கேட்ட புத்தாண்டுப் பரிசை நன்கு யோசித்துத்தான் கேட்டாயா? உனக்கு அப்பரிசு கட்டாயம் வேண்டுமா?” 

கிறிஸ்டி: அப்பா, அம்மா விருப்பத்திற்கெதிரா இதுவரை நீ எதுவுமே கேட்டதில்லையேப்பா!

ஜெபர்சன்: அம்மா! இப்பவும் உங்க விருப்பத்திற்கெதிரா நடக்கமாட்டேம்மா! கட்டாயம் எனக்கு வேண்டும் என்று நான் கேட்கவும் இல்லை. மேரியை இதுவரை சந்தித்தோ, பேசியதோ இல்லை. அம்மா நீங்கதான் மேரியை “நல்ல பொண்ணு; அந்தக் காலத்தில் இயேசுஸ்வாமியின் தாய் இப்படித்தான் இருந்திருப்பார்களோ என்று எண்ணும்படி என்ன பணிவு!
அன்பு!” என்றெல்லாம் மேரியைப் புகழ்ந்து  சொல்லியிருக்கீங்க! அப்படிப்பட்டவள் என் இலட்சிய வாழ்க்கைக்கு ஏற்றவளாய் இருப்பாள்னு நான் நம்பறேம்மா.

தேவராஜ்: ஜெபா! மேரி ஒருத்திதான் நல்ல பண்புகளை உடையவள்ன்ணு நினைக்கிறையாப்பா?

கிறிஸ்டி: ஜெபா! உனக்கு நல்லபெண் அமையணும் என்று தானே உறவு, வரதட்சணை எதையுமே பொருட்படுத்தாம தேடிக் கொண்டிருக்கிறோம்.

ஜெபா: அம்மா! அந்தப் பெண் அருகிலேயே இருக்கும்போது எங்கெங்கோ தேடி ஏன் அலையணும்? மேரி! ஏழை உபதேசியார் மகள்னு தயங்குறீங்களாமா?

தேவராஜ்: பணத்துக்கு நான் அடிமையில்லைன்னு உனக்குத் தெரியாதா ஜெபா?
கிறிஸ்டி : ஜெபா! அவ நம்ம குலம் இல்லையேப்பா!

ஜெபா: எதும்மா நம்ம குலம்? மேரியும் கிறிஸ்தவர்கள் தான்! கிறிஸ்தவர்கள் என்ற ஒரே குலந்தாம்மா! இன்று கடவுள் இல்லைண்ணு சொல்றவங்களும் புறமதஸ்தர்களிலும் சிலா் கலப்பு மணத்தை ஆதரிக்கிறார்கள்! ஆனா அன்பின் மார்க்கமாகிய நம்ம கிறிஸ்தவ மார்க்கத்தில் ஏம்மா அதை ஒதுக்கணும்? நம்ம ஆண்டவர் இயேசு தாழ்த்தப்பட்ட சமாரியப் பெண்ணிடம் தண்ணீர் கேட்டு, ஜீவ தண்ணீரைக் கொடுத்தார்! பேதுரு, கொர்நேலியு வீட்டிற்குச் செல்லுமுன் “எந்த மனிதனையும் தீட்டாக எண்ணக் கூடாது” என்பதற்காக தரிசனமும் (அப்.10:15) கொடுத்தார். அவர் வழி செல்ல விரும்பும் நாம் மட்டும் ஏன் ஜாதி பார்க்க வேண்டும்?

தேவராஜ் : ஜெபா! நம்ம வீட்டில் சாதியா பார்க்கிறோம்? எல்லா ஜாதி மதக்காரங்களும் நம்ம வீட்டுக்கு வர்ராங்க. எல்லோருடனும் நன்றாகத்தானே பழகுகிறோம். வேற்றுமையாகவா நடத்துகிறோம்!

ஜெபா: சாதி பார்க்கலண்ணு சொல்ற நீங்க திருமணத்தில் மட்டும் ஏன் ஜாதி பார்க்கணும்?

தேவராஜ் : நீ மட்டும் ஒரே மகனா இருந்தா உன் முடிவை நான் மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்வேன். ஆனா.... உனக்குப் பின்னால் இரு தங்கைகள் இருக்காங்களே ஜெபா!

கிறிஸ்டி : நீ கலப்பு மணம் பண்ணிட்டா, அவர்களுக்கு நம்ம குலத்தில் நல்ல வரன் கிடைக்காதே ஜெபா! அவங்க வாழ்க்கையை நினைத்துப் பார்த்தாயா?

ஜெபா:இன்னும் நம்ம குலம்! நம்ம குலம்ன்னு எதம்மா சொல்றீங்க? அழகும் அறிவும் உடைய என் தங்கைகளுக்கு ஜீஸஸ் நல்ல கிறிஸ்தவ மாப்பிள்ளையாத்தாமா செலக்ட் பண்ணி வைத்திருப்பார்!

தேவ : ஜெபா! நீ பாஸ்டரா இருக்கிற பூம்பொழில் கிராம மக்களைப் பற்றித் தெரியாதா? அங்கு ஸ்கூல்ல வேலைபார்க்க வந்த ஆரோக்கியநாதன் பட்ட கஷ்டம் தெரிந்துமா இந்த முடிவுக்கு வந்த! நீ மேரியை மேரரஜ் பண்ணிட்டுப்போனா என்ன நடக்கும் தெரியுமா? 

ஜெபா: ஊர் கிணற்றில் தண்ணீர் எடுக்க விடமாட்டாங்க! தண்ணீருக்கு 3மைல் போகணும்! கடையில் எதுவும் வாங்க முடியாது! எல்லா காரியத்துக்கும் 18மைல் பஸ்ல வரணும்! வீட்டுக்கு யாரும் வரமாட்டாங்க! எந்த உதவியும் கிடைக்காது?

இவ்வளவுதானப்பா!

“அப்பா! பவுல் எருசலேமுக்குப் போனா அவருக்கு ஆபத்து என்பதையுணர்ந்த தீர்க்கதரிசிகள் அவரைத் தடுத்தபோது, அவர் என்ன சொன்னார் தெரியுமா? “எருசலேமில் நான் கர்த்தராகிய இயேசுவின் நாமத்திற்காக கட்டப்படுவதற்கு மாத்திரமல்ல! மரிப்பதற்கு ஆயத்தமாயிருக்கிறேன்.” (அப்.21:10-14) என்று கூறி புறப்பட்டுச் சென்றார்! (2கொரி 11:22-27)ல் அவர் வாழ்நாள் முழுவதும் அனுபவித்த துன்பங்களில் ஆயிரத்தில் ஒரு பங்காவது நாம் கிறிஸ்துவின் நாம மகிமைக்காக அடைய வேண்டாமா? தன் தாய்நாட்டை மறந்து, தன் தொப்பியில் கூழ் வாங்கிக் குடித்து, சாட்சியாபுரத்தை உருவாக்கிய ராக்லண்ட்துரை, பணம், புகழ், குலப்பெருமை அத்தனையும் துறந்து கிறிஸ்துவுக்காக நாடோடியாய்த் திரிந்த சுந்தர்சிங் இவர்கள் எல்லாம் பட்ட கஷ்டம் நாம் படவில்லை என்றாலும் சிறிதளவாவது இறைவனுக்காக தியாகம் செய்ய வேண்டாமா? ஞாயிறு ஆலயத்திற்குச் சென்று போதிப்பதாலோ போதனையைக் கேட்பதாலோ மட்டும் நாம் கிறிஸ்தவர்களாக மாறிட முடியாதப்பா! கிறிஸ்துவின் போதனைப்படி வாழணும்! அதனால்தான் இயேசுவும், “என் பிதாவின் சித்தப்படி செய்கிறவனே பரலோக இராஜ்யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல், என்னை நோக்கி “கர்த்தாவே” என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை” (மத்.7:21-23) என்று சொன்னாரப்பா! அந்த அருமையான பரலோக இராஜ்யத்துக்குப் பங்குள்ளவனா நான் வாழணுப்பா! ஜாதி வெறிபிடித்த பூம்பொழில் மக்களைத் திருத்தவும் இந்தத் திருமணம் வழிகாட்டும். ஆனா........
“என்னைப் பத்துமாதம் சுமந்து அன்பாலே, பாலூட்டி, தாலாட்டி வளர்த்த என் தாய்மனது புண்படவும், என்னிடத்தில் நல்ல பண்புகள் வளரும்படி என்னைப் பயிற்றுவித்து புனிதப் பணியாற்றும் வண்ணம் என்னை உருவாக்கிய உங்க மனதும் புண்படும்படி உங்களைப் புறக்கணித்து, உங்க விருப்பம் இல்லாம நான் செய்யமாட்டேப்பா!... ஒவ்வொரு ஆண்டும் கிறிஸ்துமஸ் பரிசா நாங்க விரும்புவதை வாங்கித் தருவீங்க! இவ்வாண்டு கிறிஸ்துமஸ் பரிசா இதைக்கேட்டேன். கொடுப்பதும் கொடுக்காததும் உங்களுடைய விருப்பம்பா!” தன்னுடைய எண்ணங்களை சொற்பொழிவாகவே பொழிந்திட்ட ஜெபர்ஸன் எழுந்தார்.

தந்தையின் கண்களிலும், தாயின் கண்களிலும் இரு பனித்துளிகள் தோன்றியிருந்தன. அதில் இறைவன் இயேசுவின் இனிய புன்னகை பிரதிபலித்தது “மகனே! ஜெபா! புதிய சுந்தர்சிங்காக மணம் முடித்த சுந்தர் சிங்காக நீ கடவுள் பணியைச் செய்யப்பா” தாயின் வாயினின்று உணர்ச்சி மிக்க வார்த்தைகள் வெளிவந்தன.

“இவ்வாண்டும் உனக்கு நீ விரும்பிய கிறிஸ்துமஸ் பரிசு உண்டு” தந்தையின் பதில் தனயனை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. நன்றியுடன் இருகரம் குவித்தார் ஜெபா என்ற ஜெபர்ஸன்! ஒளி வீசும் அவர் விழிகள் முன் அருள்நாதர் சிலுவையைச் சுமந்து சென்ற கல்வாரிப் பாதை தெரிந்தது. 

இந்த கதை இதயம் தந்த பரிசு என்ற புத்தகத்திலிருந்து   Sis. Vanaja Paulraj அவர்களின் அனுமதியுடன் போடப்பட்டுள்ளது.



Topics: Tamil Christian Story இதயம் தந்த பரிசு - கதை

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download