கண்ணாமூச்சி விளையாட்டு ஒன்றை குழந்தைகள் விளையாடுவதுண்டு. ஒருவர் தேடுபவராகவும் மற்றும் மற்றவர்கள் மறைந்துக் கொள்ளவும் வேண்டும். ஒரு குறிப்பிட்ட நேரத்திற்குள், தேடுபவர் மறைந்திருப்பவர்களைக் கண்டுபிடிக்க வேண்டும். குழந்தைகள் இந்த விளையாட்டை பல மணிநேரங்களுக்கு உட்புறம் மற்றும் வெளிப்புற விளையாட்டுகளாக விளையாடி மகிழ்கின்றனர். இதில் பெரியவர்கள் கூட தேவனிடமிருந்து மறைந்து இந்த விளையாட்டை விளையாட முயற்சிக்கிறார்கள். ஆனால் தேவன் அன்புடனும், பொறுமையுடனும், இரக்கத்துடனும், கிருபையுடனும், மீட்கும் மனப்பான்மையுடனும் மக்களைத் தேடுகிறார். இறுதியில், மனிதகுலம் மனந்திரும்பத் தவறும்போது, கிருபையின் கதவுகள் மூடப்பட்டு, தேவனின் கோபம் வெளிப்படும்.
பாவம்:
முதல் ஜோடி தேவனின் கட்டளைக்கு கீழ்ப்படியவில்லை, தடை செய்யப்பட்ட மரத்தின் பழங்களை சாப்பிட்டனர். குற்ற உணர்வும், பயமும், அவமானமும் நிறைந்த அவர்கள் தோட்டத்தில் ஒளிந்து கொண்டனர். வழக்கம் போல் தேவன் அவர்களைச் சந்திக்க வந்தபோது அவர்களைக் காணவில்லை. தேவன் ஆதாமையும் ஏவாளையும் அழைத்தார், அவர்களை கண்டித்தார், பின்பு அவர்களுக்கு தோல் ஆடைகளை அணிவித்தார், அது இரத்தப் பலியைக் குறிக்கிறது, மேலும் அவர்களுக்கு மற்றொரு வாழ்க்கையைக் கொடுத்தார், ஆனால் ஏதேனுக்கு வெளியே தான் கிடைத்தது. ஆம், பாவம் எப்போதும் தேவனின் பரிசுத்த பிரசன்னத்திலிருந்து மனிதர்களை விரட்டுகிறது (ஆதியாகமம் 3).
தேவ அழைப்பு:
சவுல் இஸ்ரவேலின் ராஜாவாக தேர்ந்தெடுக்கப்பட்டான். தேவ கட்டளையின்படி சாமுவேல் அவனை அபிஷேகம் செய்தார். ஆனால் முடிசூட்டும் நேரம் வந்தபோது, அவனைக் காணவில்லை. உயரமாக இருப்பதனால் அவனை எளிதில் அடையாளம் கண்டுகொள்ள உதவியிருக்கும். இருப்பினும், தேவ அழைப்பைத் தவிர்ப்பதற்காக அவன் தளவாடங்களில் தன்னை மறைத்துக்கொண்டான் (1 சாமுவேல் 10:21-22).
தேவ பணி:
எலியா தேவ பணியை நிறைவேற்றினார். இஸ்ரவேலின் தேவனை எல்லா தேசங்களுக்கும் உண்மையான தேவன் என்று அக்கினியால் பதிலளித்து நிரூபிக்க தேவன் தன்னை அனுப்பியதாக அவர் தைரியமாக அறிவித்தார். பணி பெரும் வெற்றி பெற்றது; இருப்பினும், எதிர்ப்பு கடுமையாக இருந்தது. எலியாவின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டது, தற்கொலை செய்துகொள்ளும் எண்ணத்தில், ஒரு குகையில் ஒளிந்து கொண்டார் (1 இராஜாக்கள் 19: 9-18). நினிவேக்குச் செல்லாமல் யோனாவும் கப்பலின் கீழ் தளத்தில் ஒளிந்து கொள்ள முயன்றார் (யோனா 1:6-17).
தேவ கோபம்:
பாவிகளும், கீழ்ப்படியாதவர்களும், கலகக்காரர்களும் தப்பி ஓட முயன்றாலும், அவர்கள் தோற்று போவார்கள். தேவனின் தீர்ப்பு அவர்களைப் பிடிக்கும்; இராஜாக்கள், பெரியவர்கள், சேனைத்தலைவர்கள், பணக்காரர்கள், இன்னும் பல மற்றும் அடிமைகள் அல்லது சுதந்திரமான அனைவரும் தேவனின் தீர்ப்பிலிருந்து மறைய முயற்சிப்பார்கள். ஆனால் மனந்திரும்பாத பாவி, நியாயத்தீர்ப்பை நிறைவேற்றும்போது தேவனுக்கு முன்பாக நிற்க முடியாது (வெளிப்படுத்துதல் 6:15-17).
நான் பயந்து வெட்கப்படுகிறேனா அல்லது அவருடைய சமூகத்தில் நீதியுள்ள நபராக நிற்கிறேனா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்