"இதோ, வாசற்படியிலே நின்று தட்டுகிறேன்; ஒருவன் என் சத்தத்தைக்கேட்டு, கதவைத் திறந்தால், அவனிடத்தில் நான் பிரவேசித்து, அவனோடே போஜனம்பண்ணுவேன், அவனும் என்னோடே போஜனம்பண்ணுவான்" (வெளிப்படுத்துதல் 3:20). தேவன் எப்படி நம் கதவைத் தட்டுகிறார், நாம் அதற்கு எப்படி பதிலளிக்கிறோம்? இதற்கான பதிலை சாலொமோனின் உன்னதப்பாட்டு நமக்கு ஒரு மனவெளிச்சத்தைத் தருகிறது (உன்னதப்பாட்டு 5: 3-6).
1) நுழைவு கோருதல்:
மணமகன் மணமகளின் வீட்டிற்கு வருகிறார். உள்ளே வருவதற்காக ஐந்து வழிகளில் முயற்சிக்கிறார். முதலில், கதவை தட்டுவார், மணமகள் அதற்கு பதிலளிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார். இரண்டாவதாக, ‘எனக்கு கதவைத் திற’ என்கிறார். மூன்றாவதாக, மணமகளை "என் சகோதரியே! என் பிரியமே! என் புறாவே! என் உத்தமியே!" என்று அழைக்கிறார். நான்காவதாக, தலைமயிர் பனியினாலும் இரவில் பெய்யும் தூறலினாலும் ஈரமாக இருக்கிறது எனவும், அது தனக்கு அசௌகரியமாக இருப்பதாகவும் முறையிட்டார். ஐந்தாவதாக, அவர் தாழ்ப்பாள் மீது தனது கைகளை வைக்கிறார், ஆனால் வலுக்கட்டாயமாக திறக்கவில்லை.
2) சாக்குபோக்கு:
மணமகள் பதில் சரியானதாக இல்லை. அவள் தூங்கிக் கொண்டிருந்ததாகவும் ஆனால் இதயம் விழித்திருந்தாகவும் கூறுகிறாள். கதவைத் தட்டும் சத்தம் கேட்டதாகவும், மணவாளனின் குரல் கேட்டதாகவும், அவரின் கை கூட கதவின் தாழ்ப்பாள் மீது நீட்டியதாகவும் கூறினாள். முதலில், அவள் இரவு உடையில் இருப்பதாகவும், மாற்றிக்கொண்டு வர முடியாது என்றும் கூறினாள். அதாவது அவள் அவரை மகிழ்விக்க ஆவலாக இருந்தாள் எனறால் அவரைக் காத்திருக்கச் சொல்லிவிட்டு விரைவாக தன்னை சரிபண்ணிக்கொண்டு உடைகளை மாற்றிக் கொண்டு வந்திருக்கலாம். இரண்டாவதாக, அவள் தனது கால்களைக் கழுவிவிட்டதாகவும், தூங்கச் சென்று விட்டதாகவும், மீண்டும் அழுக்காக விரும்பவில்லை என்றும் கூறினாள். அது அவளுடைய சோம்பலைக் காட்டுகிறது. மணமகன் பனியால் நனைந்து அழுக்காகிக் கொண்டிருந்தார்; ஆனால் அவளோ தன் பிரச்சனையை மட்டும் கருத்தில் கொண்டு சுயநலமாக இருந்தாள். மூன்றாவதாக, மணமகனே வாயிற்கதவை தள்ளிக் கொண்டு வருவார் என்று அவள் எதிர்பார்த்தாள். மென்மையான அன்பான தேவனானவர் ஒருபோதும் நம் சுதந்திரத் தெரிவுகளில் உடைத்து மீற மாட்டார்.
3) தவறவிட்டாள்:
அவள் இறுதியாக எழுந்தபோது, அவர் ஏற்கனவே கிளம்பிவிட்டார். அவள் அவரைத் தேடினாள் ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை. அவள் அழைத்தபோது அவரிடமிருந்து எந்த பதிலும் இல்லை. அவள் வாய்ப்பை இழந்தாள். முன்னதாக மணமகன் அழைத்தார், ஆனால் மணமகள் தயாராக இல்லை. மணமகள் தயாரானதும், அவர் கிளம்பிவிட்டார். ஐந்து முட்டாள் கன்னிகளைப் போலவே அவளும் சரியான இடத்தில், சரியான நேரத்தில் இருந்தாள், ஆனால் சரியான அணுகுமுறை மற்றும் ஆயத்தத்துடன் இல்லை (மத்தேயு 25: 1-13). அவர் சொன்ன வார்த்தையால், ‘என் ஆத்துமா சோர்ந்து போயிற்று’ என்றாள் மணமகள். அதாவது அவரின் வருகைக்கு அவள் தயாராக இல்லை.
அவர் வாசற்படியில் நின்று தட்டும்போது நான் மகிழ்ச்சியுடன் அதற்கு பதிலளிக்கிறேனா?
Author : Rev. Dr. J. N. Manokaran