உடன்படிக்கை மற்றும் ஏமாற்றுதல்

பெரியோர்களால் ஒழுங்கு செய்யப்பட்ட ஒரு திருமணம். மணமகன் வீட்டில் அனைத்து உண்மையான தகவல்களையும் அளிக்கவில்லை.  மணமகனுக்கு தனது சொந்த கிராமத்தில் நிலம் வீடு இருப்பதாக பெண்வீட்டாரும்  நினைத்துக் கொண்டனர்.  மணமகளின் வீட்டார் திருமணத்தை நடத்தி முடித்தனர்.  திருமணம் முடிந்து ஆறு மாதங்களுக்கு பிறகு கணவன் மனைவிக்கு இடையே சண்டை சச்சரவு ஏற்பட ஆரம்பித்தது. கணவருக்கென்று சொந்தமாக உடைமைகள் (சொத்து) எதுவும் இல்லையென்று தெரிந்தது. மனைவி ஏமாற்றப்பட்டதாக உணர்ந்தாள், அது அவளுடைய முழு குடும்பத்தையும் அவமானத்தில் ஆழ்த்துவதற்கான சூழ்ச்சியாக தெரிந்தது. அவளால் தன் கணவனை ஒருபோதும் மன்னிக்க முடியவில்லை. பின்னர், அவர்கள் விவாகரத்தும் செய்து கொண்டனர். வருத்தம் என்னவெனில், ஒரு வழக்கறிஞர் அவளிடம் கணவனின் வீட்டார் ஏமாற்றியதால் திருமண உடன்படிக்கை அர்த்தமற்றது மற்றும் செல்லாது என்று ஆலோசனை அளித்தார்.

மோசடி என்றாலே அது தீங்கானதும் தவறானதும் தான். ஆனாலும், ஒரு உடன்படிக்கையை மீறுவதை ஆதரிக்க முடியாது.  லாபான் ராகேலுக்குப் பதிலாக லேயாளைக் கொடுத்து யாக்கோபை ஏமாற்றினான். அதனால் அந்த திருமணம் 'செல்லாதது' என்று அறிவிப்பது பற்றி அப்போது பேச்சு இல்லை.  ஆம், யாக்கோபின் உள்ளம் காயப்பட்டது என்பதும் உண்மைதான். ஆனாலும் இந்த விசித்திரமான சூழ்நிலைக்கு தன்னை ஒப்புரவாக்கிக் கொண்டான், இரண்டு மனைவிகளையும் மற்றும் குழந்தைகளையும் கவனித்துக்கொண்டான்.  ஆனாலும் யாக்கோபு லேயாளை விட ராகேலை தான் அதிகம் நேசித்தான் என்பதை மறுப்பதற்கும் இல்லை.

கிபியோனியர்கள் தொலைதூர இடத்திலிருந்து வந்த பயணிகளைப் போல நடித்தனர், உணவு பூசனமானது போலவும், உடைகள் செருப்புகள் எல்லாம் தேய்ந்தது போலவும் ஆதாரத்துடன் காட்டி ஏமாற்றினர். யோசுவாவும்  தேவனோடு கலந்தாலோசிக்காமல் யெகோவாவின் பெயரில் சத்தியம் செய்து கிபியோனியர்களுடன் ஒரு சமாதான உடன்படிக்கையை நிறைவேற்றினான். ஆனால் தேவன்  அவர்களுடன் சமாதானம் செய்ய தடை விதித்திருந்ததை, யோசுவா அறியாமலோ அல்லது தெரியாமலோ தவறு இழைத்து விடுகிறான் (உபாகமம் 20: 16-18). அதற்கு பின்னர் தான், கிபியோனியர்கள் அண்டை நாட்டார் என்பதும், தங்கள் தேசத்திலிருந்து நடந்து சென்றால் வெறுமனே மூன்று நாட்கள் தான் ஆகும் என்பதும் தெரிய வருகிறது (யோசுவா 9:17). இந்த உடன்படிக்கை ஏமாற்றப்பட்டு நடந்திருந்தாலும் உடைக்கப்படவில்லை.  நானூறு ஆண்டுகளுக்குப் பிறகு சவுல் ராஜாவான போது இந்த உடன்படிக்கை மீறப்பட்டதால் பஞ்சம் ஏற்பட்டது. பின்னர் கிபியோனியர்களின் வலியுறுத்தலின்படி, தாவீது ராஜாவான போது அதற்கான இழப்பீட்டை திருப்பிச் செலுத்த வேண்டியிருந்தது  (II சாமுவேல் 21: 1-9). மோசடி செய்து உடன்படிக்கை நடந்திருந்தாலும், நானூறு ஆண்டுகளுக்கு பின்பதாகவும் செய்யப்பட்ட உடன்படிக்கைக்கு இஸ்ரவேல் தேசத்தை பொறுப்பேற்க தேவன் வைத்தார்.

எந்தவொரு கூட்டுறவு அல்லது ஒப்பந்தம் அல்லது உடன்படிக்கை மனமார மற்றும் உண்மையான நோக்கத்துடன் செய்யப்பட வேண்டும். அனைத்து தரப்பினரும் அனைத்து தகவல்களையும் பெறுவது அவசியம்.  உடன்படிக்கை முடிந்ததும், ஒருவர் மேல் ஒருவர் பழி போடுவது அல்லது பின்வாங்குவது என இருக்க முடியாது. மாறாக மன்னிப்பும் ஒப்புரவாகுதலும் நடக்க வேண்டும்.

நான் உடன்படிக்கை செய்து கொள்ளும் உறவில் ஈடுபடுவதற்கு முன், முழுமையாக எல்லாவற்றையும் சரிபார்க்கிறேனா?

Author: Rev. Dr. J. N. Manokaran



Topics: Daily Devotions bible study

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download