சோதிடர்கள் மற்றும் குறி சொல்பவர்கள்

ஒரு பிரபலமான சோதிடர் (இவருடைய வாடிக்கையாளர்கள் பெரும்பாலும் அரசியல்வாதிகளே) கொரோனா தொற்றுநோய் ஒரு குறிப்பிட்ட நாளில் நின்றுவிடும் என்று அறிவித்தார். கொடுமை என்னவென்றால், அவர் அந்த நாளுக்கு முன்பதாக கொரோனா தொற்றால் இறந்தார். துரதிர்ஷ்டவசமாக, வெகுஜன ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்கள் ஜோதிடம், எண் கணிதம், கிளி ஜோசியம், கைரேகை என இதுபோன்ற இன்னும் பலவற்றை ஊக்குவிக்கின்றன. "குறிசொல்லுகிறவனும், நாள்பார்க்கிறவனும், அஞ்சனம் பார்க்கிறவனும், சூனியக்காரனும், மந்திரவாதியும், சன்னதக்காரனும், மாயவித்தைக்காரனும், செத்தவர்களிடத்தில் குறிகேட்கிறவனும் உங்களுக்குள்ளே இருக்கவேண்டாம்" என மோசேயின் நியாயப்பிரமாணம் தடை செய்கிறது. "அஞ்சனம் பார்க்கிறவர்களை நாடி, குறிசொல்லுகிறவர்களைத் தேடாதிருங்கள்; அவர்களாலே தீட்டுப்படவேண்டாம்; நான் உங்கள் தேவனாகிய கர்த்தர்" (உபாகமம் 18: 10-14; லேவியராகமம் 19:31). அநேக இளைஞர்கள் தினசரி நாட்பலன் ராசிபலன் பற்றி அறிந்து கொள்வதில் என்ன பெரிய தவறு இருக்கிறது என்று நினைக்கிறார்கள். ஆனால் அது  அடிமைத்தனத்தில் சிக்கிக் கொள்வதற்கான சாத்தானின் பொறியாக இருக்கலாம். "பொல்லாங்காய்த் தோன்றுகிற எல்லாவற்றையும் விட்டு விலகுங்கள்" (1 தெசலோனிக்கேயர் 5:22) என்பதாக பவுல் எழுதுகிறார்.

பருவங்களைக் குறிப்பதற்கும், நேரத்தை கணித்துக் கொள்வதற்கும் உதவியாக தேவன் சூரியனையும் சந்திரனையும் படைத்தார் (ஆதியாகமம் 1:14). இந்த வான்கோள்கள்  வழிகாட்டிகளாகவும், குறிகாட்டிகளாகவும் உலகெங்கிலும் உள்ள வழிகளை அதாவது கடல்கள் மற்றும் பாலைவனங்கள் உட்பட சமவெளிகளில் பட்டியலிடவும் பயன்படுத்தப்பட்டால் அவை அறிகுறிகளாகும்;  ஆனால், இவை அனைத்தும் தேவனின் மகிமையை அல்லவா அறிவிக்கின்றன. "வானங்கள் தேவனுடைய மகிமையை வெளிப்படுத்துகிறது, ஆகாயவிரிவு அவருடைய கரங்களின் கிரியையை அறிவிக்கிறது" (சங்கீதம் 19:1). ஆபிரகாமின் சந்ததி வானத்து நட்சத்திரங்களைப் போல எண்ண முடியாதளவு மிகுதியாக இருக்கும் என்று தேவன் வாக்களித்துள்ளார் (ஆதியாகமம் 15:5  நியாயத்தீர்ப்பின் நாளான அந்த கடைசி நாளில் "சூரியனும் சந்திரனும் இருண்டுபோகும், நட்சத்திரங்கள் ஒளிமழுங்கும்" (யோவேல் 3:15) அதாவது நட்சத்திரங்கள் தொடர்பான வானியல் நிகழ்வுகள் நடக்கும் என வேதாகமம் கூறுகிறது (ஏசாயா 13: 9-10; மத்தேயு 24:29).

பல கலாச்சாரங்களில் மனித இலக்கை நிர்ணயிப்பதில் நட்சத்திரங்களின் இருப்புநிலை செல்வாக்கு வகிப்பதாக அனுமானம் உள்ளது. ஜோதிடம் என்பது ஒரு நபர் பிறக்கும் போது நட்சத்திரங்களின் நிலை அல்லது கிரகங்களின் அணிவகுப்பை வைத்து வாழ்க்கையை நிர்ணயிப்பதாகிறது. இந்த பொய்யான போலி மத நடைமுறைகள் என்றுமே ஆபத்தானவை.

முதலில், சோதிட பயிற்சி செய்பவர்கள் கடவுளைத் தவிர மற்ற ஆவிகளால் பாதிக்கப்படும் நிலையில் உள்ளனர்.  இது ஆபத்தானது, ஏனெனில் இதெல்லாம் சாத்தானின் சக்திகளே.

இரண்டாவதாக, வழிகாட்டுதலுக்காக தேவனை நம்புவதற்குப் பதிலாக, விசுவாசிகள் வழிகாட்டுதலுக்காக நம்பமுடியாத ஆதாரங்களைத் தேடுகிறார்கள்.

மூன்றாவதாக, நம் விசுவாசம் கர்த்தரிடமோ அல்லது அவருடைய வார்த்தையிலோ நங்கூரமிடப்படவில்லை.  இஸ்ரவேல்  தேசம் பாவம் செய்தது போல வானத்தின் சர்வ சேனைகளுக்கு சேவை செய்கிறார்கள் (உபாகமம் 4:19). இந்த முட்டாள்தனத்திற்காக தான் கர்த்தர் இஸ்ரவேலை நியாயந்தீர்த்தார் (2 இராஜாக்கள் 17:16).

நான்காவதாக, நாளை என்ன என்பதை யாராலும் கணிக்க முடியாது.  எதிர்காலம் தேவனுடைய கரங்களில் உள்ளது, ஏனெனில் அவரே வருங்காலத்திற்கும் தேவன். "நாளைக்கு நடப்பது உங்களுக்குத் தெரியாதே. உங்கள் ஜீவன் எப்படிப்பட்டது? கொஞ்சக்காலந்தோன்றிப் பின்பு தோன்றாமற்போகிற புகையைப்போலிருக்கிறதே" என்பதாக யாக்கோபு 4:14ல் வாசிக்கிறோமே.

நான் வருங்காலத்திற்கும் தேவனானவரை விசுவாசிக்கிறேனா அல்லது சோதிடத்தை நம்புகிறேனா?

Author : Rev. Dr. J. N. Manokaran


 

 



Topics: Daily Devotions bible study

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download